விசா இல்லாமல் பயணம் செய்ய அனுமதிக்கும் தீவு நாடுகள்


விசா இல்லாமல் பயணம் செய்ய அனுமதிக்கும் தீவு நாடுகள்
x

இந்திய பாஸ்போர்ட் இருந்தாலே போதும். விசா இல்லாமல் அனுமதிக்கும் சில நாடுகளின் பட்டியல் உங்கள் பார்வைக்கு...

வெளிநாட்டுக்கு செல்ல வேண்டுமானால் இந்திய பாஸ்போர்ட்டுடன், அந்த நாட்டு விசாவையும் விண்ணப்பித்து பெற்றிருக்க வேண்டும். வணிக ரீதியாகவோ, வேலை ரீதியாகவோ அல்லாமல் சுற்றுலா செல்ல திட்டமிட்டால் கூட சுற்றுலா விசா வைத்திருக்க வேண்டும். ஒரு சில நாடுகள் அங்கு சென்றபிறகு விசா பெறுவதற்கு அனுமதிக்கின்றன.

குக் தீவுகள்

15 தீவுக்கூட்டங்களுடன் தென் பசிபிக் பெருங்கடலில் அமைந்திருக்கும் குட்டி நாடு இது. வெள்ளை மணல் பரந்து விரிந்திருக்கும் கடற்கரையின் அழகும், நீல நிறத்தில் காட்சி அளிக்கும் நீர் நிலைகளின் வசீகரமும் கண்களுக்கு விருந்து படைக்கும்.

இந்த தீவு கூட்டங்களில் ரரோடோங்கா தீவுதான் மிகப்பெரியது. நீல நிறத்தில் சூழ்ந்திருக்கும் கடல் நீர், பளிச்சென்று மின்னும் கடற்கரை, அதனையொட்டி கரடுமுரடாக காட்சி அளிக்கும் மலைகள், அதற்கு பசுமை சேர்க்கும் மரங்கள், செடி, கொடிகள் என அனைத்து நிலப்பரப்புகளும் ஒருங்கே அமையப்பெற்ற தீவு கூட்டமாக விளங்குகிறது. டைவிங், சர்ப்பிங் போன்ற சாகச நீர் விளையாட்டுகளையும் இங்கு அனுபவிக்க முடியும். இந்திய பாஸ்போர்ட் இருந்தால் குக் தீவுகளில் ஒரு மாதம் தங்குவதற்கு அனுமதி உண்டு.

மொரீஷியஸ்

இந்தியப் பெருங்கடலால் சூழப்பட்ட, மொரீஷியஸ் தீவை சூழ்ந்திருக்கும் கடற்கரைகள், மணல் திட்டுகள், அடர்த்தியான மற்றும் பசுமையான காடுகள், தேயிலைத் தோட்டங்கள், நீர்வீழ்ச்சிகள், எரிமலைகள் போன்றவை சொர்க்கபுரியாக உருமாற்றுகின்றன.

மாறுபட்ட சுற்றுச்சூழல் கட்டமைப்பை கொண்டிருக்கும் மொரீஷியஸ், இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களை மூன்று மாத காலம் வரை தங்க அனுமதிக்கிறது.

பாலி

இந்தோனேஷியாவில் அமைந்திருக்கும் பாலி தீவுக்கு இந்தியர்கள் விசா இல்லாமல் செல்லலாம். அங்கு ஒரு மாதம் வரை தங்கி இருக்க அனுமதி உண்டு. தேனிலவு கொண்டாடும் தம்பதியருக்கு ஏற்ற இடமாக பாலி தீவு உள்ளது. கடவுள்களின் நிலம் என்றும் அழைக்கப்படும் இந்த தீவில் இயற்கை அழகு கொட்டிக்கிடக்கிறது.

அமைதியான சூழலும், அங்கு நிலவும் இதமான கால நிலையும் சிறந்த சுற்றுலா தலத்திற்கான அந்தஸ்தை பெற்றுக்கொடுத்துள்ளது. நீர் சாகச விளையாட்டுகளில் ஈடுபடுபவர்கள் பயிற்சி பெறுவதற்கு ஏற்ற கடற் தீவாகவும் உள்ளது.

17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தீவுகளுடன் உருவாக்கப்பட்ட தென்கிழக்கு ஆசிய நாடாக விளங்கும் இந்தோனேஷியாவில் மாறுபட்ட கலாசாரங்கள், பழக்கவழக்கங்கள் பின்பற்றப்படுகின்றன.

பிஜி

தென் பசிபிக் பகுதியில் உள்ள தீவு நாடான இங்கு 300-க்கும் மேற்பட்ட தீவுக்கூட்டங்கள் அமைந்திருக்கின்றன. ஷாகி எரிமலை திட்டுகள், கவர்ச்சியான நீர்வீழ்ச்சிகள், அடர்த்தியான மழைக்காடுகள், அழகிய பவளப்பாறைகள் போன்றவை கட்டாயம் பார்வையிட வேண்டியவை. கடல் நீர் தெளிந்த நீரோடை போல் காட்சி அளிக்கும்.

அங்கு உலவும் கடல்வாழ் உயிரினங்கள், பவளப்பாறைகளை நீரில் மூழ்கியபடியே பார்வையிடலாம். அவற்றின் அசைவுகளை ரசித்து மகிழலாம். அது புது அனுபவமாக அமைந்திருக்கும். கடல் உயிரினங்கள் பற்றி ஆராய்ச்சி செய்பவர்களுக்கு சிறந்த இடமாக இது விளங்குகிறது. இந்தியர்களை பொறுத்தவரை இங்கு செல்வதற்கு சுற்றுலா விசா கூட தேவையில்லை. அங்கு இந்திய பாஸ்போர்ட்டுடன் 120 நாட்கள் வரை தங்கி, சுற்றிப்பார்க்கலாம்.

பார்படாஸ்

அட்லாண்டிக் பெருங்கடலால் சூழப்பட்ட இந்த கரீபியன் தீவு, இந்திய சுற்றுலாப் பயணிகளை மூன்று மாத காலம் வரை சுற்றிப்பார்க்க அனுமதிக்கிறது. பன்முக கலாசாரங்களை பிரதிபலிக்கும் இந்த தீவுக்கு உலகின் பல பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். வெள்ளை மணல் கடற்கரைகள் இந்த தீவுக்கு புது பொலிவு சேர்க்கிறது. சிறந்த தேனிலவு இடமாகவும் இது அறியப்படுகிறது.


Next Story