கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பும், வேலைவாய்ப்பும்...!
பொறியியல் பாடப்பிரிவில் கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ஜினீயரிங் மற்றும் ஐ.டி. படிப்புகள் ‘எவர் கிரீன்’ படிப்புகள் என்று அழைக்கப்படுகின்றன.
பொறியியல் படிப்பில் எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் என்ஜினீயரிங், ஐ.டி. எனப்படும் தகவல் தொழில் நுட்பம், கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ஜினீயரிங், மெக்கானிக்கல் போன்ற பாடப்பிரிவுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் மவுசு இருந்துகொண்டுதான் இருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு தகவல் தொழில்நுட்பத்துறையில் தேக்க நிலை ஏற்பட்டபோதுகூட மாணவர்கள் ஐ.டி., கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவுகளில் சேருவதை முற்றிலுமாக தவிர்த்துவிடவில்லை.
பொறியியல் பாடப்பிரிவில் கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ஜினீயரிங் மற்றும் ஐ.டி. படிப்புகள் 'எவர் கிரீன்' படிப்புகள் என்று அழைக்கப்படுகின்றன. அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. இன்றைய தினம் அனைத்து துறைகளும் கணினிமய மாகிவிட்ட சூழலில் இந்த இரண்டு படிப்புகளுக்கும் எப்போதும் தேவை இருந்துகொண்டுதான் இருக்கும்.
கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தில் கம்ப்யூட்டர் ஆர்க்கிடெக்சர், டேட்டா ஸ்ட்ரக்சர், டேட்டா பேஸ் மேனேஜ்மென்ட் சிஸ்டம், டிசைன் மற்றும் அனலிசிஸ், ஜாவா மற்றும் இன்டர்நெட் புரோகிராமிங், ஆபரேட்டிங் சிஸ்டம், சாப்ட்வேர் என்ஜினீயரிங், மைக்ரோ புராசசர்ஸ் மற்றும் கண்ட்ரோலர்ஸ், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், கம்ப்யூட்டர் கிராபிக்ஸ், டிஜிட்டல் சிக்னல் புராசசிங் முதலிய பாடங்கள் இடம்பெறுகின்றன.
பி.டெக். கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ஜினீயரிங் முடிப்பவர்கள், சாப்ட்வேர், எம்பெட்டட் சிஸ்டம்ஸ், கம்ப்யூட்டிங், நெட்வொர்க் மற்றும் டேட்டா பேஸ் அட்மினிஸ்ட்ரேஷன் உள்ளிட்ட துறைகளிலும் தற்போது மிகவும் பிரபலமாகி வரும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துறையிலும் பணியாற்றலாம். அவர்களுக்கு டெவலப்பர், குவாலிட்டி ஸ்பெசலிஸ்ட், கன்சல்டன்ட், கம்ப்யூட்டர் ஆர்க்கிடெக்ட், சாப்ட்வேர் என்ஜினீயர், டேட்டா பேஸ், சிஸ்டம் அனலிஸ்ட், சிஸ்டம் அட்மினிஸ்ட்ரேட்டர் உள்ளிட்ட பதவிகள் அளிக்கப்படுகின்றன. இப்போதும், வருங்காலத்திலும் அனைத்து துறைகளிலும் கம்ப்யூட்டர் என்ஜினீயர்களுக்கு தேவை இருந்துகொண்டே இருக்கும்.
எனவே, கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ஜினீயரிங் படிப்பவர்கள் வேலைவாய்ப்புகள் குறித்து கவலைப்படத் தேவையில்லை. தற்போது அரசு துறைகள் அனைத்தும் வேகமாக கணினிமயமாக்கப்பட்டு வருவதால் அரசு பணிவாய்ப்புகளும் நிறைய உண்டு. மேலும், பள்ளிகளில் ஆசிரியர், பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரிவுரையாளர், பொறியியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணி என கற்பித்தல் துறைகளிலும் ஏராளமான வாய்ப்புகள் இருக்கின்றன.
இப்போதெல்லாம் அரசு மற்றும் தனியார் வங்கிகள் கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ஜினீயரிங் பட்டதாரிகளைச் சிறப்பு அதிகாரி பதவியில் அதிக எண்ணிக்கையில் பணியமர்த்தி வருகின்றன. எனவே, வங்கித்துறையில் பணியாற்ற விரும்புவோருக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன.