3-வது நாளாக டிரைவர்கள் வேலை நிறுத்தம்; 1,375 'பெஸ்ட்' பஸ்கள் ஓடவில்லை - பயணிகள் கடும் அவதி


3-வது நாளாக டிரைவர்கள் வேலை நிறுத்தம்; 1,375 பெஸ்ட் பஸ்கள் ஓடவில்லை - பயணிகள் கடும் அவதி
x
தினத்தந்தி 5 Aug 2023 1:00 AM IST (Updated: 5 Aug 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

பெஸ்ட் பஸ் டிரைவர்களின் 3-வது நாள் வேலை நிறுத்த போராட்டத்தால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

மும்பை,

பெஸ்ட் பஸ் டிரைவர்களின் 3-வது நாள் வேலை நிறுத்த போராட்டத்தால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

டிரைவர்கள் போராட்டம்

மும்பை மாநகராட்சியின் பெஸ்ட் நிறுவனம் சார்பில் 3 ஆயிரத்து 100 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பெஸ்ட் நிறுவனத்தின் கீழ் தனியார் ஒப்பந்ததாரர்கள் மூலமும் பஸ்கள் இயக்கப்படுகின்றன. தனியார் ஒப்பந்ததாரர்கள் மூலம் நகரில் 1,671 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் தனியார் ஒப்பந்ததாரர்கள் மூலம் இயக்கப்படும் பஸ் டிரைவர்கள், ஊதிய உயர்வு கேட்டு கடந்த புதன்கிழமை வேலை நிறுத்தப்போராட்டத்தில் இறங்கினர். முதல் நாளில் 160 பஸ்கள் மட்டும் இயக்கப்படாமல் இருந்தது. நேற்று முன்தினம் மேலும் பல டெப்போக்களில் இருந்து டிரைவர்கள் போராட்டத்தில் குதித்தனர். இதன் காரணமாக நேற்று முன்தினம் 1,000-க்கும் அதிகமான பஸ்களை இயக்க முடியாமல் போனது.

3-வது நாளாக பஸ்கள் ஓடவில்லை

இந்தநிலையில் ஒப்பந்த நிறுவன டிரைவர்களின் போராட்டம் நேற்று 3-வது நாளாக தொடர்ந்தது. போராட்டத்தில் கொலபா, ஒர்லி, சிவாஜிநகர், காட்கோபர், தேவ்னார், முல்லுண்டு, சாந்தாகுருஸ், ஒஷிவாரா, மகாதானே உள்ளிட்ட 20 டெப்போக்களை சேர்ந்த டிரைவர்கள் ஈடுபட்டனர். இதனால் நேற்று நகரில் 1,375 பெஸ்ட் பஸ்கள் இயக்கப்படவில்லை. இதன் காரணமாக நேற்று மும்பையில் பெஸ்ட் பஸ் சேவை பாதிக்கப்பட்டது. 10 நிமிடங்களுக்கு ஒரு பஸ் இயக்கப்பட்டு வந்த இடத்தில், 30 முதல் 1 மணி நேரத்துக்கு ஒரு பஸ்கள் இயக்கப்பட்டன. குறிப்பாக காட்கோபர், முல்லுண்டு, சிவாஜிநகர், ஒர்லி உள்ளிட்ட பஸ் டெப்போக்களில் இருந்து பஸ் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது. பஸ் சேவை பாதிப்பு காரணமாக மும்பையில் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். ரெயில் நிலையங்கள், தாதர் போன்ற முக்கியமான இடங்களில் பஸ்சுக்காக பயணிகள் கூட்டம் அலைமோதியது. பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்து பஸ்களில் பயணம் செய்தனர். மாநில அரசு உடனடியாக பெஸ்ட் ஒப்பந்த டிரைவர்கள் பிரச்சினையில் தீர்வு காண வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.


Next Story