மும்பையில் ஏரிகளின் நீர் மட்டம் கிடு, கிடு உயர்வு- 10 சதவீத குடிநீர் வெட்டு ரத்து
மும்பையில் பெய்த தொடர் மழையால் ஏரிகளின் நீர்மட்டம் கிடு, கிடு வென உயர்ந்தது. இதன் காரணமாக நகரில் அமலில் இருந்த 10 சதவீத குடிநீர் வெட்டு ரத்து செய்யப்பட்டுள்ளது.
மும்பை,
மும்பையில் பெய்த தொடர் மழையால் ஏரிகளின் நீர்மட்டம் கிடு, கிடு வென உயர்ந்தது. இதன் காரணமாக நகரில் அமலில் இருந்த 10 சதவீத குடிநீர் வெட்டு ரத்து செய்யப்பட்டுள்ளது.
மும்பையில் தொடர் மழை
மும்பையில் கடந்த திங்கட்கிழமை முதல் அடை மழை பெய்து வருகிறது. குறிப்பாக திங்கள் முதல் வியாழன் வரை நகரில் தினந்தோறும் 10 செ.மீ. அளவுக்கு மழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக நகரில் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியது. குறிப்பாக கிங்சர்க்கிள், அந்தேரி சப்வே உள்ளிட்ட பகுதிகள் தண்ணீரில் தத்தளித்தன.
இதேபோல குர்லா, சயான் உள்ளிட்ட பகுதிகளிலும் சாலையில் தேங்கிய மழை நீரால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மின்சார ரெயில்களும் தாமதமாக இயக்கப்பட்டன.
மும்பை தவிர தானே, பால்கர், நவிமும்பை பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக மழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக நவிமும்பையில் ஒரு சில பகுதிகளில் ஒரே நாளில் 20 செ.மீ. மழை கூட பதிவாகி இருந்தது.
இந்தநிலையில் இன்று மும்பை, தானே, பால்கர் மாவட்டங்களில் மிகவும் பலத்த மழை பெய்யும் என சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. ஆனால் எதிர்பார்த்தது போல பலத்த மழை பெய்யவில்லை. எனினும் நகரில் அனைத்து இடங்களிலும் பரவலாக மழை பெய்தது. எனினும் மழை காரணமாக பொது மக்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை.
ஏரிகளின் நீர் மட்டம்
இதேபோல கடந்த சில நாட்களாக மும்பைக்கு குடிநீர் வழங்கும் நீர் பிடிப்பு பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக ஏரிகளின் நீர்மட்டம் கிடு, கிடுவென அதிகரித்தது. இதில் நேற்று காலை 6 மணி நிலவரப்படி மும்பைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர் மட்டம் 3 லட்சத்து 75 ஆயிரத்து 514 லட்சம் மில்லியன் லிட்டராக உள்ளது. இது ஏரிகளின் மொத்த கொள்ளளவான 14 லட்சத்து 47 ஆயிரத்து 363 லட்சம் மில்லியன் லிட்டரில் 25.94 சதவீதம் ஆகும். இது கடந்த 2 ஆண்டுகளில் ஜூலை 8-ந் தேதி இருந்த ஏரிகளின் நீர் மட்டத்தை விட அதிகம் ஆகும்.
கடந்த ஆண்டு இதே நாளில் ஏரிகளில் 18.21 சதவீமும், 2020-ல் 17.50 சதவீதம் தண்ணீர் இருந்தது குறிப்பிடத்தக்கது.
குடிநீர் வெட்டு ரத்து
கடந்த மாத இறுதி வரை ஏரிகளின் நீர் மட்டம் 10 சதவீதத்திற்கு குறைவாகவே இருந்தது. இதையடுத்து மும்பையில் 10 சதவீத குடிநீர் வெட்டு அமல்படுத்தப்பட்டது. இந்தநிலையில் ஏரிகளின் நீர்மட்டம் அதிகரித்து இருப்பதால், நகரில் அமலில் இருந்த குடிநீர் வெட்டு ரத்து செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்து உள்ளது. மும்பையில் ஏரிகளின் நீர் மட்டம் அதிகரித்து குடிநீர் வெட்டு ரத்து செய்யப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
மும்பையில் கடந்த 1-ந் தேதி முதல் நகரில் 75 செ.மீ.க்கும் அதிகமாக மழை பெய்து உள்ளது. மும்பையில் ஜூலை மாத சராசரி மழை பதிவே 85.5 செ.மீ. தான் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இன்னும் ஒரிரு நாட்களில் நகரில் ஜூலை மாதத்தில் சராசரியாக பெய்யும் அளவை விட கூடுதல் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.