பக்தர்களை கட்டுப்படுத்துவதில் சிக்கல்: அயோத்தியில் நடைபெறவிருந்த குழந்தை ராமர் சிலை ஊர்வலம் ரத்து


பக்தர்களை கட்டுப்படுத்துவதில் சிக்கல்: அயோத்தியில் நடைபெறவிருந்த குழந்தை ராமர் சிலை ஊர்வலம் ரத்து
x
தினத்தந்தி 8 Jan 2024 10:19 PM GMT (Updated: 9 Jan 2024 7:23 AM GMT)

வருகிற 17-ந்தேதி குழந்தை ராமர் சிலை, அயோத்தியில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அயோத்தி,

அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுவரும் ராமர் கோவிலில் வருகிற 22-ந்தேதி மூலவர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. கருவறையில் 'பால ராமர்' (குழந்தை பருவத்தில் ராமர்) சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. 'பிராண பிரதிஷ்டை' என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திரமோடி, உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

நாடு முழுவதும் இருந்து 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முக்கிய பிரபலங்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வை முன்னிட்டு சிறப்பு விமான சேவை, ரெயில் சேவை உள்பட போக்குவரத்து வசதிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்க ஏதுவாக 300 டன் அரிசி சத்தீஸ்கரில் இருந்து வரவழைக்கப்பட்டு உள்ளது.

அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலில் 2 ராமர் சிலைகள் வைக்கப்படுகின்றன. அதில் ஒரு சிலை ஏற்கனவே அங்கு கடந்த 1949-ம் ஆண்டு பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ள சிலையாகும். இது உற்சவர் சிலையாக இருக்கும். மற்றொரு சிலை, ராமர் கோவில் கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.

இந்த சிலையை வடிப்பதற்கு பெங்களூருவை சேர்ந்த கணேஷ் பட், மைசூரு அருண் யோகிராஜ் மற்றும் ராஜஸ்தான் ஜெய்ப்பூரை சேர்ந்த சத்தியநாராயண பாண்டே ஆகிய 3 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களிடம் வால்மீகி ராமாயணத்தில் கூறப்பட்ட 51 அங்குலம் உயரம் கொண்ட 5 வயது குழந்தை ராமர் தனது கையில் வில்லுடன் காட்சி அளிக்கும் உருவம் வரைந்து கொடுக்கப்பட்டது. அதன்படி சிலை வடிக்க அறிவுறுத்தப்பட்டது.

அவர்கள் 3 பேரும் கடந்த ஜூன் மாதத்தில் சிலை வடிக்கும் பணியினை தொடங்கினர். அதற்கான கற்களை கோவில் அறக்கட்டளையினர் வழங்கினர். அதில் 2 கற்கள், கர்நாடக மாநில வனப்பகுதிகளில் இருந்து எடுக்கப்பட்டன. மற்றொன்று ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள வெள்ளை கற்கள் ஆகும். இந்த 3 சிற்பிகளும், முழுமையாக சிலை வடித்தனர்.

இதில் ஒன்றை தேர்வு செய்ய கடந்த 29-ந்தேதி வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இறுதியாக மைசூருவைச் சேர்ந்த சிற்பி அருண் யோகிராஜ் வடித்த சிலை தேர்வு செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிலைதான் வருகிற 22-ந்தேதி அன்று அயோத்தி ராமர் கோவில் கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இந்த சிலையை வடித்த அருண் யோகிராஜ் குடும்பத்தினர் 4 தலைமுறைகளாக சிலை வடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட இருக்கும் குழந்தை ராமர் சிலையை காண மக்கள் மத்தியில் மிகுந்த ஆர்வமும் எதிர்பார்ப்பும் ஏற்பட்டு உள்ளது. அந்த குழந்தை ராமர் சிலை எப்படி இருக்கும் என்று வடமாநில மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதையடுத்து மூலவர் ராமர் சிலையை வருகிற 17-ந்தேதி உலகுக்கு காட்ட ஸ்ரீராம ஜென்மபூமி அறக்கட்டளை முடிவு செய்துது. அன்றைய தினம் (17-ந்தேதி) குழந்தை ராமர் சிலை அயோத்தியில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், 17-ஆம் தேதி அயோத்தியில் நடைபெறவிருந்த குழந்தை ராமர் சிலை ஊர்வலத்தை ராம ஜென்மபூமி அறக்கட்டளை ரத்து செய்துள்ளது. அதற்கு பதிலாக, அதே நாளில் ராம ஜென்மபூமியின் வளாகத்தில் குழந்தை ராமர் சிலையை பார்வையிட ஏற்பாடு செய்யப்படும் என்று அறக்கட்டளையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.

அயோத்தியில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படவிருக்கும் குழந்தை ராமர் சிலையை தரிசனம் செய்ய பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் வரும்போது, பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்துவது கடினம் என்பதால் ஊர்வலம் ரத்துசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story