கைவினை பொருட்கள் வளர்ச்சி வாரியத்தில் முறைகேடு: ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா பரபரப்பு


கைவினை பொருட்கள் வளர்ச்சி வாரியத்தில் முறைகேடு: ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா பரபரப்பு
x

மாநில அரசின் கைவினை பொருட்கள் வளர்ச்சி வாரியத்தில் முறைகேடு நடந்துள்ளதாக தலைவர் மீது ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா பரபரப்பு புகார் கூறியுள்ளார்.

பெங்களூரு:

கைவினை பொருட்கள்

கர்நாடக அரசின் கைவினை பொருட்கள் வளர்ச்சி வாரிய தலைவராக இருப்பவர் பேளூர் ராகவேந்திரஷெட்டி. அந்த வாரியத்தின் நிர்வாக இயக்குனராக பணியாற்றி வருபவர் ரூபா. இவர் ஐ.பி.எஸ். அதிகாரி ஆவார். இந்த நிலையில் தலைமை செயலாளருக்கு ரூபா, ஒரு அறிக்கை அனுப்பியுள்ளார். இதில் கைவினை பொருட்கள் வளர்ச்சி வாரியத்தில் அதன் தலைவர் பேளூர் ராகவேந்திரஷெட்டி, தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி முறைகேடு செய்துள்ளார் என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறும் பரிந்துரை செய்துள்ளார்.

அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தலைமை செயலாளருக்கு அந்த வாரிய தலைவர், வாரிய நிர்வாக இயக்குனர் ரூபா சரியாக அலுவலகத்திற்கு வருவது இல்லை என்றும், தனது அனுமதி இல்லாமல் டெண்டர் விட்டுள்ளார் என்றும் கூறி கடிதம் எழுதினார். இதனால் கைவினை பொருட்கள் வளர்ச்சி வாரிய தலைவருக்கும், நிர்வாக அதிகாரிக்கும் இடையேயான பனிப்போர் பகிரங்கமாகியுள்ளது.

அனுமதி கிடைக்கவில்லை

அந்த தலைவரின் முறைகேடுகள் குறித்து ஊடகங்களிடம் தெரிவிக்க அனுமதி வழங்குமாறு தலைமை செயலாளருக்கு ரூபா கடிதம் எழுதியுள்ளாா். இதுவரை அவருக்கு ஊடகங்களிடம் பேச அனுமதி கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். அப்போது சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக பணியாற்றிய ரூபா, அந்த சிறையில் ஆய்வு நடத்தினார். அப்போது சசிகலாவுக்கு சட்ட விதிகளை மீறி சிறையில் சொகுசு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதாகவும், அதற்காக ரூ.2 கோடி லஞ்சம் கைமாறி இருப்பதாகவும் கூறி அதை அம்பலப்படுத்தினார்.

குற்றப்பத்திரிகை

இதனால் ரூபாவுக்கும், சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி.க்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த விவகாரம் கர்நாடகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ஊழல் தடுப்பு படையினர் வழக்கு பதிவு செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். அதன் மீது பெங்களூரு கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.


Next Story