ஜூகு கடலில் ஜெல்லி மீன்கள்; பொது மக்களுக்கு மாநகராட்சி எச்சரிக்கை
ஜுகு கடற்கரையில் ஆபத்தான ஜெல்லி மீன்கள் உலவுவதாக பொதுமக்கள், சுற்றுலா பயணிகளுக்கு மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது
மும்பை,
மும்பை ஜூகு கடற்கரையில் கடந்த சில நாட்களுக்கு ஜெல்லி மீன் கடித்து சிலர் காயமடைந்தனர். இந்தநிலையில் நடந்த ஆய்வில் ஜூகு கடற்கரையில் ஆபத்தான ஜெல்லி, ஸ்டிங்ரே மீன்கள் இருப்பது தெரியவந்தது. இந்த மீன்கள் மனிதர்களுக்கு காயம் ஏற்படுத்த கூடியதாகும். இந்தநிலையில் நேற்று மீன்வளத்துறை அதிகாரிகள், மாநகராட்சி மூத்த அதிகாரிகள் ஜூகு கடற்கரையில் ஆய்வு செய்தனர். ஆய்வுக்கு பிறகு கடற்கரையில் ஜெல்லி, ஸ்டிங்ரே மீன்கள் குறித்து எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டது. இதில், " ஜெல்லி, ஸ்டிங்ரே மீன்கள் காணப்படுவதால் பொது மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஆடை, மூட்டு வரை அணியும் காலணி இல்லாமல் கடலுக்குள் செல்ல வேண்டாம்" என மாநகராட்சி எச்சரித்து உள்ளது. ஆகஸ்ட், அக்டோபர் மாதங்களில் அதிகளவில் ஜெல்லி, ஸ்டிங்ரே மீன்கள் கரைக்கு வரும் என மீன்வளத்துறையினர் தெரிவித்து உள்ளனர். இதில் ஸ்டிங்ரே மீன்களின் கூர்மையான முள் மனிதர்களின் தோலை கிழித்து காயம் ஏற்படுத்த கூடியதாகும். அதேபோல ஜெல்லி மீன்கள் 2000 ஆயிரத்திற்கும் அதிகமான வகைகள் உள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இவற்றில் சில மீன்கள், உயிரை குடிக்கும் அளவுக்கு அதிக விஷத் தன்மை கொண்டவையாகும். ஆனால் ஜூகு கடற்கரையில் காணப்படும் ஜெல்லி மீன் வகைகளில் அதிகமான விஷத்தன்மை இல்லாவிட்டாலும், அவை கடித்தால் உடலில் மின்சாரம் பாய்ந்தபோன்ற வலி அல்லது தீக்காயம் ஏற்பட்ட உணர்வு, வீக்கம், எரிச்சல் ஏற்படும். இந்த மீன்கள் கடித்தால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் முன் உடனடியாக உப்பு தண்ணீரால் காயத்தை கழுவுமாறு டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.