பண வீக்கத்தை குறைக்க வேறு வழியே இல்லையா?
ரெப்போ வட்டி என்பது ரிசர்வ் வங்கி, வணிக வங்கிகளுக்கு அளிக்கிற கடனுக்கு விதிக்கிற வட்டி விகிதத்தை குறிக்கிறது. பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான நிதி நடவடிக்கைகளில் வரிவிதிப்பு, அரசாங்கச் செலவுகள் மற்றும் பொதுக்கடன்கள் ஆகியவை அடங்கும்.
ரிசர்வ் வங்கி ஒவ்வொரு முறையும் ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்துகிறபோதெல்லாம், தவறாமல் கூறுகிற வார்த்தைகள்- "பணவீக்கத்தை கட்டுப்படுத்தத்தான் இந்த வட்டி உயர்வு!" என்பதுதான். பணவீக்கத்தை சாமானியர்கள் பேச்சுமொழியில் சொல்வதென்றால் அது- விலைவாசி உயர்வை குறிக்கிறது.
ரெப்போ வட்டி விகித உயர்வு
இந்த முறையும் ரெப்போ வட்டி விகிதத்தை 6.25 சதவீதத்தில் இருந்து 6.50 சதவீதமாக, 0.25 சதவீத அளவுக்கு உயர்த்தியபோது ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்ததாஸ் வழக்கம்போல அதே வார்த்தைகளைத்தான் கூறி இருக்கிறார். இப்படி சொல்லிச்சொல்லியே கடந்த ஆண்டு மே மாதம் தொடங்கி தொடர்ச்சியாக 6 முறை ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தி இருக்கிறார்கள். அதுவும் மே மாதத்தில் 0.40 சதவீதம், ஜூன், ஆகஸ்டு, செப்டம்பர், டிசம்பர் என தொடர்ச்சியாக 4 முறை 0.50 சதவீதம் ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி உயர்த்தி இருக்கிறது.
ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்துகிறபோது, நமக்கென்ன வந்தது என சாமானிய மக்கள் இருந்து விட முடியாது. ரெப்போ வட்டி என்பது ரிசர்வ் வங்கி, வணிக வங்கிகளுக்கு அளிக்கிற கடனுக்கு விதிக்கிற வட்டி விகிதத்தை குறிக்கிறது.
சரி, வணிக வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கிற கடனுக்கு வட்டி விகிதத்தை உயர்த்துகிறது. இதில் நமக்கென்ன வந்தது என்று கேட்கிறீர்களா? விஷயம் இருக்கிறது.
அல்லாடும் மாதச்சம்பளதாரர்கள்...
ரிசர்வ் வங்கி, வணிக வங்கிகளுக்கான கடன் வட்டி விகிதத்தை உயர்த்துகிறபோது, அந்த வட்டிச்சுமையை வணிக வங்கிகள் அப்படியே நம் மீது, அதாவது மக்கள் தலையில்தான் சுமத்துகின்றன. இதனால் ரிசர்வ் வங்கி, ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்துகிறபோதெல்லாம், பொதுமக்களுக்கு வங்கிகள் அளித்துள்ள அல்லது அளிக்கிற வீட்டுக்கடன், வாகனக்கடன், தனிநபர் கடன் என எல்லா கடன்களுக்குமான வட்டிவிகிதத்தையும் உயர்த்துகின்றன. இதனால் மாதம்தோறும் கடனாளிகள் செலுத்துகிற தவணைத்தொகை உயரும்.
சாமானிய மக்கள் குறிப்பாக பட்ஜெட் போட்டு குடும்பம் நடத்துகிற மாதச்சம்பளதாரர்கள், இப்படி தவணைத்தொகை உயருகிறபோதெல்லாம், குடும்ப பட்ஜெட் எகிறுவதால் அல்லாடுகிறார்கள். மேலும் மேலும் கடன்வாங்குகிற நிலைக்கு அவர்கள் தள்ளப்படுகிறார்கள்.
இதற்கும், அதற்கும் என்ன தொடர்பு?
ரெப்போ விகிதத்தை ரிசர்வ் வங்கி உயர்த்துவதற்கும், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்ற கேள்வி சாமானிய மக்களின் மனங்களில் எழுவது இயல்பு. பொதுவாக ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தினால், பண வீக்கம் கட்டுப்படும் என்பது பொருளாதார கோட்பாடு என்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.
ரெப்போ வட்டி விகிதம் உயர்வாக இருக்கிறபோது, ரிசர்வ் வங்கியிடம் இருந்து வங்கிகள் கடன் வாங்குவதை குறைத்துக்கொள்ளும். இப்படி ரிசர்வ் வங்கியிடம் கடன் வாங்குவதை வங்கிகள் குறைத்துக்கொள்வதால், வங்கிகள் கைவசம் இருக்கிற பணம் குறையும்.
இதனால் பொதுமக்களுக்கு அள்ளி அள்ளித்தருவதற்கு வங்கிகளிடம் பணமும் இருக்காது. வங்கிகளிடம் பொதுமக்கள் கடன் பெறுவது குறையும். இதன் காரணமாக பொதுமக்கள் பொருட்களை வாங்குவதையும், சேவைகள் பெறுவதையும் தாமாக குறைத்துக்கொள்வார்கள். எந்தவொரு பொருளுக்கும் அல்லது சேவைக்கும் உரித்தான விலை குறையத்தொடங்கும். இப்படி அவற்றின் விலை குறைந்து பணவீக்கம் குறையும்.
ஆதாரம் உண்டா?
ரெப்போ வட்டி விகிதம் உயர்கிறபோது, பண வீக்கம் சற்றே குறைகிறது என்பதற்கு என்ன ஆதாரம் என்று கேட்பீர்கள்?
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பணவீக்க விகிதம், 7.80 சதவீதம். மே மாதத்தில் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியபிறகு, அந்த மாத பணவீக்க விகிதம் 7 சதவீதமாக குறைந்தது. ஜூன் மாதமும் 7 சதவீதமே நீடித்தது. ஜூலை மாதம் அது 6.7 சதவீதமாக குறைந்தது. ஆகஸ்டு மாதம் அது மீண்டும் எகிறி 7 சதவீதமானது. செப்டம்பரில் அது 7.4 சதவீதமாக உயர்ந்தது. ஆகஸ்டு, செப்டம்பரில் அடுத்தடுத்து ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியதால் அக்டோபரில் பணவீக்க விகிதம் 6.8 சதவீதமாக குறைந்தது. நவம்பரில் மேலும் குறைந்து 5.9 சதவீதம் ஆனது. டிசம்பரில் மீண்டும் ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியபோது அந்த மாதத்தில் பண வீக்க விகிதம் 5.7 சதவீதமாக வீழ்ந்தது. (2022-ம் ஆண்டில் ஆண்டு பணவீக்க விகிதம் 6.7 சதவீதமாக இருந்தது. 2021-ம் ஆண்டில் இது 5.1 சதவீதமாக இருந்தது). ஆக ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்துகிறபோது பண வீக்கம் சற்றே குறையத்தான் செய்கிறது.
இது ஒன்றுதான் வழியா?
அடுத்து எழும் கேள்வி, பண வீக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு, ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்துவது ஒன்றுதான் வழியா என்பதாகும். பொதுவாகவே பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு 2 முக்கிய வழிகள்தான் இருக்கின்றன.
1. பணக்கொள்கை நடவடிக்கைகள்.
2. நிதி நடவடிக்கைகள்.
மூன்று அடிப்படை அம்சங்கள்
பணக்கொள்கை நடவடிக்கைதான் பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான மிக முக்கியமான முறையாக இருக்கிறது. இதுதான் ரிசர்வ் வங்கியின் பணக்கொள்கையும் ஆகும். இதன்கீழ்தான் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்துகிறது. இதுதான் பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான பாரம்பரிய வழியும் ஆகும்.
பணக்கொள்கை நடவடிக்கை 3 அடிப்படை அம்சங்களைக் கொண்டிருக்கிறது.
1. வங்கி வட்டி விகிதக்கொள்கை.
2. பண இருப்பு விகிதம்
3. திறந்த சந்தை செயல்பாடுகள்
* வங்கி வட்டி விகிதக்கொள்கைதான், பணவீக்க காலத்தில் பணக்கட்டுப்பாட்டின் முக்கிய கருவியாக பயன்படுத்தப்படுகிறது. இதன்படி ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்படுகிறது. வணிக வங்கிகள் வட்டி உயர்வு காரணமாக ரிசர்வ் வங்கியிடம் இருந்து கடன் வாங்குவதை குறைத்துக்கொள்கின்றன. இதனால் பொதுமக்களுக்கு வங்கிகளிடம் இருந்து பணம் செல்வது குறைகிறது. இதனால் மக்கள் பொருட்களுக்காக, சேவைகளுக்காக பணம் செலவிடுவது குறைகிறது. சங்கிலித்தொடர் நடவடிக்கை போல அடுத்து விலைவாசி குறைகிறது.
* பணக்கொள்கை நடவடிக்கையில் அடுத்த அம்சம், பண இருப்பு விகிதம். இது சி.ஆர்.ஆர். என அழைக்கப்படுகிறது. பண வீக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு ரிசர்வ் வங்கி இந்த பண இருப்பு விகிதத்தை உயர்த்துகிறது. இதனால் வணிக வங்கிகளின் கடன் வழங்கும் திறன் குறையும். இது பொதுமக்கள் கைகளில் பணப்புழக்கத்தை குறைக்கிறது. இது பொதுமக்களுக்கு கடன்களால் உயர்கிற விலைவாசி உயர்வை தடுத்து நிறுத்துகிறது.
* பணக்கொள்கை நடவடிக்கையில் அடுத்த முக்கிய அம்சம், திறந்த சந்தை செயல்பாடுகள். இது, அரசின் கடன் பத்திரங்களின் கொள்முதல் மற்றும் விற்பனையைக் குறிக்கிறது. பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசானது, ரிசர்வ் வங்கி மூலமாக கடன் பத்திரங்களை பொதுமக்களுக்கு விற்கிறது. இது வங்கி வைப்புத்தொகையின் ஒரு பகுதியை ரிசர்வ் வங்கி கணக்குக்கு மாற்றுகிறது. இது வணிக வங்கிகளின் கடன் உருவாக்கும் திறனையும் குறைக்கிறது.
நிதி நடவடிக்கைகள்
பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான அடுத்த முக்கிய வழி- நிதி நடவடிக்கைகள். பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான நிதி நடவடிக்கைகளில் வரிவிதிப்பு, அரசாங்கச் செலவுகள் மற்றும் பொதுக்கடன்கள் ஆகியவை அடங்கும்.
அரசாங்கம் சில பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கலாம். அதாவது, உள்நாட்டு பயன்பாட்டுக்கு ஆதரவாக பருப்பு வகைகள், தானியங்கள் மற்றும் சமையல் எண்ணெய் வகைகள் போன்ற அத்தியாவசிய பொருட்களின் ஏற்றுமதியை தடை செய்தல் அல்லது அதில் கட்டுப்பாடுகளை விதித்தல், இறக்குமதி பொருட்களின் மீதான வரிகளை குறைத்து இறக்குமதியை ஊக்குவித்தல் போன்றவை அடங்கும்.
ரிசர்வ் வங்கி செய்யுமா?
எனவே ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை கூட்டி, பண வீக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையையே தொடர்கதை போல தொடர்வதை கொஞ்சம் குறைத்துக்கொண்டு, பண இருப்பு விகிதத்தை உயர்த்தலாம்.
மத்திய அரசும் பண வீக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான நிதி நடவடிக்கைகளை எடுக்கலாம். அத்தியாவசிய பருப்பு வகைகள், உணவு தானியங்கள், சமையல் எண்ணெய் வகைகள் போன்ற அத்தியாவசிய பொருட்களின் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தலாம், இறக்குமதி பொருட்கள் மீதான வரிகளைக் குறைக்கலாம்.
ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்துவதால் இன்னுமொரு சிக்கல் இருக்கிறது. பொதுமக்கள், வங்கிகளிடம் இருந்து வாங்குகிற கடன்கள் குறைந்துவிட்டால், பொதுமக்கள் பொருட்கள், சேவைகள் வாங்குவதை குறைத்துக்கொள்ளத்தொடங்குவார்கள். இதனால் அரசின் வரி வருமானம், குறிப்பாக இப்போது பண மழையாக கொட்டிக்கொண்டிருக்கிற ஜி.எஸ்.டி. என்னும் சரக்கு சேவை வரி வரவு மாதத்துக்கு மாதம் உயராது. குறையவும் வாய்ப்பு உண்டு. உற்பத்திப்பொருட்கள் விற்பனை ஆகாமல் தேங்கும். அடுத்து உற்பத்தி குறையும். இது ஒரு கட்டத்தில் பொருளாதார சீரழிவுக்கு வழி வகுத்து விடும் அபாயமும் இருக்கிறது.
எனவே பாம்பையும் அடித்துக்கொல்ல வேண்டும், கம்பும் உடைந்து விடக்கூடாது என்பது போல பண வீக்கத்தை அதாவது விலைவாசி உயர்வை ரிசர்வ் வங்கியும், மத்திய அரசும் இரட்டைக்குழல் துப்பாக்கியாக இணைந்து செயல்பட்டு கட்டுப்படுத்தியே ஆக வேண்டும். அதுதான் ஆரோக்கியமான பொருளாதாரத்துக்கு அழகு சேர்க்கும்.