பாமரரையும் பாட்டால் கவர்ந்த பெரும் புலவன்


பாமரரையும் பாட்டால் கவர்ந்த பெரும் புலவன்
x

இன்று (டிசம்பர் 11-ந் தேதி) மகாகவி சுப்பிரமணிய பாரதியார் பிறந்தநாள்.

நவீன தமிழ் கவிதையின் முன்னோடியாக திகழ்ந்தவர் மகாகவி சுப்பிரமணிய பாரதியார். தமிழ், தமிழர் நலன், தேசபக்தி, பெண்ணுரிமைக்கு தன் பாடல்கள் மூலம் உரக்க குரல் கொடுத்தவர். 39 ஆண்டுகளே பூமியில் வாழ்ந்தாலும், தமிழ் இலக்கிய வானில் விடிவெள்ளியாக ஜொலித்தவர். கவிஞர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், ஆன்மிகவாதி, சீர்திருத்தவாதி என்று பன்முகத்தன்மை கொண்டவர். தமிழ் பத்திரிகை உலகில் முதன் முதலாக கார்ட்டூன்களை அறிமுகப்படுத்தியவர். சுயசரிதை எழுதிய முதல் கவிஞர் என்ற பெருமையும் இவரையே சேரும்.

பாரதியார் 11-12-1882-ல் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் பிறந்தார். தந்தை பெயர் சின்னசாமி. தாயார் லட்சுமி அம்மாள். 11-வது வயதிலேயே கவி பாடும் ஆற்றலைப் பெற்றார். இவரது புலமையைப் பாராட்டி எட்டயபுரம் மன்னர் பாரதி என்ற பட்டத்தை வழங்கினார். 1897-ம் ஆண்டு திருமணம் நடந்தது. மனைவி பெயர் செல்லம்மாள். 16-வது வயதில் தந்தை காலமானார். அதன் காரணமாக படிப்பு பாதியில் நின்றது. பாரதியின் எதிர்கால நலனை முன்னிட்டு அவரது அத்தை குப்பம்மாள் பாரதியாரை காசிக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்தார். பாரதியார் தன் மனைவி செல்லம்மாளை கடையத்தில் உள்ள அவரது பிறந்த வீட்டில் விட்டுவிட்டு காசிக்கு சென்றார். அங்குள்ள அனுமன்காட்டில் உள்ள அத்தை வீட்டில் தங்கினார். அலகாபாத் பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருத மொழியையும், இந்தியையும் கற்றார். 4 ஆண்டுகள் காசியில் தங்கி இருந்தார். இன்னும் காசியில் அனுமன்காட் பகுதியில் சிவமடம் என்ற பாரதியார் வசித்த அவரது அத்தைவீடு இருக்கிறது. அந்த வீட்டில் குப்பம்மாள் பேரன் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

தமிழகம் திரும்பிய பாரதியார் எட்டயபுரம் மன்னரின் அழைப்பை ஏற்று அரசவைக் கவிஞராக பணியாற்றினார். பின்னர் ஆசிரியராக பணியாற்றினார். 1905-ம் ஆண்டு அரசியலில் ஆர்வம் காட்டினார். சுதேச மித்திரன் இதழில் உதவி ஆசிரியராகவும், இந்தியா பத்திரிகையில் ஆசிரியராகவும் பணியாற்றினார். பத்திரிகையில் அரசுக்கு எதிராக கட்டுரைகள் எழுதியதால், பிரிட்டிஷ் அரசு பாரதியாருக்கு கைது 'வாரண்டு' பிறப்பித்தது, நண்பர்கள் அறிவுரையின்படி பாரதியார் பிரெஞ்சு அரசின் ஆளுகைக்கு உட்பட்ட புதுச்சேரிக்கு 1908-ம் ஆண்டு சென்றார். அங்கு அவர் இந்தியா, கர்மயோகி மற்றும் சில பத்திரிகைகளில் ஆசிரியராக பணியாற்றினார்.

பாரதியார் புதுவையில் தங்கி இருந்த காலத்தில் தான் அவரின் புகழ்பெற்ற கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம் மற்றும் சக்திப்பாடல்கள், சுயசரிதை, வசன கவிதைகள் போன்றவை எழுதப்பட்டன. பாரதியாருக்கு பாம்பாட்டி, நெல்குத்தும் பெண்கள், செம்படவர், உழவர் இவர்களின் நாடோடி பாட்டுகள் என்றால் மிகவும் பிடிக்கும். அதேபோன்று தானும் பாடல்கள் எழுத விரும்புவாராம். இதுகுறித்து பாரதியிடம் நெருக்கமாக பழகிய யதுகிரி அம்மாள் கூறி இருப்பதாவது:-

ஒருநாள் மாலை பாரதி, அவர் மனைவி செல்லம்மாள் உள்பட 8 பேர் புதுச்சேரி கடற்கரைக்கு சென்றோம். அங்கே வேடிக்கையாக பேசிக்கொண்டு இருந்தோம். செம்படவர்கள் மீன்களை நிரப்பிக்கொண்டு சந்தோஷமாக பாடியபடி தோணியைக் கரையேற்றிக்கொண்டு இருந்தார்கள். எங்களோடு பேசிக்கொண்டு இருந்த பாரதியார் அவர்களுடைய பாட்டுக்கு சபாஷ் சொல்ல ஆரம்பித்தார். நான் இதென்ன வேடிக்கை! அவர்கள் அர்த்தம், ராகம் இல்லாமல் பாடும் பாட்டுக்கு நீர் இவ்வளவு மெச்சுகிறீரே எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை என்றேன். உடனே அருகில் இருந்த செல்லம்மாள், அவர் சுபாவம் உனக்கு தெரியாதா? வீதியில் மாரியம்மன் எடுத்துக்கொண்டு உடுக்கை அடிப்பவர் வந்தால் இவர் கூத்தாடுகிறார். தன்நினைவே கிடையாது. இப்போது சாயங்கால வேளை. கடற்கரை அலைகளின் ஒலி, இத்தோடு தாளம் போடும் அர்த்தமில்லாத பாட்டு கேட்க வேண்டுமா? என்றார்.

இதை சொல்லி முடிப்பதற்குள் பாரதி எழுந்தார். ஒரு பென்சில், காகிதம் எடுத்துக்கொண்டு அந்த செம்படவர்களிடம் போனார். அங்கே இருந்த முதியவரிடம் அவர்கள் பாடும் பாட்டை அடி அடியாக எழுதச் சொன்னார். அதில் இருக்கும் பிழைகளை திருத்திக்கொண்டு எங்களிடம் வந்தார். "நீங்கள் எல்லோரும் என்னிடம் கேலி செய்தீர்களே, பிரபஞ்சத்தின் அடிப்படையை அந்த செம்படவன் எனக்கு உபதேசம் செய்தார்" என்றார் பாரதியார்.

ஒரு சமயம் பாரதியின் வீட்டுக்கு அருகில் ஒரு பாம்பாட்டி வந்தான். அவன் மகுடியை எடுத்து வாசித்தான். குழந்தைகள் கூடி நின்று வேடிக்கை பார்த்தனர். பாரதி பாம்பாட்டி வாசிப்பதை கூர்ந்து பார்த்து கொண்டு இருந்தார். கூட்டம் கூடி விட்டது. பாம்பாட்டிக்கு குஷியாகி விட்டது. உற்சாகமாக ஊதினான். பாரதிக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை. சட்டென்று தான் போட்டிருந்த மேலாடையை கழற்றி அவனிடத்தில் கொடுத்து விட்டு வெறும் வேட்டியுடன் நின்றார். இதை சற்றும் எதிர்பாராத அந்த பாம்பாட்டி மனம் மகிழ்ந்து பாரதியை வணங்கி விட்டு சென்றான். மறுநாள் பாரதி, வந்தே மாதரம் என்போம். எங்கள் மாநிலத்தாயை வணங்குவதும் என்போம் என்ற அற்புதமான கவிதையை எழுதி நண்பர்களிடம் காட்டினார். நேற்று பாம்பாட்டி மகுடியில் வாசித்தானே அதே மெட்டில் பாரதி அந்த கவிதையை எழுதி இருந்தது தான் சிறப்பம்சம்.

பாரதி கவிதைகளுக்காக கனவுலகில் மிதக்கவில்லை. தான் சந்தித்த பாமர மக்களிடம் இருந்தே தன் கவிதைக்கான கருப்பொருளை தேர்வு செய்து கொண்டான். அரவிந்தருக்கு தமிழ் கற்றுக்கொடுத்த பாரதியார் 1910-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4-ந் தேதி அரவிந்தர் கப்பலில் புதுவைக்கு வந்தார். அவரை துறைமுகத்துக்கு சென்று பாரதியாரும், அவரது நண்பர்களும் வரவேற்றனர். அரவிந்தரிடம் நெருங்கி பழகிய பாரதியார் அரவிந்தரின் வாழ்க்கை வரலாறு, அவரது சொற்பொழிவுகளை பத்திரிகையில் விவரமாக எழுதினார். அரவிந்தரின் கடல் என்ற ஆங்கில கவிதையை தமிழில் மொழி பெயர்த்தார். அரவிந்தருக்கு பாரதியார் தமிழ் கற்றுக்கொடுத்தார். அரவிந்தர் பாரதியாரின் உதவியுடன் ஆழ்வார்களின் பாசுரங்களை மொழி பெயர்த்தார்.

அரவிந்தருக்கு சாம்பாரும், அப்பளமும் மிகவும் பிடிக்குமாம். அதை அவர் மிகவும் விரும்பி சாப்பிடுவாராம். பாரதியின் மனைவி செல்லம்மாள் தமது இல்லத்தில் இருந்து சாம்பார், அப்பளம் ஆகியவற்றை அனுப்பியதாக பாரதியார் மகள் சகுந்தலா பாரதி பதிவு செய்து இருக்கிறார். அவர் கூறி இருப்பதாவது:-

என் தந்தையார் வேதம் படிப்பதற்காக சில நாட்கள் அரவிந்தரின் மாளிகைக்கு போவார். இரவில் வீடு திரும்ப மாட்டார். சில சமயம் காலை 6 மணி வரை படித்துக்கொண்டு இருப்பார்கள். அரவிந்தரின் சீடர்கள் எங்கள் வீட்டுக்கு வந்து சாம்பாரும், அப்பளமும் வாங்கி போவார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஒருமுறை புதுச்சேரியில் ஒரு குடிகாரன் நன்றாக குடித்து விட்டு வாய்க்கு வந்த படி பேசிக்கொண்டு சென்றான். அதை நின்று கவனித்த பாரதியார் அருகில் இருந்த பாரதிதாசனிடம், 'பிச்சேரிக்காரன் குடிவெறியிலும், தனித்தமிழை எப்படி பேசுகிறான் பார்' என்று கூறி வியந்தார்.

'தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில் ஜெகத்தினை அழித்திடுவோம்' என்று பாடிய பாரதி வறுமையில் வாடியதை அவர் வாக்கின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.

காணி நிலம் வேண்டும் என்று பராசக்தியிடம் வேண்டிய அவர் வேறொரு கோரிக்கையையும் முன் வைக்கிறார். பராசக்தி, ஓயாமல் கவிதை எழுதிக்கொண்டிருக்கும் படி திருவருள் செய்ய மாட்டாயா?

தாயே! என்னை கடன்காரர் ஓயாமல் வேதனைப்படுத்திக்கொண்டிருந்தால், நான் அரிசிக்கும், உப்புக்கும் யோசனை செய்து கொண்டிருந்தால் உன்னை எப்படி பாடுவேன். எனது குடும்பத்தைப் பராமரிப்பது உன்னைச் சேர்ந்தது. உன்னைப் புகழ்ச்சிப்புரியும் தொழில் என்னைச் சேர்ந்தது.

தாயே! சம்மதம் தானா? என்கிறார்.

'ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்' என்று நாடு சுதந்திரம் அடையும் முன்பே தீர்க்கதரிசனமாக பாடிய பாரதி நாடு சுதந்திரம் பெற்றதை காணாமல் காலமாகிவிட்டாலும், தன் இறவா கவிதைகள் மூலம் காலத்தை வென்று வாழ்கிறார்.


Next Story