விரைவு ரோந்து கப்பலை மாலத்தீவிடம் ஒப்படைத்த மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்
விரைவு ரோந்து கப்பல் மற்றும் படை குழுவினரை சுமந்து செல்லும் கப்பல் ஆகியவற்றை மாலத்தீவிடம் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் இன்று ஒப்படைத்து உள்ளார்.
மாலே,
இந்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் மாலத்தீவில் 3 நாட்கள் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். இந்த பயணத்தில் அந்நாட்டு அதிபர் இப்ராகிம் சோலி மற்றும் மாலத்தீவு பாதுகாப்பு துறை மந்திரி மரியா அகமது தீதி ஆகியோரை சந்தித்து பேசினார்.
இந்த பயணத்தின் 2-வது நாளான இன்று இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஹுராவீ என்ற பெயரிடப்பட்ட விரைவு ரோந்து கப்பலானது அந்நாட்டிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. கடலோர மற்றும் கடற்கரையில் இருந்து சற்று உட்பகுதியில் அமைந்த இடங்களுக்கு அதிவிரைவாக சென்று கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள இது உதவும்.
இதேபோன்று, போர் வீரர்களை சுமந்து செல்லும் திறன் பெற்ற எல்.சி.ஏ. வகை கப்பல் ஒன்றும் என மேக் இன் இந்தியா திட்டத்தின்படி இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இந்த இரண்டு கப்பல்களும் முறைப்படி மாலத்தீவு அரசிடம் இன்று ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
இதனை மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் தனது டுவிட்டரில் இன்று தெரிவித்து உள்ளார். இந்திய பெருங்கடல் பகுதியில், அமைதி மற்றும் பாதுகாப்புக்கான நமது பகிரப்பட்ட உள்ளார்ந்த செயல்பாட்டின் அடையாளம் என்று அதில் அவர் தெரிவித்து உள்ளார்.