வாகனங்கள் அனுமதிக்கப்படாத வியப்பூட்டும் சுற்றுலா தலம்


வாகனங்கள் அனுமதிக்கப்படாத வியப்பூட்டும் சுற்றுலா தலம்
x

மலைவாசஸ்தலத்தின் உள் பகுதிக்குள் வாகனங்கள் அனுமதிக்கப்படாத சுற்றுலா தலங்களும் ஒரு சில இடங்களில் இருக்கத்தான் செய்கின்றன.

வாகனங்கள் உமிழும் மாசு, இரைச்சல், போக்குவரத்து நெருக்கடி போன்ற அசவுகரியங்களை தவிர்த்து இயற்கை சூழலை பழமை மாறாதபடி பாதுகாப்பதற்கு இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. வாகன போக்குவரத்து அல்லாத பழங்கால வாழ்க்கை முறைக்கு அழைத்து செல்லும் அந்த சுற்றுலா தலம் மகாராஷ்டிரா மாநிலத்தில் அமைந்துள்ளது.

அங்குள்ளள மாதேரான் மலைவாசஸ்தலம்தான் அது. மும்பையில் இருந்து சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் இது மஹாராஷ்டிரா மாநிலத்தின் மிகப் பிரபலமான மலை வாழிடமாக கருதப்படுகிறது. நெருக்கடி மிகுந்த நகர சூழலில் வசிப்பவர்களுக்கு இந்த சுற்றுலா தலம் மாறுபட்ட அனுபவத்தை கொடுக்கும். வாகனங்களுக்கு அனுமதி இல்லாததால் சுற்றுப்புற பகுதிகள் மாசு ஏதுமின்றி காட்சியளிக்கும். சுத்தமான காற்றை சுவாசித்தபடி நடக்கும் சூழலும், அங்கு நிலவும் அமைதியும் பழங்கால வாழ்க்கை முறையை நினைவுப்படுத்தும்.

இங்கு குதிரைச்சவாரி பிரபலமானது. அதில் அமர்ந்தபடி சுற்றிப்பார்க்கலாம். பயணிகளின் வசதிக்காக கையால் இழுக்கப்படும் வண்டிகளும் இங்கு பயன்படுத்தப்படுகின்றன. அதில் பயணிப்பதும் வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும். அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்படும்போது மட்டும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன.

இந்த மலைவாசஸ்தலத்தில் இருந்து பள்ளத்தாக்குகளின் அழகை ரசிக்கலாம். 'ஹார்ட் பாயிண்ட்' எனும் இடத்தில் இருந்து பல வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் மும்பை நகரின் இரவு அழகை பார்வையிடலாம். பிரபால் கோட்டை எனப்படும் பழங்கால கோட்டையை 'லூயிசா பாயிண்ட்' எனும் இடத்திலிருந்து பார்வையிடலாம். 'மங்கீ பாயிண்ட்', 'போர்க்குபைன் பாயிண்ட்', 'ஒன் ட்ரீ ஹில் பாயிண்ட்', சார்லோட் ஏரி என சுற்றிப்பார்க்க ஏராளமான இடங்கள் உள்ளன.

இந்தியாவின் எல்லா முக்கிய நகரங்களில் இருந்தும் எளிதில் சாலை மார்க்கமாக சென்றடையும்படி மாதேரான் மலைவாசஸ்தலம் அமைந்துள்ளது. குறிப்பிட்ட தூரம் வரை (டஸ்டூரி பாயிண்ட்) மலைப்பகுதி வழியாக வாகனங்கள் நுழைவதற்கு அனுமதி உண்டு. டஸ்டூரி பாயிண்டில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் நடந்தோ, குதிரை சவாரி செய்தோ, கைவண்டியில் பயணித்தோ மாதேரான் மலைவாசஸ்தலத்தை சென்றடையலாம்.

நேரடியாக மாதேரான் சென்றடைய ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. அது ரெயில் மார்க்கம் மட்டும்தான். நேரல் என்ற இடத்தில் இருந்து மாதேரானுக்கு விஷேச ரெயில் இயக்கப்படுகிறது. இது ஊட்டி மலை ரெயில் போல் பாரம்பரிய சிறப்பம்சங்களை கொண்டது. பராமரிப்பு பணி காரணமாக 2019 முதல் ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. சமீபத்தில்தான் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்திருக்கிறது மினி ரெயில், பொம்மை ரெயில் என அழைக்கப்படும் இதில் பயணித்தபடி ஒட்டுமொத்த இயற்கை அழகையும் ரசிக்கலாம்.


Next Story