முன்னாள் மந்திரி அனில் தேஷ்முக் ஆஸ்பத்திரியில் அனுமதி
சிறையில் அடைக்கப்பட்டு இருந்த முன்னாள் மந்திரி அனில் தேஷ்முக் உடல்நல குறைவு காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
மும்பை,
சிறையில் அடைக்கப்பட்டு இருந்த முன்னாள் மந்திரி அனில் தேஷ்முக் உடல்நல குறைவு காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
சிறையில் அனில் தேஷ்முக்
மராட்டிய உள்துறை மந்திரியாக இருந்த அனில் தேஷ்முக் மீது, முன்னாள் மும்பை போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங் ஓட்டல், பார்களில் இருந்து மாமூல் வசூலிக்க போலீசாரை கட்டாயப்படுத்தியதாக குற்றம் சாட்டினார். இந்த குற்றச்சாட்டை அடுத்து அவர் தனது பதவியை இழக்க நேரிட்டது.
மேலும் இந்த புகார்கள் தொடர்பாக அமலாகத்துறையினர் அனில் தேஷ்முக் மீது பண மோசடி வழக்கு பதிவு செய்தனர்.
இதைதொடர்ந்து 72 வயதான முன்னாள் மந்திரி கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் கைது செய்யப்பட்டார். அந்த நாள் முதல் சிறையில் உள்ளார்.
வக்கீல் தகவல்
இந்த நிலையில் அனில் தேஷ்முக் உடல்நல குறைவு காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக அவரது வக்கீல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், முன்னாள் மந்திரி அனில் தேஷ்முக் உயர் ரத்த அழுத்தம் மற்றும் நெஞ்சு வலி காரணமாக அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து அவர் கடந்த 25-ந் தேதி மாநகராட்சி நடத்தி வரும் கே.இ.எம். ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்" என்றார்.
இந்த மாத தொடக்கத்தில் தனியார் ஆஸ்பத்திரியில் தோள்பட்டை அறுவை சிகிச்சை செய்ய அனுமதி கோரிய அனில் தேஷ்முக்கின் மனுவை கோர்ட்டு நிராகரித்தது. அவர் ஜே.ஜே. அரசு மருத்துவமனையிலேயே இதற்கான சிகிச்சை பெறலாம் என கோர்ட்டு தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.