சியாம் சரண் நேகி இந்தியாவின் முதல் வாக்காளர் ஆனது எப்படி?
சியாம் சரண் நேகி, முதல் வாக்கு பதிவு செய்யும் வாய்ப்பு எப்படி கிடைத்தது குறித்து பல பேட்டிகளில் கூறியுள்ளார்.
நாடு சுதந்திரம் பெற்ற பிறகு, முதல் நாடாளுமன்ற தேர்தல் 1952-ம் ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் நடந்தது.
ஆனால் இமாசல பிரதேசத்தில் மட்டும் இந்த மாதங்களில் பனிப்பொழிவு மிக அதிகமாக இருக்கும் என்பதால் முன்கூட்டியே அதாவது 1951-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 25-ந் தேதி அங்கு தேர்தல் நடந்தது.
அந்த தேர்தலில் முதலில் தனது வாக்கினை பதிவு செய்தவர் சியாம் சரண் நேகி (வயது 106). இதனால்தான் அவருக்கு நாட்டின் முதல் வாக்காளர் என்ற பெருமையை தேர்தல் ஆணையம் வழங்கியது.
சியாம் சரண் நேகி, கடந்த 1917-ம் ஆண்டு இமாசல பிரதேசத்தில், கின்னார் மாவட்டத்தில் உள்ள கல்பா என்னும் கிராமத்தில் பிறந்தவர்.
20-வது வயதில் 10-ம் வகுப்பு
இவர் பள்ளிப்படிப்பை தனது 10-வது வயதில்தான் தொடங்கினார். 5-ம் வகுப்பு வரை கல்பா கிராமத்தில் பயின்றார். அதன்பின் 6-ம் வகுப்பை ராம்பூரில் பயின்றார். கல்பா கிராமத்தில் இருந்து ராம்பூர் செல்வதற்கு நீண்ட தூரம் நடந்தே செல்ல வேண்டிய நிலை இருந்தது.
இவர் தனது 20-வது வயதில்தான் 10-ம் வகுப்புக்கு செல்ல இருந்தார்.. ஆனால் வயது ஆகிவிட்டதால் 10-ம் வகுப்பில் அவர் சேர்த்து கொள்ளப்பட வில்லை. எனவே 9-வது வகுப்புடன் தனது படிப்பை நிறுத்தி கொண்டார்.
1940-ம் ஆண்டு முதல் 1946-ம் ஆண்டு வரை சியாம் சரண் நேகி வனத்துறையில் பணியாற்றினார். பின்னர் கல்வித்துறையில் சேர்ந்து தொடக்கப்பள்ளி ஆசிரியராக தான் பயின்ற பள்ளியிலேயே பணியாற்றினார். பின்னர் அதே பள்ளியில் தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்று, 1975-ம் ஆண்டு ஓய்வும் பெற்றார். இவரது மனைவி பெயர் ஹெரோ மானி. இவர்களுக்கு 9 குழந்தைகள் உள்ளனர்.
முதல் வாக்கு
சியாம் சரண் நேகி, முதல் வாக்கு பதிவு செய்யும் வாய்ப்பு எப்படி கிடைத்தது குறித்து பல பேட்டிகளில் கூறியுள்ளார்.
"நான் பணியாற்றிய தொடக்கப்பள்ளியில் வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டு இருந்தது. தேர்தல் பணியாளராக நானும் இருந்தேன். வாக்குப்பதிவு நாளன்று கடும் பனிப்பொழிவு இருந்தது. கிராம மக்கள் வீடுகளில் முடங்கி கிடந்தனர். யாரும் வாக்குச்சாவடி மையத்திற்கு வரவில்லை. எனவே நான் வீடு, வீடாக சென்று மக்களை ஓட்டு போட வருமாறு அழைத்தேன். எனது பேச்சை கேட்டு சிலர் வாக்குச்சாவடி மையத்திற்கு வந்து விட்டனர். அப்போது நான் அங்கு எனது வாக்கினை முதலாவதாக பதிவு செய்தேன்.
சியாம் சரண் நேகி, இது வரை நடந்த 16 நாடாளுமன்ற தேர்தல்கள் மற்றும் சட்டசபை தேர்தல்கள் என மொத்தம் 34 தேர்தல்களில் ஓட்டு போட்டு இருக்கிறார். இறுதியாக அவர், இமாச்சல பிரதேசத்தில் நடந்து வரும் சட்டசபை தேர்தலிலும் கடந்த 2-ந் தேதி தனது வாக்கினை தபால் ஓட்டு மூலம் பதிவு செய்துள்ளார். அன்றைய தினம் இவரது செயல்பாட்டினை பாராட்டி, இளைஞர்களுக்கு சியாம் சரண் நேகி ஒரு ஹிரோவாக திகழ்கிறார் என்று பிரதமர் மோடியும் புகழாரம் சூட்டினார்.
அரசு மரியாதை
சியாம் சரண் நேகியை, கடந்த 2010-ம் ஆண்டு இந்திய தேர்தல் ஆணையராக இருந்த நவீன் சாவ்லா நேரடியாக சென்று பாராட்டினார். மேலும் அவரை தேர்தல் அம்பாசிடராக தேர்தல் ஆணையம் நியமித்தது. 2014-ம் ஆண்டு கூகுள் நிறுவனம், நேகியை பாராட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டது. அந்த வீடியோவை பல லட்சம் பேர் இதுவரை பார்த்து இருக்கிறார்கள். கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்த நேகி நேற்று காலையில் உயிரிழந்தார். அவரது உடல், அரசு மரியாதையுடன் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டது.
'தினத்தந்தி'க்கு பாராட்டு
கடந்த 2014-ம் ஆண்டு மே மாதம் 7-ந் தேதி நடந்த நாடாளுமன்ற தேர்தலில் சியாம் சரண் நேகி, கல்பா வாக்குசாவடி மையத்தில் வாக்களித்தார். அப்போது அவருக்கு வயது 97 ஆகும். அன்றைய தினம், நேகியை தேர்தல் அதிகாரிகள் காரில் வாக்குச்சாவடி மையத்திற்கு அழைத்து வந்து வாக்களிக்க வைத்தனர். அவர் வாக்களிப்பதற்காக வாக்குச்சாவடி மையம் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இந்த தேர்தலையொட்டி அவர் 'தினத்தந்தி'க்கு சிறப்பு பேட்டி அளித்தார்.
அப்போது அவர், உலகின் மிக பழமையான மொழி தமிழ் மொழி என்றும், தினத்தந்தி நாளிதழ் குறித்தும், அதன் தமிழ் சேவை குறித்தும் நான் அறிந்து இருக்கிறேன் என்று பெருமை பொங்க கூறினார். மேலும் அவர், இந்தியில் நமஸ்தே என்று சொல்லுவோம், தமிழில் என்ன சொல்ல வேண்டும்? என்று கேட்டார். அதற்கு வணக்கம் என்று சொன்னதும்,, அவரும் வணக்கம் என்று கூறினார்.
பின்னர் அவர், எப்போதும் தான் அணியும் பராம்பரிய தொப்பிக்கு பதிலாக 'தினத்தந்தி' எழுத்து பொறித்த தொப்பியை அணிந்து மகிழ்ச்சி அடைந்தார். தொடர்ந்து அவர் கூறும் போது, அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும். இது தான் நமது முதல் ஜனநாயக கடமை. நமக்கும், நமது மக்களுக்கு நன்மை செய்பவருக்கு நாம் வாக்களிக்க வேண்டும். வெற்றி பெற்ற வேட்பாளர்கள், பொதுமக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும், என்றும் அவர் கூறினார்.