பிரதமர் மோடியை வரவேற்க கவர்னர், முதல்-மந்திரி வராதது ஏன்?: பா.ஜனதா கேள்விக்கு டி.கே.சிவக்குமார் பதில்


பிரதமர் மோடியை வரவேற்க கவர்னர், முதல்-மந்திரி வராதது ஏன்?: பா.ஜனதா கேள்விக்கு டி.கே.சிவக்குமார் பதில்
x
தினத்தந்தி 26 Aug 2023 6:45 PM GMT (Updated: 26 Aug 2023 6:45 PM GMT)

பெங்களூருவுக்கு வந்த பிரதமர் மோடியை வரவேற்க கவர்னர், முதல்-மந்திரி வராதது ஏன்? என்ற பா.ஜனதாவின் கேள்விக்கு டி.கே.சிவக்குமார் பதில் அளித்துள்ளார்.

பெங்களூரு:

பொதுவாக பிரதமர் மோடி எந்த மாநிலத்திற்கு சென்றாலும் அந்த மாநில கவா்னர், முதல்-மந்திரி, அதிகாரிகள் உள்ளிட்டோர் நேரில் வந்து வரவேற்பு அளிப்பது மரபு. அதே போல் நேற்று பிரதமர் மோடி பெங்களூருவுக்கு வந்தபோது அவரை வரவேற்க கவர்னரும், முதல்-மந்திரியும் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் கவர்னரும், முதல்-மந்திரியும் பிரதமரை வரவேற்க வரவில்லை. கர்நாடக அரசின் தலைமை செயலாளர் வந்திதா சர்மா, போலீஸ் டி.ஜி.பி. அலோக்மோகன், பெங்களூரு நகர மாவட்ட கலெக்டர் தயானந்த், பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் தயானந்த் ஆகியோர் வரவேற்றனர்.

பிரதமரை வரவேற்க கவர்னரும், முதல்-மந்திரி, துணை முதல்-மந்திரியும் ஏன் வரவில்லை என்ற கேள்வி எழுந்தது. இதுகுறித்து பா.ஜனதாவை சேர்ந்த முன்னாள் மந்திரி ஆர்.அசோக் கேள்வி எழுப்பியுள்ளார். விதிமுறைப்படி பிரதமரை முதல்-மந்திரி சித்தராமையா வரவேற்கவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறுகையில், பிரதமர் அலுவலகம் ஆர்.அசோக்கை கணக்கில் கொள்ளவில்லை என்பதற்கு அவரது பேச்சே சாட்சி. பிரதமரை வரவேற்க முதல்-மந்திரி செல்லவில்லை என்று அவர் குறை கூறியுள்ளார். எங்களுக்கு அரசியல் அறிவு, வரவேற்பு விதிகள் குறித்த அறிவு உள்ளது. பிரதமரை வரவேற்க அரசு தயாராக இருந்தது. ஆனால் பிரதமர் அலுவலகத்தில் இருந்தே பிரதமரை வரவேற்க வர வேண்டாம் என்று தகவல் வந்தது.

நாங்கள் எழுத்து மூலமாக இதுகுறித்து கேட்டோம். அதன் பிறகு பிரதமர் அலுவலகம் எழுத்து மூலமாக இந்த தகவலை அரசுக்கு தெரியப்படுத்தியது. அதனால் தான் நாங்கள் பிரதமரை வரவேற்க செல்லவில்லை. இதுகுறித்து ஆர்.அசோக் தெரிந்து கொண்டு பேச வேண்டும். நாங்கள் பிரதமர் பதவியை மதிக்கிறோம். நமது விஞ்ஞானிகளை கவுரவிக்க பிரதமர் வந்துள்ளார். நாங்கள் அவரை வரவேற்க தயாராகவே இருந்தோம் என்றார்.


Next Story