'சோனியா, ராகுலை பயங்கரவாதிகள் போல நடத்துகிறார்கள்' - காங். தலைவர்கள் ஆவேசம்


சோனியா, ராகுலை பயங்கரவாதிகள் போல நடத்துகிறார்கள் - காங். தலைவர்கள் ஆவேசம்
x

வீடுகளுக்கு முன்பு போலீஸ் குவித்து சோனியா, ராகுல் காந்தியை பயங்கரவாதிகள் போல நடத்துகிறார்கள் என்று காங். தலைவர்கள் குற்றம் சாட்டினார்.

புதுடெல்லி,

'யங் இந்தியன்' அலுவலகத்துக்கு 'சீல்' வைத்து, காங்கிரஸ் தலைவர் சோனியா, ராகுல் ஆகியோர் வீட்டு முன்பு போலீசும் குவிக்கப்பட்டதை தொடர்ந்து கட்சியின் மூத்த தலைவர்களான ஜெய்ராம் ரமேஷ், அஜய் மாக்கன், அபிஷேக் சிங்வி ஆகியோர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அவசர அவசரமாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது சிங்வி கூறுகையில், 'இன்று (நேற்று) நீங்கள் (மத்திய அரசு) ஒரு முற்றுகை மனநிலையை, அச்சம் நிறைந்த சூழலை உருவாக்கியுள்ளீர்கள். இந்தியாவின் பழமையான அரசியல் கட்சியின் தலைமைக்கு எதிராக புலனாய்வு அதிகாரிகள் எண்ணற்ற வகையில் நிறுத்தப்படுவதை முழு நாடும் பார்க்கிறது.

நீங்கள் இந்த நிறுவனத்தை, இந்த கட்சியை, எங்கள் தலைவர்களை (சோனியா, ராகுல்) பயங்கரவாதிகள் போல நடத்துகிறீர்கள். இது அற்ப அரசியலின் மிக மோசமான வடிவமாகும்' என்று ஆவேசமாக தெரிவித்தார்.

அவமதிப்பது, மிரட்டுவது, பிரச்சினைகளை திசை திருப்புவது மட்டுமே இந்த நடவடிக்கையின் ஒரே நோக்கம் என சாடிய அவர், விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், ஜி.எஸ்.டி போன்ற பிரச்சினைகளை ஊடகங்களில் எழுப்புவதை தவிர்க்கவே இந்த செயல்களை மேற்கொண்டு வருவதாகவும் குற்றம் சாட்டினார்.

ஆனால் பொறுப்பான எதிர்க்கட்சி என்ற முறையில் எந்த விலை கொடுத்தேனும் எங்களின் கடமையை நிறைவேற்றுவோம் என்றும் சூளுரைத்தார்.


Next Story