மும்பை-ஆமதாபாத் நெடுஞ்சாலையில் விபத்து: ஆம்னி பஸ் மீது கார் மோதி பெண் உள்பட 4 பேர் பலி
மும்பை-ஆமதாபாத் நெடுஞ்சாலையில் ஆம்னி பஸ் மீது கார் மோதிய விபத்தில் பெண் உள்பட 4 பேர் பலியாகினர். மேலும் பஸ்சில் இருந்த 4 பேர் படுகாயமடைந்தனர்.
வசாய்,
மும்பை-ஆமதாபாத் நெடுஞ்சாலையில் ஆம்னி பஸ் மீது கார் மோதிய விபத்தில் பெண் உள்பட 4 பேர் பலியாகினர். மேலும் பஸ்சில் இருந்த 4 பேர் படுகாயமடைந்தனர்.
கட்டுப்பாட்டை இழந்த கார்
குஜராத் மாநிலம் சதார் பகுதியை சேர்ந்தவர் இப்ராகிம் தாவூத் (வயது60). இவரது மனைவி ஆசையாபென் (57) மற்றும் இஸ்மாயில் தேசே (42) ஆகியோருடன் மும்பை நோக்கி சொகுசு காரில் நேற்றுமுன்தினம் இரவு புறப்பட்டு சென்றனர். இந்த காரை சூரத்தை சேர்ந்த முகமது அப்துல் சலாம் (36) என்பவர் ஓட்டி சென்றார்.
நேற்று அதிகாலை 3.30 மணி அளவில் பால்கர் மாவட்டம் தகானு தாலுகா அருகே மும்பை-ஆமதாபாத் நெடுஞ்சாலையில் கார் வந்த போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் கார் நிலைதடுமாறி தடுப்பு சுவரை உடைத்து கொண்டு எதிர்சாலைக்கு சென்றது.
4 பேர் பலி
அப்போது மும்பையில் இருந்து ஆமதாபாத் நோக்கி சென்ற ஆம்னி பஸ் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கார் அப்பளம்போல் நொறுங்கியதால் அதில் இருந்த 4 பேர் இடிபாடுகளில் சிக்கினர். மேலும் பஸ்சில் இருந்த டிரைவர் உள்பட 3 பேரும் காயமடைந்தனர். தகவல் அறிந்த காசா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். காரை மீட்க தீயணைப்பு படையினர் வரவழைக்கப்பட்டனர். பின்னர் கேஸ் கட்டர் மூலம் காரின் இடிபாடுகளில் சிக்கி இருந்த 4 பேரை பிணமாக மீட்டனர்.
விபத்தில் காயமடைந்த பஸ் டிரைவர் உள்பட 4 பேரை மீட்டு காசாவில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டிரைவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.