நாசிக் அருகே, சாலை தடுப்பு சுவரில் கார் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி
நாசிக் அருகே சாலை தடுப்பு சுவரில் கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியானார்கள்.
மும்பை,
நாசிக் அருகே சாலை தடுப்பு சுவரில் கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியானார்கள்.
கார் டயர் வெடித்து விபத்து
மராட்டிய மாநிலம் ஷீரடியை சேர்ந்த சிலர் குடும்பத்தினரை ஹஜ் பயணத்துக்கு வழியனுப்பி வைக்க மும்பை வந்தனர். பின்னர் நேற்று முன்தினம் இரவு அவர்கள் காரில் மும்பையில் இருந்து ஷீரடிக்கு புறப்பட்டனர். காரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் இருந்தனர். கார் நேற்று அதிகாலை 1 மணியளவில் மும்பை- நாக்பூர் சம்ருத்தி விரைவு நெடுஞ்சாலையில் நாசிக் மாவட்டம் சின்னார் தாலுகா கம்பாலே சிவர் பகுதியில் சென்று கொண்டு இருந்தது. அப்போது திடீரென காரின் டயர் வெடித்ததாக கூறப்படுகிறது.
இதனால் கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பு சுவரில் பயங்கர வேகத்தில் மோதியது. மோதிய வேகத்தில் காரின் முன் பகுதி சுக்குநூறாக நொறுங்கியது. காரில் இருந்தவர்கள் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடினர்.
4 பேர் பலி
தகவல் அறிந்து சென்ற போலீசார் காரில் சிக்கியிருந்தவர்களை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இதில் ரசாக் அகமது(55), சத்தார் சேக்(65), சுல்தானா(50) ஆகியோர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர். மேலும் பையாஸ் சேக் (40) சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.
படுகாயமடைந்த மற்ற 4 பேரில் 3 பேர் ஷீரடி ஆஸ்பத்திரியிலும், ஒருவர் நாசிக் ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து வாவி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மராட்டியத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் தான் மும்பை -நாக்பூர் சம்ருத்தி விரைவு நெடுஞ்சாலையின் ஒரு பகுதி திறக்கப்பட்டது. அந்த சாலை திறக்கப்பட்ட நாள் முதல் அதில் அதிகளவில் விபத்துகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.