டெல்லியில் மொஹல்லா பேருந்து.. இரண்டு வழித்தடங்களில் சோதனை ஓட்டம் தொடங்கியது


Delhi governments mohalla bus service
x

மொஹல்லா பேருந்து சேவை திட்டத்தின்கீழ் மொத்தம் 2,080 பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை மந்திரி கைலாஷ் கலோட் தெரிவித்தார்.

புதுடெல்லி:

டெல்லியில் குறுகிய சாலைகள் உள்ள பகுதிகள் மற்றும் வழக்கமான நீண்ட பேருந்துகளை இயக்க முடியாத அளவுக்கு நெரிசலான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பயன்பெறும் வகையில் சிறிய அளவிலான மொஹல்லா பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டது. தலைநகர் டெல்லி எல்லையின் கடைசி மைல் வரை பேருந்து போக்குவரத்து இணைப்பை உறுதி செய்யும் வகையில் இந்த திட்டம் தொடங்கப்பட்டது.

இந்த பேருந்துகளை இயக்கும் வழித்தடங்கள், பேருந்துகள் இயக்கப்படும் நேரம், பயண கட்டணம் உள்ளிட்ட அம்சங்களை ஆராய்வதற்கு தொழில்நுட்ப குழுவை அரசு அமைத்தது. இந்த குழு அளித்த பரிந்துரையின்படி மொஹல்லா பேருந்துகளை இயக்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

முதற்கட்டமாக இன்று இரண்டு வழித்தடங்களில் மொஹல்லா பேருந்துகளின் சோதனை ஓட்டம் தொடங்கியது. இந்த வழித்தடங்களில் 9 மீட்டர் நீளம் கொண்ட சிறிய மின்சார பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இதுதொடர்பாக போக்குவரத்து துறை மந்திரி கைலாஷ் கலோட் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

மொஹல்லா பேருந்து சேவை திட்டத்தின்கீழ் மொத்தம் 2,080 பேருந்துகள் இயக்கப்படும். இதில், 1,040 பேருந்துகள் டெல்லி போக்குவரத்து கழகம் சார்பிலும், மீதமுள்ளவை மல்டி-மாடல் போக்குவரத்து அமைப்பு சார்பிலும் இயக்கப்படும்.

மஜ்லிஸ் பார்க் முதல் பிரதாசன் என்கிளேவ் வரை, அக்ஷர்தாம் முதல் மயூர் விகார் பேஸ்-3 வரை என இரண்டு வழித்தடங்களில் சோதனை முயற்சியாக மொஹல்லா பேருந்துகள் இயக்கப்படும். ஒரு வாரம் சோதனை ஓட்டம் நடைபெறும். அதன்பின், அடுத்த இரண்டு மூன்று வாரங்களில் திட்டம் மற்ற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story