நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவம் முன்பே திட்டமிட்டது; மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு


நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவம் முன்பே திட்டமிட்டது; மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு
x

புதிய நாடாளுமன்றத்தில் பெரிய அளவில் பாதுகாப்பு குறைபாடுகள் காணப்படுகின்றன என்று பானர்ஜி கூறியுள்ளார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவைக்குள் கடந்த புதன்கிழமை மதியம் 1 மணியளவில் பூஜ்ய நேரம் நடந்து கொண்டிருந்தது. அப்போது, பார்வையாளர்கள் வரிசையில் இருந்து 2 பேர் திடீரென அவைக்குள் குதித்தனர். அவர்கள் மஞ்சள் வண்ண புகையை வெளிப்படுத்தும் உலோக பொருளை வெடிக்க செய்தனர். அதில் ஒருவர் மேஜைகள் மீது குதித்தபடி ஓடினார்.

இதேபோன்று நாடாளுமன்றத்திற்கு வெளியேயும் 2 பேர் வண்ண புகையை வெளிப்படுத்தும் கேன்களை பயன்படுத்தி, போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் 4 பேரும் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் ஒருவர் சாகர் சர்மா என்பதும், மற்றொருவர் கர்நாடகாவின் மைசூரு நகரை சேர்ந்த டி. மனோரஞ்சன் என்பதும் அவர் ஓர் என்ஜினீயர் என்றும் தெரிய வந்தது.

நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டு கோஷங்களை எழுப்பியவர்கள் அன்மோல் மற்றும் நீலம் என அடையாளம் காணப்பட்டனர். இந்த சம்பவத்தில் பின்னணியில் செயல்பட்ட முக்கிய புள்ளியான லலித் ஜா என்பவர் கடந்த வியாழக்கிழமை போலீசில் சரண் அடைந்திருக்கிறார். அவர் 7 நாள் போலீஸ் காவலுக்கு கொண்டு செல்லப்பட்டார். மகேஷ் குமவாத் 6-வது நபராக கைது செய்யப்பட்டார். லலித் ஜாவுக்கும் வங்காளத்திற்கும் தொடர்பு உள்ளது என பா.ஜ.க. குற்றச்சாட்டு தெரிவித்தது.

இந்நிலையில், மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி இன்று கூறும்போது, லலித் ஜாவுக்கும் வங்காளத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை. சிலர் வங்காளத்திலும், குஜராத்திலும், தெலுங்கானாவிலும், ராஜஸ்தானிலும் மற்றும் பிற மாநிலங்களிலும் தங்கினர் என கூறப்படுகிறது.

ஆனால், இது முன்பே திட்டமிடப்பட்ட சம்பவம். இது நுண்ணறிவு பிரிவின் ஒட்டுமொத்த தோல்வியாகும். புதிய நாடாளுமன்றத்தில் பெரிய அளவில் பாதுகாப்பு குறைபாடுகள் காணப்படுகின்றன என்று பானர்ஜி கூறியுள்ளார்.

இதற்கு முன் மேற்கு வங்காள பா.ஜ.க. தலைவர் சுகந்த மஜும்தார் கூறும்போது, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் தபஸ் ராய்க்கும், லலித் ஜாவுக்கும் தொடர்பு உள்ளது என்று கூறி, அதுபற்றிய புகைப்படம் ஒன்றை பகிர்ந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story