வலி இல்லாத வாழ்க்கைக்கு வழிகாட்டுபவர்கள்...!


வலி இல்லாத வாழ்க்கைக்கு வழிகாட்டுபவர்கள்...!
x

‘‘இந்த உலகில் பலரும் வலி-வேதனைகளோடு துடித்துக்கொண்டிருக்கிறார்கள். விபத்தில் சிக்கியவர்களில் தொடங்கி, புற்றுநோய் போன்ற கொடிய நோய்க்கு சிகிச்சை பெறுபவர்கள் வரை வலி-வேதனைகளை தாங்கிக்கொண்டிருக்கிறார்கள்.

சாதாரண மக்கள், இவர்களது வலியை போக்க ஆறுதல் வார்த்தைகள் கூறுவது உண்டு. ஆனால் மருத்துவர்களாகிய எங்களால் ஆக்கப்பூர்வமாக என்ன செய்ய முடியும் என்ற சிந்தனையில்தான், வலி-வேதனைகளை குணப்படுத்தும் அமைப்பை உருவாக்கினோம்.

நாங்கள் வலி-வேதனையில் அவதிப்படுபவர்களை, அதிலிருந்து மீட்டெடுக்கிறோம். உடல் வலி மட்டுமின்றி, இறுதி நாட்களை எண்ணி, மன வேதனைப்படுபவர்களையும் உளவியல் நிபுணர்களை கொண்டு உற்சாகப்படுத்துகிறோம்'' என்ற முதல் கருத்திலேயே கவனம் ஈர்க்கிறார், மல்லிகா திருவதனன்.

சென்னையை சேர்ந்தவரான இவர் மருத்துவர், மயக்கவியல் நிபுணர். தன்னைப்போலவே, ஒரே சிந்தனையில் உழன்றுக்கொண்டிருந்த தயாளன், அம்ரிதா மற்றும் சங்கீதா ஆகிய மருத்துவர்களை ஒரே குழுவாக கட்டமைத்து, கடந்த 22 வருடங் களாக வலிக்கு நிவாரணம் கொடுக்கிறார். வலிகளில் இருந்து மக்களை மீட்க இவர்கள் அடிக்கடி, சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி களையும் நடத்துவது உண்டு. சமீபத்தில்கூட, வலிக்கு எதிரான பேரணியை, சென்னை பெசன்ட் நகரில் நடத்தி, பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தனர்.

``நான் மயக்கவியல் நிபுணர் என்பதால், நோயாளிகளின் வலி-வேதனைகளை உணர முடிந்தது. மேலும் என் தந்தையின் முதுகுவலி சிகிச்சைக்காக கோழிக்கோட்டில் ஒரு மருத்துவ மனையில் தங்கியிருந்தபோது, அந்த மருத்துவமனையின் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவைப் பார்த்தேன். அங்கு சிகிச்சைக்குப் பிறகு உடல்வலி, மனவலியோடு படுக்கையில் கிடந்தவர்களின் வேதனை என் தூக்கத்தை தொலைக்க வைத்தது. அதுவே இந்த வலி-வேதனைகளை குணமாக்கும் அமைப்பை உருவாக்க வழிவகுத்தது'' என்றவர், அன்றிலிருந்து இன்று வரை உடல்-மன வலிகளோடு தன்னை நாடி வருபவர்களுக்கு இலவச சிகிச்சை வழங்கி, அதிலிருந்து விடுபட உதவுகிறார்.

''வலி என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. குறிப்பாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, அதற்கு சிகிச்சை பெறுபவர்களின் வாழ்க்கை வலி-வேதனைகளால் நிரம்பி இருக்கும். அதனால்தான், எங்களது கவனம் அவர்கள் மீது அதிகமாக இருக்கிறது.

சிகிச்சைகள் மூலமாக அவர்களது உடல் ரணமாவதுடன், மேல் சிகிச்சைக்கு பணம் தேவைப்படுமே என்ற பயமும் அவர்களது மனதை ரணமாக்கும். சிலர் வாழ்க்கையின் இறுதிநாட்களை கூட, இதுபோன்ற உடல்-உள்ள வலிகளோடுதான் கடந்து செல்கிறார்கள். அதனால்தான், புற்றுநோய் பாதிப்பு உட்பட வலி மிகுந்த நோய்களுக்கு எங்களால் முடிந்தவரை, இலவச சிகிச்சை வழங்குகிறோம். இதற்காகவே மாத்யூ, விஜயலட்சுமி மற்றும் கீதா ஆகியோரை கொண்டு பிரத்யேக மருத்துவ குழுவை உருவாக்கி, மருத்துவமனையிலும், வீடுகளுக்கும் சென்று இலவச சிகிச்சை கொடுக்கிறோம்'' என்றவர், மார்பக புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் பெண்களின் நலனிலும் தனிகவனம் செலுத்துகிறார்.

''புற்றுநோய் மட்டுமல்ல, நாள்பட்ட நோய்கள் போன்ற வலி அதிகம் இருக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குகிறோம். மக்களின் வாழ்வை மேம்படுத்துவதுதான் எங்கள் அமைப்பின் நோக்கம். அதற்காகவே உழைத்துக்கொண்டிருக்கிறோம்'' என்று அழுத்தம் திருத்தமாக பேசினார், தயாளன். அமைப்பின் முக்கிய செயல்பாடுகளில் அங்கம் வகிக்கும் இவர், எதிர்கால திட்டம் குறித்தும் பேசினார்.

''புற்றுநோய் பாதிப்பின் இறுதி கட்டத்தில் இருப்பவர்கள், நிம்மதியாக வாழ்வதற்கு ஏற்ப பிரத்யேக இடத்தை கட்டமைப்பதுதான் எங்களுடைய நோக்கம். அதில் மருத்துவம் தொடங்கி உணவு வரை எல்லாவற்றையும் இலவசமாக வழங்கி, அவர்களை எந்தவித கவலையும் இன்றி, மகிழ்ச்சியாக வழியனுப்பி வைக்க ஆசைப்படுகிறோம். இதை நோக்கியே, நாங்கள் பயணிக்கிறோம்'' என்று விடைபெற்றார்.


Next Story