மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவர்
மும்பையில் நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவர், கூட்டாளியுடன் கைது செய்யப்பட்டார்.
மும்பை,
மும்பையில் நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவர், கூட்டாளியுடன் கைது செய்யப்பட்டார்.
மனைவிக்கு கத்திக்குத்து
மும்பை செம்பூர் பகுதியில் கணவரை பிரிந்த தீபாலி என்ற பெண் தாயுடன் வசித்து வந்தார். அழகு கலை நிபுணராக இருந்தார். நேற்று இரவு தீபாலி செம்பூர் எம்.ஜி. ரோடு பகுதியில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு அவரது கணவர் சதீஷ் சாவ்லே (வயது40) கூட்டாளி சுவப்னிலுடன் வந்தார். அவர்கள் திடீரென தீபாலியை கத்தியால் சரமாரியாக குத்தினர்.
பின்னர் அவர்கள் அங்கு இருந்த தப்பியோட முயன்றனர். எனினும் அந்த பகுதியில் இருந்தவர்கள் 2 பேரையும் மடக்கி பிடித்தனர். தகவல் அறிந்து சென்ற போலீசார் தீபாலியை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
2 பேர் கைது
மேலும் சதீஷ் சாவ்லே, சுவப்னிலை பிடித்து வேனில் அழைத்து சென்றனர். அப்போது சதீஷ் சாவ்லே மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை கத்தியால் குத்தியதை ஒப்புக்கொண்டார்.
இந்தநிலையில் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்ட தீபாலி கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக அவரை பரிசோதித்த டாக்டர்கள் கூறினர்.
இதையடுத்து சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த திலக்நகர் போலீசார் சதீஷ் சாவ்லே, சுவப்னிலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.