கேரளாவில் சாதிக்கும் தமிழகத்து இளவரசி
புத்தகங்கள், சில மனிதர்கள் வாழ்க்கையில் மாபெரும் மாற்றங்களை ஏற்படுத்தி அவர்களை வெற்றியாளர்களாக உருவாக்கும். வாழ்க்கையில் தோல்வி மேல் தோல்விகண்டு துவண்டுபோயிருக்கும் பெண்கள், அத்தகைய புத்தகங்களை படித்து, அதில் இருந்து கிடைக்கும் தன்னம்பிக்கையை மூலதனமாக்கி மீண்டும் சாதிப்பார்கள்.
அத்தகைய புத்தகங்கள் போல் மற்றவர்களுக்கு தன்னம்பிக்கையூட்டும் விதத்தில் வாழ்ந்து, வழிகாட்டும் சாதனைப் பெண்களும் நம்மோடு வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் வாழ்க்கையை மற்றவர்களுக்கு பாடமாக்கிவிடுகிறார்கள்.
அப்படிப்பட்ட பெண்மணிகளில் ஒருவர், இளவரசி பி.ஜெயகாந்த். தமிழ் பெண்ணான இவர் பிறந்தது தமிழ்நாட்டில். வளர்ந்ததும், தொழில்துறையில் சாதித்து வாழ்க்கைப் பாடமாகி இருப்பதும் கேரளாவில்.
சினிமா காட்சிகளை மிஞ்சும் தனது வாழ்க்கை கதையை அவரே சொல்கிறார்:
“மதுரை மாவட்டம் உசிலம்பட்டி எங்கள் சொந்த ஊர். அப்பா பெரிய கருப்பத்தேவர், அம்மா பாப்பாத்தி. பெற்றோருக்கு நாங்கள் ஏழு குழந்தைகள். அதில் கடைசி மகளாக, எனது தாயாரின் 52- வது வயதில் நான் பிறந்தேன். நான் வயிற்றில் இருந்தது எனது தாயாருக்கே தாமதமாகத்தான் தெரிந்திருக்கிறது. எனது மூத்த அக்காளுக்கு திருமணம் முடிந்து, அவள் கர்ப்பமாகி பிரசவித்த காலகட்டத்தில் எனது தாயாரும் என்னை பிரசவித்திருக்கிறார். அந்த காலத்து சூழ்நிலை அப்படி இருந்திருக்கிறது.
எங்கள் குடும்பத்திற்கு உசிலம்பட்டியில் விவசாய நிலம் இருந்தும், சரியாக மழை இல்லாததால் நிலத்தை விற்றும், பொருட்களை அடகுவைத்தும் சாப்பிடும் நிலை உருவாகி யிருக்கிறது. அதனால் எனது அண்ணன் காசி என்பவர் முதலில் கேரள மாநிலம் திருச்சூருக்கு குடிபெயர்ந்திருக்கிறார். அவர் அரிசி முறுக்கு தயாரித்து, தலைசுமட்டில் வீடுவீடாக கொண்டுபோய் விற்பனை செய்திருக்கிறார். அதில் ஓரளவு வருமானம் வந்ததும், பெற்றோரும் திருச்சூர் வந்திருக்கிறார்கள். நான் பிறந்தது மட்டும் உசிலம்பட்டியில். படித்தது, வளர்ந்ததெல்லாம் திருச்சூரில்தான்..” என்று கூறும் இளவரசிக்கு வயது 39.
இவர் திருச்சூரில் அரசு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை படித்திருக்கிறார். அதற்கு மேல் படிக்கவைக்கவில்லை. அண்ணன்களின் குழந்தைகளை பராமரிக்கும் வேலையை இவரிடம் ஒப்படைத்திருக்கிறார்கள். அதையும் பொறுப்பாக செய்துகொண்டே, தனியார் டியூட்டோரியலில் சேர்ந்து பத்தாம் வகுப்பு படித்து தேறியிருக்கிறார். பின்பு கல்லூரி அறிமுக வகுப்பில் சேர்ந்து வணிகக் கல்வியை தேர்ந்தெடுத்து படித்திருக்கிறார்.
“அந்த காலகட்டத்தில் என் தந்தை மரணமடைந்துவிட்டதால், 18 வயதில் எனக்கு திருமணம் செய்துவைத்தார்கள். என் கணவர் ஜெயகாந்த். அவர் எனது அண்ணனின் மைத்துனர். பெண் கொடுத்து பெண் எடுப்பது என்று சொல்வார்களே அதுபோன்றது எனது திருமணம். எனது கணவருக்கு அப்போது குறிப்பிடும்படியான வேலை எதுவும் இல்லை. அதனால் பலகாரங்கள் தயாரித்து விற்பனை செய்து வந்த என் அண்ணனிடம் நாங்கள் வேலை பார்த்தோம்” என்கிறார்.
இளவரசியின் வாழ்க்கையில் திருப்பம் 2000-ம் ஆண்டில் ஏற்பட்டிருக்கிறது. அப்போது மூத்த மகன் விஷ்ணு பிறந்திருக்கிறான். அந்த காலகட்டத்தில் அண்ணன் வீட்டில் இருந்து வெளியேறி, தனிக்குடித்தனம் சென்றிருக்கிறார். வீட்டில் இருந்தபடியே தனக்கு தெரிந்த தொழிலான முறுக்கு, ஓலை பக்கோடா போன்றவைகளை கையாலே சுவையாக தயார் செய்து வீடுவீடாக கொண்டு போய் விற்றிருக்கிறார். அங்குள்ள கடைகளுக்கும் கொண்டுபோய் கொடுத்திருக்கிறார். அப்போது கடைகளில் இருந்து உளுந்து, பருப்பு போன்றவைகளை மூட்டையாக வீட்டிற்கு வாங்கிவந்து அவைகளை பாக்கெட்டுகளில் அடைத்துகொடுக்கும் வேலையையும் செய்துள்ளார். இப்படி கடுமையாக உழைத்து வாழ்க்கையில் வேகமாக முன்னேறியிருக்கிறார்.
ஒருசில வருடங்களிலே இரண்டு வீடுகள், ஒரு கார் போன்றவைகளை வாங்கியுள்ளார். அடுத்து ஒன்றரை கோடி ரூபாய் முதலீட்டில் திருச்சூரில் நவீன சூப்பர் மார்க்கெட் ஒன்றையும் தொடங்கியுள்ளார். கூடுதல் முதலீட்டிற்காக வீட்டை அடமானம் வைத்து வங்கிகளில் லட்சக்கணக்கில் பணம் கடனாகவும் பெற்றுள்ளார். வியாபாரம் நல்ல நிலையில் நடந்துகொண்டிருந்தபோது இளவரசியின் வாழ்க்கையில் மிகப் பெரிய சரிவு சினிமா காட்சி போன்று நடந்திருக்கிறது.
“எனது சூப்பர் மார்க்கெட்டில் 52 பேர் வேலைபார்த்தார்கள். அதன் ஓரத்தில் ஒருபுறம் மாலை 3 மணிமுதல் இரவு 10 மணி வரை உளுந்து வடை, பருப்பு வடை போன்றவைகளை சுடச்சுட தயார்செய்து விற்பேன். அதுவே பல ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகும். இன்னொருபுறம் அவ்வப்போது கேக் தயார் செய்தும் கொடுப்பேன். அதுவும் நன்றாக விற்பனையானது. ‘ஓவர் கான்பிடென்ட்’ என்பார்களே அதுபோன்று அளவுக்கு அதிகமான தன்னம்பிக்கை எனக்கு ஏற்பட்டிருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். எனது சூப்பர் மார்க்கெட்டில் மிகப் பெரிய கொள்ளை சம்பவம் ஒன்று நடந்தது. 83 லட்சம் ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டது. கார் காணாமல் போனது. உடல் நலம் கடுமையாக பாதிக்கப்பட்டது. மனஅழுத்தமும் உருவானது. நான் நிலைகுலைந்துபோனேன். அப்படியே என் வாழ்க்கை சீட்டுக்கட்டு போல் சரிந்துவிட்டது.
வாங்கிய கடனை செலுத்தமுடியவில்லை. வியாபாரமும் செய்ய முடியவில்லை. கடனை அடைக்க வட்டிக்கு கடன் வாங்கினேன். கடனிலே மூழ்கினேன். கிட்டத்தட்ட ஒன்றரை கோடி ரூபாய் கடனுடன் சூப்பர் மார்க்கெட்டை பூட்டிவிட்டு, அங்கிருந்து எடுத்த பொருட்களை எல்லாம் வீட்டில் கொண்டுபோய் குவித்தேன். அதை பார்க்கும் போதெல்லாம் வேதனை ஏற்பட்டதால், அவைகளை தீயிட்டு கொளுத்திவிட்டேன்.
வீடுகளை வங்கி அதிகாரிகள் ஜப்தி செய்யும் சூழ்நிலை உருவானது. உடல் நிலை பாதிப்பால், சிந்தனைத்திறனும் குறைந்தது. என்னை போல் யாராவது அனைத்தையும் இழந்துவிட்டு, மீள முடியாத சூழலில் நின்றிருந்தால் என்ன முடிவை எடுத்திருப்பார்கள்?” என்று நம்மிடம் கேள்வி எழுப்பிய இளவரசி, “நான் தற்கொலை போன்ற தவறான முடிவை எடுக்க ஒருபோதும் விரும்பியதில்லை. வீழ்ந்துவிட்டேன் என்று நினைப்பவர்கள் மத்தியில் வீரத்தோடு எழுந்துநின்று போராடி ஜெயித்து மற்ற பெண்களுக்கு நம்பிக்கையூட்டும் எடுத்துக்காட்டாக உருவாகவேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அது ஒன்றும் சாதாரண விஷயம் அல்ல என்பதும் எனக்கு தெரியும். ஆனாலும் துணிச்சலாக அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டேன்” என்று தன்னம்பிக்கை மிளிர சொல்கிறார், இளவரசி.
இவரது அபரிமிதமான நம்பிக்கைக்கு, இவர் தயாரிக்கும் சுவையான பலகாரங்கள்தான் காரணமாக இருந்திருக்கின்றன. தனது கைப்பக்குவம் மீண்டும் தன்னை கைதூக்கிவிட்டுவிடும் என்ற தைரியத்தோடு தள்ளுவண்டியின் துணையோடு, ஒருசில வருட இடைவெளியில் மீண்டும் வலுவாக வாழ்க்கை போராட்டத்தை தொடங்கியிருக்கிறார் இளவரசி.
“முதலில் தள்ளுவண்டி ஒன்றை வாங்கினேன். திருச்சூர் மண்ணுத்தி பைபாஸ் ரோட்டில் அதை கொண்டு போய் நிறுத்தி, என் கைப்பட பருப்பு வடை, உளுந்து வடை தயார் செய்து அந்த தள்ளுவண்டியில் வைத்து விற்க தொடங்கினேன். சில நாட்களிலே வியாபாரம் சூடுபிடித்தது. மனதளவில் தளர்ந்துபோயிருந்த எனக்கு அது உற்சாகத்தை தந்தது. அதன் மூலம் கைச்செலவுக்கு பணம் வந்துகொண்டிருந்தபோது, திருச்சூர் ரெயில் நிலையத்தில் ஒரு கடை வாடகைக்கு இருப்பதாக தகவல் வந்தது. மின்சாரம்- தண்ணீர் வசதி இல்லாத கடை அது. அதனால் அதை வாடகைக்கு எடுத்து நடத்த ஆள் இல்லாமல் இருந்தது. தினமும் ஆயிரம் ரூபாய் வாடகை என்றார்கள். ஆனாலும் அந்த கடையை வாடகைக்கு எடுத்து, பலகாரங்கள் தயாரித்து விற்கத் தொடங்கினேன்.
அந்த காலகட்டத்தில், வங்கி கடனுக்காக என் வீட்டை ஜப்தி செய்ய வங்கி அதிகாரிகள் வந்தனர். அப்போது இன்னொரு வங்கி அதிகாரியான அசோகன் என்பவர் ரொக்கமாக ஐந்து லட்சம் ரூபாய் தந்தார். அதை உடனே சம்பந்தப்பட்ட வங்கிக்கு செலுத்தி ஜப்தி நடவடிக்கையில் இருந்து தற்காலிகமாக மீண்டேன். பின்பு கடன் தந்தவர்களை எல்லாம் அழைத்து, ‘சற்று பொறுமையாக இருங்கள். கொஞ்சம் கொஞ்சமாக கடனை திரும்ப செலுத்திவிடுவேன்’ என்று நம்பிக்கையூட்டினேன். அவர்களும் சம்மதித்தார்கள்.
முதலில் ஆரம்பித்த கடையில் வியாபாரம் நன்றாக நடந்தது. பின்பு பக்கத்து கடைகளை வாடகைக்கு எடுத்தேன். வியாபாரம் சூடுபிடித்தது. படிப்படியாக எல்லா கடன்களையும் திரும்பிசெலுத்தினேன். இன்னொருபுறத்தில் காலத்துக்கு தக்கபடியான தொழில் சிந்தனையோடு கடுமையாக உழைத்தேன். அஸ்வதி ஹாட் சிப்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கினேன். புதுப்புது ருசிகளில் 50-க்கு மேற்பட்ட வகைகளில் பலகாரங்களை தயார் செய்தேன். பலாப்பழத்தில் விதவிதமான உணவுப் பொருட்களை உருவாக்கினேன். ஆரோக்கியமும், ருசியும் நிறைந்ததாக அவை இருப்பதால் வியாபாரம் நன்றாக நடக்கிறது.
சுடச்சுட விற்பனை செய்வதற்காக இப்போது நான்கு கடைகளை திருச்சூர் பகுதியில் நடத்துகிறேன். சுவையான பலகாரங்கள் தயாரிக்க பயிற்சிகொடுத்து 35 பேர்களை வேலைக்குவைத்திருக்கிறேன். அதில் 19 பேர் பெண்கள். எனக்கு தெரிந்த ருசியான செய்முறைகளை அவர்களுக்கும் கற்றுகொடுக்கிறேன். போராடி மீண்டும் நல்ல நிலைக்கு வந்திருக்கிறேன்” என்று மகிழ்ச்சி பொங்க சொல்லும் இளவரசி திருச்சூரில் குடும்பத்தோடு வசிக்கிறார். கேரள மக்கள் மிகுந்த பாசமானவர்கள் என்றும் சொல்கிறார்.
பெண்களின் தன்னம்பிக்கைக்கு முன்னுதாரணமாகத் திகழும் இவருக்கு கேரளாவில் பாராட்டுகளும், விருதுகளும் குவிகின்றன. அரசும், அரசு சார்ந்த நிறுவனங்களும், தனியார் சேவை அமைப்புகளும் இவரை தன்னம்பிக்கை பெண்ணாகவும், சிறந்த பெண் தொழிலதிபராகவும், சமையல் ராணியாகவும் குறிப்பிட்டு பாராட்டியுள்ளன. இளவரசி அமெரிக்காவில் உள்ள சர்வதேச அமைதி கவுன்சில் வழங்கும், ‘மெஜஸ்டிக் கிராண்ட் அச்சீவர்ஸ்’ விருதினையும் விரைவில் பெறஉள்ளார்.
“பெண்களின் வாழ்க்கைப் பயணம் எப்போதும் இனிமை நிறைந்ததாக இருக்காது. எந்த நேரத்தில் எந்த கஷ்டம் வரும் என்று சொல்லமுடியாது. கஷ்டங்கள் வந்தால், பெண்கள் தளர்ந்துபோய்விடக் கூடாது. எத்தனை முறை தோல்விகள் வந்தாலும் எதிர்த்து போராடவேண்டும். திட்டமிட்டு புதுமையாக சிந்தித்து, கடுமையாக உழைத்தால் எல்லோராலும் வாழ்க்கையில் சாதிக்க முடியும்” என்று நம்பிக்கை ஒளி பாய்ச்சுகிறார், கேரளாவில் சாதிக்கும் இந்த தமிழகத்து இளவரசி!
Related Tags :
Next Story