மராட்டியத்தில் ஒரே மாதத்தில் கோடீஸ்வரர் ஆன தக்காளி விவசாயி - ரூ.3 கோடி சம்பாதித்த அதிசயம்
ஒரே மாதத்தில் தக்காளி விவசாயி ஒருவர் கோடீஸ்வரர் ஆன அதிசயம் மராட்டியத்தில் நடந்துள்ளது.
புனே,
ஒரே மாதத்தில் தக்காளி விவசாயி ஒருவர் கோடீஸ்வரர் ஆன அதிசயம் மராட்டியத்தில் நடந்துள்ளது.
கோடீஸ்வரர்
நாடு முழுவதும் தக்காளி விலை உயர்வு ராக்கெட் வேகம் கண்டுள்ளது. இந்த விலை உயர்வு பொதுமக்களின் வயிற்றில் புளியை கரைத்துள்ள நிலையில், தக்காளி பயிரிட்ட விவசாயிகள் எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அவர்களில் பலர் லட்சாதிபதிகளாகி விட்டனர். இந்தநிலையில் மராட்டியத்தில் தக்காளி விவசாயி ஒருவர் கோடீஸ்வரர் ஆகி விட்டார். புனே மாவட்டம் ஜூன்னார் தாலுகா பஞ்கர் கிராமத்தை சேர்ந்த ஈஸ்வர் கெய்கர் (வயது 36) என்ற விவசாயி தான் அந்த அதிர்ஷ்டசாலி. இவர் தனக்கு சொந்தமான 12 ஏக்கர் நிலத்தில் தக்காளி பயிரிட்டு இருந்தார். இதில் தக்காளி அறுவடை மூலம் அவருக்கு ஒரே மாதத்தில் ரூ.3 கோடி வருமானம் கிடைத்துள்ளது.
ஜாக்பாட்
தக்காளி அடிமாட்டு விலைக்கு போகும் செய்தியை அடிக்கடி கேட்டு இருப்போம். அப்போது விரக்தி அடையும் விவசாயிகள் அறுவடை செய்த தக்காளியை சாலையில் கொட்டுவதையும், தக்காளி பயிரை அழிப்பதையும் வழக்கமாக வைத்து இருந்தனர். இதேபோன்று தான் ஈஸ்வர் கெய்கரும் கடந்த 2 மாதங்களுக்கு முன் விலை போகாத தக்காளியை வீணடித்து இருக்கிறார். இருப்பினும் மனம் தளராமல் மீண்டும் தக்காளி பயிரிட்ட அவருக்கு தற்போது ஜாக்பாட் அடித்து இருக்கிறது. இதுபற்றி விவசாயி ஈஸ்வர் கெய்கர் கூறியதாவது:-
இன்னும் ரூ.50 லட்சம் கிடைக்கும்
எனக்கு 18 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இதில் 12 ஏக்கரில் தக்காளி பயிரிட்டேன். கோடை வெயிலில் இருந்து பயிரை பாதுகாக்க கடின முயற்சி மேற்கொண்டேன். அதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. கடந்த ஜூன் 11-ந் தேதி எனக்கு தக்காளி கிலோ ஒன்றுக்கு ரூ.37 கிடைத்தது. கடந்த 18-ந் தேதி கிலோ ரூ.110-க்கு விற்றேன். ஜூன் 11-ந் தேதி முதல் இதுநாள் வரை 3 லட்சத்து 60 ஆயிரம் கிலோ தக்காளி அறுவடை செய்து அதன் மூலம் ரூ.3 கோடி சம்பாதித்துள்ளேன். இன்னும் ரூ.50 லட்சம் வருவாய் கிடைக்கும் என்று நம்புகிறேன். தக்காளி சாகுபடி மற்றும் போக்குவரத்து என சுமார் ரூ.40 லட்சம் செலவு ஆனது.
நஷ்டங்களை சந்தித்தேன்
கடந்த காலங்களில் தக்காளியால் நஷ்டங்களை சந்தித்தேன். 2011-ம் ஆண்டு ரூ.15 லட்சம் முதல் ரூ.16 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டது. கடந்த ஆண்டில் உற்பத்தி செலவு அளவுக்கு தான் வருமானம் கிடைத்தது. கடந்த மே மாதம் கூட கிலோவுக்கு ரூ.2.50 மட்டுமே விலை போனதால் தக்காளியை சாலையில் கொட்டினேன். தற்போது நல்ல லாபம் கிடைத்து இருப்பது மகிழ்ச்சியை தந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
விலை உயர்வு பற்றி வியாபாரி கருத்து
தக்காளி விலை உயர்வு பற்றி புனே பகுதி ஏ.பி.எம்.சி. மார்க்கெட் வியாபாரி சஞ்சய் காலே கூறுகையில், "நான் கடந்த 15 ஆண்டுகளாக இந்த வியாபாரத்தில் உள்ளேன். இதுபோன்ற தக்காளி விலை உயர்வை ஒருபோதும் பார்க்கவில்லை. விவசாய உற்பத்தி செலவு எகிறி விட்டது. கோடைக்காலங்களில் தக்காளி பயிரை கடுமையாக நோய் தாக்கியது. எனவே தக்காளி பயிரிடுவதை விவசாயிகள் பலர் கைவிட்டனர். இதுபோன்ற காரணங்களால் தான் தக்காளி அதிகப்படியான விலை உயர்வு கண்டுள்ளது" என்றார்.