விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் 2,200 மண்டல்களுக்கு மும்பை மாநகராட்சி அனுமதி
விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்துக்கு மும்பையில் 2 ஆயிரத்து 200 மண்டல்களுக்கு மாநகராட்சி அனுமதி வழங்கி உள்ளது.
மும்பை,
விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்துக்கு மும்பையில் 2 ஆயிரத்து 200 மண்டல்களுக்கு மாநகராட்சி அனுமதி வழங்கி உள்ளது.
3,487 விண்ணப்பம்
மும்பையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. வருகிற 31-ந் தேதி தொடங்க உள்ள கொண்டாட்டத்துக்கு மும்பை நகரம் முழுவீச்சில் தயாராகி வருகிறது.
இந்தநிலையில் விநாயகர் சதுர்த்தியையொட்டி மண்டல்கள் சார்பில் சிலைகள் பிரதிஷ்டை செய்ய அனுமதி கேட்டு கடைசி நாளான நேற்று முன்தினம் மாலை 6.30 மணி வரை மும்பை மாநகராட்சிக்கு 3 ஆயிரத்து 487 விண்ணப்பங்கள் வந்து இருந்தன.
2,200-க்கு அனுமதி
இதில் 2 ஆயிரத்து 220 விண்ணப்பங்களை மாநகராட்சி ஏற்றுக்கொண்டது. அதாவது 2 ஆயிரத்து 220 மண்டல்களுக்கு விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. 474 விண்ணங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள விண்ணப்பங்கள் பரீசிலனையில் உள்ளன. வழக்கமாக மும்பை மாநகராட்சி தங்களுக்கு வரும் விண்ணப்பங்களில் 80 முதல் 85 சதவீதத்தை ஏற்று கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு மாநகராட்சி விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் தொடர்பாக 2 ஆயிரத்து 507 விண்ணப்பங்கள் வந்தன. இதில் 2 ஆயிரத்து 48 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
மக்கள் நடந்து செல்லும், வாகனங்கள் செல்லும் பாதையை தடுக்கும் வகையில் சிலை பிரதிஷ்டை செய்யும் மண்டல்களுக்கு அனுமதி வழங்க கூடாது என மாநகராட்சிக்கு கடந்த 2015-ம் ஆண்டில் மும்பை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.