எழில்மிகு குறிஞ்சி மலர்கள்


எழில்மிகு குறிஞ்சி மலர்கள்
x
தினத்தந்தி 14 March 2022 4:04 PM GMT (Updated: 14 March 2022 4:04 PM GMT)

இயற்கை தந்த அதிசயங்களில் ஒன்றுதான் குறிஞ்சி மலர். இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் குறிஞ்சி செடிகள் காணப்படுகின்றன. இவை பெரும்பாலும் நீல நிறத்தில் பூத்துக்குலுங்கும்.

இதனால் நீலக்குறிஞ்சி என்றும் அழைக்கப்படுகின்றன. நீல நிறத்தில் பூத்துக்குலுங்கும் குறிஞ்சி மலர்கள் மலைப்பகுதிக்கு புதிய நிறம் கொடுத்து விடுகின்றன. இதனால் நீல நிறத்தில் குறிஞ்சி மலர்கள் அதிகளவில் பூக்கும் மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதிக்கு நீலகிரி என்றே பெயர் வந்துவிட்டது என்று கூறப்படுகிறது. புதர் இனத்தை சேர்ந்த குறிஞ்சி செடிகளில் சுமார் 200 வகை உள்ளது. இவை அனைத்தும் ஆசிய நாடுகளில் மட்டுமே காணப்படுகின்றன. அதிலும் 150 வகைகள் இந்தியாவில் உள்ளதாக கண்டறியப்பட்டு இருக்கிறது. தமிழர்களின் நில வகை பகுப்பில் மலையும், மலைசார்ந்த நிலமும் குறிஞ்சி திணையாக குறிக்கப்படுகிறது. இதன் மூலம் மலை சார்ந்த நிலத்துக்கும், குறிஞ்சி செடிகளுக்கும் இடையிலான பிணைப்பை காண முடியும்.

மலைப்பாங்கான இடங்களில் மட்டுமே குறிஞ்சி செடிகள் வளர்கின்றன. பிரகாசமான அதன் நீல நிற மலர்கள் கோவில் மணிகளின் உருவம் கொண்டவை. தென்னிந்தியாவின் உயரமான சிகரமாக கருதப்படும் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஆனைமுடி மலைச்சிகரத்தையொட்டி இரவிகுளம் தேசிய பூங்கா உள்ளது. இது குறிஞ்சி செடிகள் செழித்து வளர ஏற்ற இடமாக கருதப்படுகிறது. கடல் மட்டத்தில் இருந்து 1,300 மீட்டர் முதல் 2,400 மீட்டர் உயரத்தில் வளரும் இந்த வகை செடிகளின் உயரம் 30 செ.மீ. முதல் 60 செ.மீ. வரை இருக்கும். இதற்கு ஏற்ற தட்பவெட்ப நிலை இருந்தால் 180 செ.மீ. உயரம் வரை கூட வளரும்.

குறிஞ்சி மலர்கள் 3 மாதத்துக்கு ஒரு முறை, 7 ஆண்டுகளுக்கு ஒரு முறை, 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை, 17 ஆண்டுகளுக்கு ஒரு முறை மற்றும் 36 ஆண்டுகளுக்கு ஒருமுறை என வகைக்கு ஏற்ப பூக்கும் தன்மை கொண்டவை. உயிர் தப்பி பிழைப்பதற்கான ஒரு வழியாகவே இவை நீண்ட காலம் கழித்து பூப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இந்த மலரில் கிடைக்கும் இயற்கையான தேன் மிகவும் இனிமையானது ஆகும். இதனால் அந்த மலர்களை தேடி பூச்சிகள், பறவைகள், விலங்குகள் வருகின்றன. அவற்றிடம் இருந்து தப்பி பிழைப்பதற்கு அந்த தகவமைப்பை கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது. குறிஞ்சி செடிகள் ஒரு முறை பூத்த பிறகு விதைகளை மண்ணில் விட்டு விட்டு மடிந்து விடுகின்றன. அதன்பிறகு விதைகளில் இருந்து மீண்டும் புதுச்செடிகள் உருவாகி குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு பூக்கின்றன. பூக்கக்கூடிய நாட்காட்டி அதன் மரபணுவிலேயே அமைந்திருப்பதால், அவை ஒரே நேரத்தில் குறிப்பிட்ட காலத்தில் பூக்கின்றன. அவை பூக்கும் சுழற்சியை கொண்டு பழங்குடியின மக்கள் தங்களது வயதை கணக்கிட்டு வந்ததாக கூறப்படுகிறது.

தமிழ்நாடு, கேரளாவில் 2 வகையான குறிஞ்சி செடிகள் உள்ளன. கொடைக்கானல், மூணாறு மலைப்பகுதிகளில் வளரும் குறிஞ்சி செடியின் அறிவியல் பெயர் ’ஸ்ட்ரோபிலாந்தஸ் குந்தியானஸ்’ ஆகும். நீலகிரி மலைப்பகுதியில் காணப்படுவது ’ஸ்ட்ரோபி லாந்தஸ் நீலகிரியன்சிஸ்’ ஆகும். ஆகஸ்டு மாதம் முதல் நவம்பர் மாதம் வரை கொத்து கொத்தாக பூத்துக்குலுங்கும் குறிஞ்சி மலர்களை காண்பதே பிரமிப்பாக இருக்கும். பூத்துக்குலுங்க தொடங்கியதும், அந்த மலர்களை தேனீக்கள் மொய்க்க தொடங்கி விடுகின்றன.

ஒரு குறிஞ்சி செடியில் சராசரியாக 82 மஞ்சரிகளும், அந்த ஒவ்வொரு மஞ்சரியிலும் சராசரியாக 24 பூக்களும் என மொத்தம் சராசரியாக 1,768 பூக்கள் பூப்பதாக ஆய்வு கூறுகிறது. ஒவ்வொரு பூவிலும் ஏறத்தாழ 4 மி.லி. தேன் உள்ளது. அதன்படி ஒரு செடியில் இருந்து 7,072 மி.லி. அல்லது 0.007 லிட்டர் தேன் உருவாக்கப்படுவதாக அறியப்பட்டு உள்ளது. இதனால் குறிஞ்சி மலர்கள் ஒருமித்து பூக்கும் காலத்தில் தேனீக்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருக்கும். என்றாலும், தென்னிந்திய மலைப்பகுதிகளில் எழில்மிகு குறிஞ்சி செடிகளின் எண்ணிக்கை மெல்ல மெல்ல குறைந்துவிட்டது. இதற்கு காரணம், சமூக விரோதிகளின் செயலால் அதன் விதை பரவல் தடுக்கப்படுவதே ஆகும். அதாவது குறிஞ்சி மலர்கள் பூத்ததும் செடியோடு பறித்து சென்று விடுகின்றனர். எனவே மலைப்பகுதிக்கு அழகு சேர்க்கும் அரிய வகை குறிஞ்சி செடிகளை பாதுகாக்க அனைவரும் முன்வர வேண்டும் என்பதே சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


Next Story