அஜித்பவார் கட்சி பணியாற்ற விரும்புவதில் மகிழ்ச்சி - சுப்ரியா சுலே கூறுகிறார்


அஜித்பவார் கட்சி பணியாற்ற விரும்புவதில் மகிழ்ச்சி - சுப்ரியா சுலே கூறுகிறார்
x
தினத்தந்தி 23 Jun 2023 12:45 AM IST (Updated: 23 Jun 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் அஜித்பவார் கட்சி பணியாற்ற விரும்புவதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று சுப்ரியா சுலே கூறியுள்ளார்.

மும்பை,

தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் அஜித்பவார் கட்சி பணியாற்ற விரும்புவதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று சுப்ரியா சுலே கூறியுள்ளார்.

அஜித்பவார் பேச்சு

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தேசிய செயல் தலைவர் பதவி சமீபத்தில் கட்சி தலைவர் சரத்பவாரின் மகளும், எம்.பி.யுமான சுப்ரியா சுலேவுக்கு ஒதுக்கப்பட்டது. மற்றொரு செயல் தலைவராக பிரபுல் படேல் நியமிக்கப்பட்டார். இந்தநிலையில் நேற்று முன்தினம் கட்சியின் நிறுவன தின நிகழ்ச்சியில் மூத்த தலைவர் அஜித்பவார் "எனக்கு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் பதவியில் விருப்பம் இல்லை. கட்சி பணி செய்யவே விரும்புகிறேன்" என்று பேசினார். இதுகுறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய செயல் தலைவர் சுப்ரியா சுலே கூறியதாவது:-

மகிழ்ச்சி அடைகிறேன்

கட்சியில் உள்ள அதிகமான தலைவர்கள் தங்களை கட்சி பணியில் ஈடுபடுத்தி கொள்வது நல்லதுதான். கட்சியின் மூத்த தலைவர்கள் அனைவரும் கட்சி அமைப்பில் பணியாற்றியவர்கள். அஜித்பவார் கட்சிபணி ஆற்றுவதாக தெரிவித்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். சேவை, கவுரவம் மற்றும் சுயமரியாதை ஆகியவை தேசியவாத காங்கிரஸ் கட்சியின் இலக்குகள் ஆகும். ஒரு சகோதரியாக, எனது சகோதரர் அஜித்பவாரின் அனைத்து ஆசைகளும் நிறைவேற வாழ்த்துகளை கூறி கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

மாநில அளவில் பதவி

மேலும் நிருபர்கள் அஜித்பவாருக்கு கட்சியில் மாநில அளவில் பதவி வழங்கப்படும் என்று வெளியாகும் தகவல் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், "இது கட்சியின் உள் விவகாரம்" என்றார். அதேபோல கடந்த ஆண்டு சிவசேனாவில் அதிருப்தி அணி முயற்சி தோல்வி அடைந்திருந்தால் ஏக்நாத் ஷிண்டே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டு இருப்பார் என்று தீபக் கேசர்கர் கூறியது குறித்து கேட்டதற்கு பதில் அளித்த அவர், "அவர் (தீபக் கேசர்க்கர்) பேசுவது உண்மையாக இருந்தால், அது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது" என்றார்.


Next Story