சகாப்பூரில் ரூ.11 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மருத்துவ அதிகாரி கைது
தானே மாவட்டம் சகாப்பூரில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் ரூ.11 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மருத்துவ அதிகாரி கைது செய்யப்பட்டார்
தானே,
தானே மாவட்டம் சகாப்பூரில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் ரூ.22 ஆயிரம் மதிப்புள்ள மருந்து கட்டண ரசீது கேட்டு மருத்துவ அதிகாரியிடம் விண்ணப்பித்து இருந்தார். இதனை பரிசீலனை செய்த அதிகாரி மருந்து கட்டண ரசீது போலியானது என கண்டறிந்தார். இதனால் விண்ணப்பதாரரிடம் 50 சதவீதம் அதாவது ரூ.11 ஆயிரம் லஞ்சமாக தரும்படி கேட்டு உள்ளார். இல்லையெனில் பதிவேட்டில் தவறுதலாக பதிவு செய்து பணியில் அலட்சியமாக இருப்பதாக உயர் அதிகாரிகளிடம் புகார் செய்யப்போவதாக மிரட்டினார். இதனால் விண்ணப்பதாரர் பணம் தருவதாக கூறி சம்பவம் குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் படி போலீசார் கொடுத்த யோசனைப்படி ஆரம்ப சுகாதார மையத்தில் இருந்த மருத்துவ அதிகாரியை அவர் சந்தித்து லஞ்ச பணம் ரூ.11 ஆயிரத்தை கொடுத்தார். பணத்தை மருத்துவ அதிகாரி வாங்கியபோது, அங்கு வந்த லஞ்சஒழிப்பு போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் அவர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.