காஷ்மீரில் 2 பயங்கரவாதிகளை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த பொதுமக்கள்


காஷ்மீரில் 2 பயங்கரவாதிகளை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த பொதுமக்கள்
x

ஜம்மு காஷ்மீரில் 2 பயங்கரவாதிகளை பொதுமக்களே பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் இரண்டு பயங்கர ஆயுதம் ஏந்திய லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் கிராம மக்களால் சிறைபிடிக்கப்பட்டு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக ஜம்மு-காஷ்மீர் காவல்துறை தெரிவித்துள்ளது.

முன்னதாக ஜம்மு காஷ்மீர் ரியாசி மாவட்டத்தில் உள்ள் துக்‌ஷான் பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் இருவர் பதுங்கியிருந்தனர். இந்த இரண்டு பேரில் ஒருவர் போலீசாரால் தேடப்பட்டு வந்த மிக முக்கிய குற்றவாளி ஆவார். ரஜோரி மாவட்டத்தைச் சேர்ந்த லஷ்கர் அமைப்பின் காமண்டரான தலிப் உசேன், இவர் அந்த மாநிலத்தில் அண்மையில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டவர் ஆவார். இதே போல், பைசல் அக்மத் தர், தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தைச் சேர்ந்தவர்.

இவர்கள் இருவரையும், துக்‌ஷான் கிராம மக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதனைத்தொடர்ந்து ஜம்மு காவல்துறையின் கூடுதல் இயக்குநர் ஜெனரல் (ADGP) மனோஜ் சின்கா அங்குள்ள கிராம மக்களின் துணிச்சலை பாராட்டினார். மேலும் லஷ்கர் அமைப்பை சேர்ந்த இரண்டு பயங்கரவாதிகள், ரியாசி மாவட்டத்தின் துக்சான் கிராம மக்களால் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டனர் என்றும், கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து இரண்டு ஏகே 47 துப்பாக்கிகள், ஏழு கையெறி குண்டுகள் மற்றும் ஒரு கைத்துப்பாக்கி கைப்பற்றப்பட்டுள்ளது என்றும் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த, 2 பயங்கரவாதிகளை பிடித்துக் கொடுத்த கிராம மக்களுக்கு ரூ.5 லட்சம் பரிசுத் தொகையாக வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


Next Story