கவுகாத்தி ஐஐடியில் மேம்பட்ட அம்சங்களுடன் மலிவு விலை செயற்கை கால்களை உருவாக்கி சாதனை!


கவுகாத்தி ஐஐடியில் மேம்பட்ட அம்சங்களுடன் மலிவு விலை செயற்கை கால்களை உருவாக்கி சாதனை!
x

இந்திய தேவைகளான குறுக்குக் கால் போட்டு உட்கார்ந்து சாப்பிடவும், யோகா, உடற்பயிற்சி செய்யவும் போன்ற பல அமசங்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

கவுகாத்தி,

கவுகாத்தி ஐஐடியில் பல்வேறு மேம்பட்ட அம்சங்களுடன், மலிவு விலையில் கிடைக்கக்கூடிய செயற்கை கால்களை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்.

இந்த செயற்கைக்கால் குறித்து ஐஐடி இயந்திரவியல் துறை பேராசிரியர் எஸ் கனகராஜ் கூறுகையில், "எங்கள் குழுவால் உருவாக்கப்பட்ட இந்த முழங்கால் மூட்டு, ஸ்பிரிங் உதவியுடன் கூடிய பொறிமுறையைக் கொண்டுள்ளது.

இந்த செயற்கைக்கால் இந்திய கழிப்பறை அமைப்பில் மாற்றுத்திறனாளிகள் உட்காரவும், மிகவும் சவுகரியமாக பயன்படுத்தவும் உதவுகிறது.

அதில் உள்ள முழங்கால் சுழலும் பொறிமுறையானது, குறுக்கு-கால் போட்டு உட்காரவும் உதவுகிறது. மேலும், அதிலுள்ள (லாக் அமைப்பு) பூட்டுதல் பொறிமுறையானது, மாற்றுத்திறனாளிகள் கீழே விழும் பயத்தை குறைக்க உதவுகிறது. அவர்கள் எல்லா வித நிலப்பரப்பிலும் தைரியமாக நடக்கலாம்.

வெவ்வேறு வயதினருக்கும் ஏற்றாற்போல், செயற்கைக் கால்களின் நீளத்தை அதிகரிக்கவோ குறைக்கவோ கூடிய, பல நிலைகளிலும் சரிசெய்யக்கூடியது இது.குண்டுகுழிகள், பள்ளங்கள் போன்ற இந்திய நிலைமைகளுக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டது இது.

இந்திய தேவைகளான குறுக்குக் கால் போட்டு உட்கார்ந்து சாப்பிடவும், புனர்வாழ்வுக்குப் பயன்படுத்தக்கூடிய யோகா உடற்பயிற்சி செய்யவும் போன்ற பல அமசங்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

தற்போது சந்தைகளில் கிடைக்கும் மேற்கத்திய தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்ட செயற்கைக்கால் தயாரிப்புகள், இந்தியர்களின் தேவைகளை புறக்கணிக்கின்றன. பல அம்சங்கள் அவற்றில் இல்லை. ஆனால், எங்கள் குழு உருவாக்கிய செயற்கைக்கால் முன்மாதிரிகள் தற்போது சோதனையில் உள்ளன. பல சவால்களை எதிர்கொண்டு, ஆராய்ந்து இது வடிமைக்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கான செயற்கைக்கால் இயக்கத்திற்கு மேம்பட்ட அம்சங்களைக் கொண்ட சாதனங்கள் தேவைப்படுகின்றன, இதற்கு நிறைய பணம் செலவாகும். எங்களின் குழுவால் உருவாக்கப்பட்ட செயற்கை கருவி, சர்வதேச தரத்தின்படி சோதிக்கப்படுகிறது மற்றும் 100 கிலோ உடல் எடையை தாங்கும் வகையில் உள்ளது. இந்த செயற்கைக்காலின் விலை ரூ.25,000 என நிர்ணயித்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story