நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகளை பேசுவேன் - திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. ஆவேசம்


நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகளை பேசுவேன் - திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. ஆவேசம்
x

நாடாளுமன்றத்துக்கு பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள் என அறிவிக்கப்பட்டவற்றை பேசுவேன். என்னை இடைநீக்கம் செய்து கொள்ளுங்கள் என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. கூறினார்.

புதுடெல்லி,

மக்களவை, மாநிலங்களவையில் சபையின் மாண்பை குலைக்கக்கூடிய வார்த்தைகளை பயன்படுத்த அனுமதி கிடையாது. அவற்றை பயன்படுத்தினால், சபை தலைவர்கள் நீக்கி விடுவார்கள்.

வருகிற 18-ந்தேதி, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குகிறது. இதையொட்டி, நாடாளுமன்றத்துக்கு பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள் அடங்கிய புதிய பட்டியலை மக்களவை செயலகம் நேற்று முன்தினம் வெளியிட்டது.

அதில், வெட்கக்கேடு, துரோகம், சர்வாதிகாரி, சர்வாதிகாரம், ஊழல், முதலை கண்ணீர், ஒட்டுகேட்பு உள்ளிட்ட இந்தி, ஆங்கில வார்த்தைகள் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில், இதற்கு எதிர்க்கட்சிகள் நேற்று கடும் கண்டனம் தெரிவித்தன. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

இது புதிய இந்தியாவுக்கான புதிய அகராதி. பிரதமர் மோடியின் செயல்பாடுகளை விமர்சித்து, விவாதங்களில் பயன்படுத்தும் வார்த்தைகள் அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளன. பயன்படுத்தக்கூடாத வார்த்தைகளை வைத்து ஒரு வாக்கியம் அமைக்கிறேன். 'வார்த்தைஜால சர்வாதிகாரி, தனது பொய்களும், திறமையின்மையும் அம்பலப்படுத்தப்படும்போது முதலைக்கண்ணீர் வடிக்கிறார்' என்று அவர் கூறியுள்ளார்.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா கூறியிருப்பதாவது:-

மத்திய அரசு, ஊழலில் ஈடுபடும்போது அதை ஊழல் என்று சொல்லக்கூடாது என்பதுதான் மத்திய அரசின் நோக்கம் போலும் என்று அவர் கூறியுள்ளார்.

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையன் கூறியிருப்பதாவது:-

நாடாளுமன்றம் விரைவில் கூடும் நிலையில், எம்.பி.க்களுக்கு வாய்ப்பூட்டு உத்தரவு போடப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் பேசும்போது, வெட்கக்கேடு, திட்டினார், துரோகம், ஊழல், திறமையின்மை, போலித்தனம் போன்ற அடிப்படை வார்த்தைகளை கூட பயன்படுத்த அனுமதிக்கமாட்டார்கள். நான் மேற்கண்ட எல்லா வார்த்தைகளையும் பயன்படுத்துவேன். என்னை இடைநீக்கம் செய்து கொள்ளுங்கள். ஜனநாயகத்துக்காக போராடுவோம் என்று அவர் கூறியுள்ளார்.

சிவசேனா மூத்த தலைவர் பிரியங்கா சதுர்வேதி, ''வாவ் மோடிஜி வாவ்' என்று மட்டுமே பேச முடியும் என்ற கேலிச்சித்திரம் உண்மையாகி விட்டது'' என்று கூறியுள்ளார்.

இதற்கிடையே, இந்த குற்றச்சாட்டுகளுக்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:-

எதிர்க்கட்சிகள் தேவையின்றி கூச்சல் போடுகின்றன. இந்த வார்த்தைகள், யோசனை யோ அல்லது உத்தரவோ அல்ல. இவையெல்லாம் நாடாளுமன்ற, சட்டசபைகளில் சபாநாயகர்கள் ஏற்கனவே நீக்கிய வார்த்தைகளின் தொகுப்புதான்.

காமன்வெல்த் நாடுகளின் நாடாளுமன்றங்களில் இவை பயன்படுத்தக்கூடாத வார்த்தைகளாக உள்ளன. முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியிலும் இவை தடை செய்யப்பட்டு உள்ளன.

இந்த வார்த்தைகள் ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்படுகின்றன. இவை சபை மாண்புக்கு உகந்ததாக இல்லாவிட்டால், சபாநாயகர்கள் இறுதி முடிவு எடுப்பார்கள். எதிர்க்கட்சிகள் உண்மை புரியாமல் பிரச்சினை எழுப்புகின்றன.

இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.


Next Story