கர்நாடகத்தில் பா.ஜனதாவின் முடிவு தொடங்கியது என்கிறார் சித்தராமையா


கர்நாடகத்தில் பா.ஜனதாவின் முடிவு தொடங்கியது என்கிறார் சித்தராமையா
x
தினத்தந்தி 14 July 2023 6:45 PM GMT (Updated: 14 July 2023 6:46 PM GMT)

கர்நாடகத்தில் பா.ஜனதாவின் முடிவு தொடங்கியுள்ளது என்றும், வருகிற தேர்தல்களில் அக்கட்சி தோல்வி அடையும் என்றும் மேல்-சபையில் முதல்-மந்திரி சித்தராமையா கூறியுள்ளார்.

பெங்களூரு-

கர்நாடகத்தில் பா.ஜனதாவின் முடிவு தொடங்கியுள்ளது என்றும், வருகிற தேர்தல்களில் அக்கட்சி தோல்வி அடையும் என்றும் மேல்-சபையில் முதல்-மந்திரி சித்தராமையா கூறியுள்ளார்.

மக்கள் செல்வாக்கு

கர்நாடக மேல்-சபையில் நேற்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடைபெற்றது. இதில் பல்வேறு உறுப்பினர்கள் கலந்து கொண்டு பேசினர். இந்த விவாதத்திற்கு முதல்-மந்திரி சித்தராமையா நேற்று பதிலளித்து பேசும்போது கூறியதாவது:-

நாட்டையே வென்றுவிட்டோம் என்ற மயக்கத்தில் பா.ஜனதாவினர் உள்ளனர். ஆனால் அக்கட்சிக்கு கர்நாடக மக்கள் சரியான பாடம் புகட்டி இருக்கிறார்கள். பிரதமர் மோடியின் புகழை வைத்து வெற்றி பெற்று விடலாம் என்று பா.ஜனதாவினர் நினைத்தனர். ஆனால் உங்களின் எண்ணத்திற்கு பெரிய அடி விழுந்துள்ளது. பிரதமர் மோடிக்கு இருக்கும் மக்கள் செல்வாக்கு குறைய தொடங்கியுள்ளது.

பா.ஜனதாவை ஏற்கவில்லை

கர்நாடகத்தில் பா.ஜனதாவை வெற்றி பெற வைக்க பிரதமர் மோடி மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்துள்ளன. வரும் நாட்களில் பா.ஜனதாவை மக்கள் ஆதரிக்க மாட்டார்கள். எல்லா இடங்களிலும் பா.ஜனதா தோல்வி அடைந்து வருகிறது. கலபுரகி மாவட்டம் சேடம் தொகுதியில் பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொண்டார். ஆனால் அந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

இதன் மூலம் பிரதமர் மோடிக்கு மக்களின் ஆதரவு குறைந்து வருகிறது தெளிவாக தெரிகிறது. சட்டசபை தேர்தலின்போது பிரதமர் மோடி 28 முறை கர்நாடகத்திற்கு வந்து பிரசாரம், ஊர்வலம் நடத்தினார். என்ன மாயாஜாலம் செய்தாலும், கர்நாடக மக்கள் பா.ஜனதாவையும், மோடியையும் ஏற்கவில்லை. இதற்கு முன்பு எந்த பிரதமரும் ஒரு மாநில சட்டசபை தேர்தலில் இந்த அளவுக்கு பிரசாரம் செய்தது இல்லை.

அமைதி தோட்டம்

பிரதமர் நாட்டை வழிநடத்தும் பணியை செய்ய வேண்டும். அதை விட்டுவிட்டு ஒரு மாநில சட்டசபை தேர்தலில் இந்த அளவுக்கு பிரசாரம் செய்ய வேண்டிய அவசியம் என்ன இருந்தது?. பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொண்ட அனைத்து இடங்களிலும் காங்கிரஸ் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. மோடியின் மக்கள் செல்வாக்கு குறைந்து வருவதை பா.ஜனதாவினர் ஒப்புக்கொள்ள வேண்டும்.

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் மோடியின் தலைமையில் தேர்தலை சந்தித்தால் பா.ஜனதா வெற்றி பெறாது. கர்நாடகம் அனைத்து தரப்பு மக்களின் அமைதி தோட்டம். ஒவ்வொரு சாதி, மதத்தையும் சரிசமமாக பார்க்க வேண்டும் என்று எல்லா மதங்களும் சொல்கின்றன. எந்த மதமும் குறைந்தது கிடையாது. எந்த மதமும் மேலானது இல்லை. ஒவ்வொரு மதமும் உயர்ந்ததே.

தலைவணங்க மாட்டோம்

மற்றவர்களின் கலாசாரம், வாழ்க்கையை கவுரவிக்க வேண்டும். இது தான் சமுதாயத்தின் சொத்து. மதங்கள் வெவ்வேறாக இருக்கலாம். ஆனால் அவற்றின் குணங்கள் ஒன்றே. மனிதர்களுக்கு இடையே தடுப்புச்சுவரை கட்டுவது தான் மதவாதம். மதங்கள் இடையே தீமூட்டுவது பயங்கரமானது. நாம் வேற்றுமையில் ஒற்றுமை காண்பதில் நம்பிக்கை கொண்டவர்கள் தான்.

அனைவரையும் நேசித்து கவுரவிக்க வேண்டும். நாங்கள் அரசியல் சாசனத்திற்கு தலைவணங்குகிறோம். வேறு எந்த விஷயத்திற்கும் நாங்கள் தலைவணங்க மாட்டோம். இதில் எந்த மாற்றமும் இல்லை. இதை தான் அரசியல் சாசனத்தில் மதச்சார்பின்மை என்று அழைக்கப்படுகிறது. கால சக்கரம் மாறிக்கொண்டே இருக்கிறது. கர்நாடகத்தில் இருந்து பா.ஜனதாவின் முடிவு தொடங்கியுள்ளது. வரும் நாட்களில் நடைபெறும் தேர்தல்களில் பா.ஜனதா தோல்வி அடையும்.

இவ்வாறு சித்தராமையா பேசினார்.


Next Story