புனே அருகே கார் மீது கன்டெய்னர் லாரி மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி
புனே அருகே அதிகாலையில் கார் மீது கன்டெய்னர் லாரி மோதிய கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலியாகினர். தப்பிஓடிய டிரைவரை போலீசார் தேடிவருகின்றனர்.
புனே,
புனே அருகே அதிகாலையில் கார் மீது கன்டெய்னர் லாரி மோதிய கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலியாகினர். தப்பிஓடிய டிரைவரை போலீசார் தேடிவருகின்றனர்.
டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர்
ராய்காட் மாவட்டம் பன்வெல் பகுதியை சேர்ந்தவர் சஞ்சய் மாஸ்கே(வயது53). இவர் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். இந்தநிலையில் இவர் தனது சொந்த ஊரான அகமது நகர் மாவட்டம் சேகாவ் கிராமத்தில் நடந்த உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க குடும்பத்துடன் காரில் புறப்பட்டு சென்றார்.
அவருடன் சகோதரர் ராம் (45), மனைவி சாதனா ராம் மாஸ்கே (35), விஷால் (16), ராஜூ (7) சிறுமி ஹர்சதா (4) ஆகியோரும் சென்றிருந்தனர்.
கன்டெய்னர் லாரி மீது மோதல்
நிகழ்ச்சி முடிந்த பின்னர் நேற்று முன்தினம் இரவு பன்வெல் நோக்கி காரில் திரும்பினர். புனேயில் இருந்து 55 கி.மீ. தொலைவில் உள்ள ரஞ்சன்காவ் எம்.ஐ.டி.சி அருகே இன்று அதிகாலை 1.30 மணி அளவில் கார் வந்தபோது, டேராடூனில் இருந்து எலக்ட்ரானிக் பொருட்களை ஏற்றிக்கொண்டு ரஞ்சன்காவ் நோக்கி கண்டெய்னர் லாரி ஒன்று சென்றது. அதிகாலை வேளையில் வாகன நெரிசல் இல்லாதால் கன்டெய்னர் லாரி டிரைவர் சாலை விதிமுறையை மீறி ஒருவழி சாலையில் ஓட்டிச்சென்றார்.
அப்போது திடீரென கார் மீது கன்டெய்னர் லாரி பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானு. இந்த கோர விபத்தில் இடிபாடுகளில் சிக்கி காரில் இருந்த சிறுமி உள்பட 6 பேர் படுகாயமடைந்தனர்.
5 பேர் பலி
விபத்து நடந்த உடனே கன்டெய்னர் லாரி டிரைவர் அங்கிருந்து தப்பிஓடி விட்டார். இதனை கண்ட அப்பகுதியினர் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் படி போலீசார் ஆம்புலன்சுடன் வந்தனர். படுகாயமடைந்த 6 பேரையும் மீட்டு சிரூர் மற்றும் சிக்ராப்பூரில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் 6 பேரில் சிறுமி உள்பட 5 பேர் வரும் வழியிலேயே உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். மேலும் படுகாயமடைந்த சாதனா ராம் மாஸ்கேவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி சென்ற டிரைவரை பிடிக்க விசாரணை நடத்தி வருகின்றனர்.
-------------------