யூ-டியூப் வீடியோவை லைக் செய்தால் பணம்; பெண் தொழில் அதிபரிடம் ரூ.55 லட்சம் நூதன மோசடி - மர்ம கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு
யூ-டியூப் வீடியோவை லைக் செய்தால் பணம் சம்பாதிக்கலாம் என ஆசைவார்த்தை கூறி பெண் தொழில் அதிபரிடம் நூதன முறையில் ரூ.55 லட்சம் மோசடி செய்த மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
மும்பை,
யூ-டியூப் வீடியோவை லைக் செய்தால் பணம் சம்பாதிக்கலாம் என ஆசைவார்த்தை கூறி பெண் தொழில் அதிபரிடம் நூதன முறையில் ரூ.55 லட்சம் மோசடி செய்த மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
லைக் செய்தால் பணம்
மும்பையை சேர்ந்த 50 வயது பெண் தொழில் அதிபருக்கு சமீபத்தில் வாட்ஸ்அப்பில் குறுந்தகவல் ஒன்று வந்தது. அதில், யூ-டியூப் வீடியோக்களை லைக் செய்தால் அதிக பணம் சம்பாதிக்கலாம் என கூறப்பட்டு இருந்தது. இதையடுத்து பெண் தொழில் அதிபர் குறுந்தகவல் அனுப்பிய நபரை தொடர்பு கொண்டு பேசினார். அந்த நபர் பெண் தொழில் அதிபரை ஒரு குறிப்பிட்ட யூ-டியூப் வீடியோவை லைக் செய்து, அதற்கான ஸ்கீரின் ஷாட்டை அனுப்புமாறு கூறினார். பெண் தொழில் அதிபரும் அவர் சொன்னதை செய்தார். இதையடுத்து அவரின் வங்கி கணக்கிற்கு ரூ.150 கிடைத்தது. தொடர்ந்து பெண் தொழில் அதிபர் மேலும் 2 வீடியோக்களை லைக் செய்தார். இதற்காக அவருக்கு ரூ.300 கிடைத்தது.
ரூ.55 லட்சம் மோசடி
இந்தநிலையில் பெண் தொழில் அதிபரை தொடர்பு கொண்டு ஒருவர் பேசினார். அவர் யூ-டியூப் லைக் தொழிலில் முதலீடு செய்தால் அதிக லாபம் பார்க்கலாம் என ஆசைவார்த்தை கூறினார். இதையடுத்து பெண் தொழில் அதிபர் முதலில் சிறிய தொகையை முதலீடு செய்தார். உடனடியாக அவருக்கு ரூ.4 ஆயிரத்து 950 வருவாய் கிடைத்தது. அதன்பிறகு பெண் தொழில் அதிபருக்கு யூ-டியூப் லைக் கும்பல் மீது அபார நம்பிக்கை ஏற்பட்டது. அவர் கும்பல் கூறிய வங்கிக்கணக்கிற்கு ரூ.55 லட்சம் வரை அனுப்பினார். ஆனால் அவருக்கு எந்த லாபமும் கிடைக்கவில்லை. கொடுத்த பணமும் திரும்ப கிடைக்கவில்லை. மேலும் பெண் தொழில் அதிபரால் மர்ம கும்பலை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பெண் சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தார். புகார் குறித்து வழக்குப்பதிவு செய்த சைபர் கிரைம் போலீசாா் மோசடி கும்பலின் வங்கி கணக்கில் இருந்த ரூ.21 லட்சத்தை முடக்கினர். மேலும் பெண் தொழில் அதிபரிடம் நூதன முறையில் பணமோசடி செய்த மர்ம கும்பலை வலைவீசி தேடிவருகின்றனர்.