விண்வெளி படிப்பிற்கு வழிகாட்டும் ஐ.ஐ.எஸ்.டி


விண்வெளி படிப்பிற்கு வழிகாட்டும் ஐ.ஐ.எஸ்.டி
x

ஐ.ஐ.எஸ்.டி என்பது இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஸ்பேஸ் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி பல்கலைக்கழகம்.

விண்வெளி ஆராய்ச்சித்துறையில் சாதிக்க வேண்டும், அது குறித்த சிறப்பு கல்வியை படிக்க வேண்டும் என்ற ஆவலில் இருக்கும் பிளஸ்-2 மாணவர்களுக்கு 'ஐ.ஐ.எஸ்.டி.' கல்வி நிறுவனம் தான் சரியான இடம். விண்வெளி மட்டுமல்ல, புவியமைப்பு உள்ளிட்ட துறைகளில் ஆர்வம் உள்ள மாணவர்களுக்கும், இந்த கல்வி நிறுவனம் சிறந்த தேர்வுதான்.

ஐ.ஐ.எஸ்.டி என்பது இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஸ்பேஸ் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி (Indian Institute of Space Science and Technology-IIST) பல்கலைக்கழகம். இது, இந்திய அரசின் விண்வெளி ஆராய்ச்சித்துறையால் நேரடியாக நிர்வகிக்கப்படும் நிகர்நிலை அந்தஸ்து பெற்ற பல்கலைக்கழகமாகும். மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்தான் இந்த பல்கலைக்கழகத்தின் முதல் வேந்தர். இவ்வளவு சிறப்புமிக்க ஐ.ஐ.எஸ்.டி. பல்கலைக்கழகத்தின் கூடுதல் சிறப்புகளை தெரிந்து கொள்வோமா..?

படிப்பு : இங்கு பி.டெக்., ஏரோ ஸ்பேஸ் என்ஜினீயரிங் (B.Tech.,Aero Space Engineering), பி.டெக்., ஏவியானிக்ஸ் (B.Tech., Avionics) ஆகியவை கற்பிக்கப்படுகின்றன. பி.டெக் இளநிலை படிப்புடன், மாஸ்டர் ஆப் சயின்ஸ் அல்லது மாஸ்டர் ஆப் டெக்னாலஜி என இரு படிப்புகளும் ஒரே நேரத்தில் கற்பிக்கப்படுகின்றன.

முதுகலை எம்.டெக் படிப்பு களில், ஏரோடைனமிக்ஸ் அண்ட் பிளைட் மெக்கானிக்ஸ், ஸ்ட்ரக்சர் அண்ட் டிசைன், தெர்மல் அண்ட் புரோபெல்ஷன், கண்ட்ரோல் சிஸ்டம், டிஜிட்டல் சிக்னல் பிராசசிங், மைக்ரோவேவ், மைக்ரோ சிஸ்டம், பவர் எலெக்ட்ரானிக்ஸ், அஸ்ட்ரானமி அண்ட் ஆஸ்ட்ரோபிசிக்ஸ், எர்த் சயின்ஸ், ஜியோ இன்பர்மேடிக்ஸ், ஆப்டிகல் என்ஜினீயரிங், சாலிட் ஸ்டேட் ஆகியவை பயிற்றுவிக்கப்படுகிறது.

கல்வித்தகுதி : இளங்கலை படிப்பில் சேர 12-ம் வகுப்பு தேர்ச்சி போதுமானது. இதில், கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடப்பிரிவுகளை எடுத்து படித் திருக்க வேண்டும்.

நுழைவுத்தேர்வு: ஐ.ஐ.எஸ்.டி. நடத்தும் நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இதுகுறித்த விரிவான விவரங்களை www.iist.ac.in என்ற இணையதள பக்கத்தைப் பார்த்து அறிந்து கொள்ளலாம்.

விண்வெளி படிப்பின் அவசியம் : விண்வெளி அறிவியல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த படிப்பாக உள்ளது. ஒவ்வொரு நாட்டின் அரசாங்கமும் விண்வெளி ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.

விண்வெளி ஆராய்ச்சி நாட்டின் பாதுகாப்புக்கு மட்டுமல்லாது, இயற்கை வளங் களைப் பாதுகாத்தல், காலநிலை மாற்றங்களை முன்கூட்டியே அறிந்து கொள்ளுதல் ஆகியவற்றுக்கும் பயன்படுகிறது. விண்வெளி ஆராய்ச்சித் துறை மூலம் செயற்கை கோள்கள் விண்ணில் ஏவப்பட்டு, வானவெளியில் நிலை நிறுத்தப்பட்டு பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகிறது. இத்துறையில் நல்ல வேலை வாய்ப்புகளும் காத்திருக்கின்றன. அதனால் அது சம்பந்தமான படிப்புகளை மாணவர்கள் தேர்வு செய்து படித்தால் நல்ல எதிர்காலம் உள்ளது.

வேலைவாய்ப்பு : இங்கு இளங்கலை படித்து முடித்த வுடன், எம்.டெக்., எம்.எஸ்., எம்.பி.ஏ., உள்ளிட்ட உயர் கல்வி பயிலலாம். ஐ.ஐ.டி.,க்களைப் போலவே ஐ.ஐ.எஸ்.டி.,யில் படித்தாலும், படிப்பு முடிந்து வெளியேறுவதற்குள்ளாகவே ஏதாவது ஒரு தனியார் துறை அல்லது இந்திய விண்வெளி ஆராய்ச்சித்துறையில் வேலை கிடைக்க வாய்ப்புகள் அதிகமுள்ளது. ஐ.ஐ.எஸ்.டி.யில் படித்த மாணவர்களுக்கு இந்தியா மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் ஏராளமான வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன.

எங்கு இருக்கிறது?

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் ஐ.ஐ.எஸ்.டி. பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இங்கு இளநிலை பட்டப்படிப்பில் 560 மாணவ- மாணவிகளும், முதுநிலையில் 160 மாணவ-மாணவிகளும் படிக்கலாம்.


Next Story