மணிப்பூரில் சோகம்; நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிக்கு அருகே மற்றொரு நிலச்சரிவு


மணிப்பூரில் சோகம்; நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிக்கு அருகே மற்றொரு நிலச்சரிவு
x

மணிப்பூரில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிக்கு அருகே மற்றொரு நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது.



இம்பால்,



மணிப்பூரில் நோனி மாவட்டத்தில் துப்புல் யார்டு ரெயில்வே நிலையம் அருகே ஜிரிபம் நகரில் இருந்து இம்பால் வரையிலான ரெயில்வே கட்டுமான பணி நடந்து வந்தது. இதற்காக இந்திய ராணுவம் அந்த பகுதியில் முகாமிட்டு பாதுகாப்பு பணியில் ஈடபட்டு வந்தனர்.

இந்நிலையில், அந்த பகுதியில் தொடர் மழை பெய்து வந்தது. இதில் துபுல் ரெயில் நிலைய கட்டிடம் சேதமடைந்தது. இதனை தொடர்ந்து, ராணுவ முகாமுக்கு அருகே கடந்த புதன்கிழமை இரவு திடீரென நில சரிவு ஏற்பட்டது. இரவு வேளை என்பதனால், இதில் பலர் சிக்கி கொண்டு வெளியே வரமுடியாமல் தவித்தனர். அவர்களை மீட்பதிலும் சிக்கல் ஏற்பட்டது.

இதனையடுத்து மீட்பு பணி நடந்து வருகிறது. இதில் ராணுவ வீரர்கள் 13 பேர் மற்றும் பொதுமக்களில் 5 பேர் மீட்கப்பட்டு உள்ளனர். அதே நேரத்தில் 18 ராணுவ வீரர்கள், பொதுமக்களில் 6 பேர் என மொத்தம் 24 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டு உள்ளன. காணாமல் போன ராணுவ வீரர்கள் 12 பேர் மற்றும் பொதுமக்களில் 26 பேரை தேடும் பணி நீடிக்கிறது.

தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. விபத்து பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மீட்பு பணிகளில் மந்த நிலை நிலவுகிறது. மண்ணில் புதையுண்ட வீரர்களை தேட 'வால்-ரேடார்' கருவி பயன்படுத்தப்பட்டு வருகிறது.

தேடுதல் பணியை துரித்தப்படுத்த இன்று காலை புதிய வீரர்கள் அடங்கிய மீட்பு குழுவினர் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இந்திய ராணுவம், அசாம் ரைபிள்ஸ், டெரிடோரியல் ஆர்மி, மாநில மற்றும் தேசிய பேரிடர் நிவாரண படை உள்ளிட்ட வீரர்கள் மூலம் தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

ஜிரிபம் நகரில் இருந்து இம்பால் வரையிலான ரெயில்வே கட்டுமான பணி நடந்து வந்த நிலையில், நில சரிவு ஏற்பட்டு பணிகள் பாதிப்படைந்து உள்ளன. இதனையொட்டிய பகுதியில் மற்றொரு நில சரிவும் ஏற்பட்டு உள்ளது என இன்று காலை மணிப்பூரின் மலையேற்றம் மற்றும் கண்காணிப்பு கூட்டமைப்பு தெரிவித்து உள்ளது.

மணிப்பூரின் வரலாற்றில் அதிக பாதிப்பான விளைவுகளை ஏற்படுத்திய நில சரிவு என முதல்-மந்திரி பைரன் சிங் நேற்று கூறிய நிலையில், மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளை ஊக்கப்படுத்துவதற்காக மீண்டும் ஒரு முறை சம்பவ பகுதிக்கு நேரில் சென்று அவர் பார்வையிட்டார்.

அவர் கூறும்போது, 81 பேர் உயிரிழந்து உள்ளனர். இதில், 55 பேர் இன்னும் சிக்கி உள்ளனர். மண்ணின் தன்மையால் உயிரிழந்த அனைவரின் உடல்களையும் மீட்பதற்கு 2 முதல் 3 நாட்கள் வரை ஆகும் என கூறினார்.


Next Story