அரபிக்கடலில் பாறை மீது மோதி படகு கவிழ்ந்தது; 5 மீனவர்கள் பத்திரமாக மீட்பு


அரபிக்கடலில் பாறை மீது மோதி படகு கவிழ்ந்தது; 5 மீனவர்கள் பத்திரமாக மீட்பு
x

காபு அருகே மீன்பிடிக்க சென்றபோது அரபிக்கடலில் பாறை மீது மோதி படகு கவிழ்ந்தது. இதில் 5 மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

மங்களூரு;

பாறையில் படகு மோதியது

உடுப்பி மாவட்டம் காபு பகுதியை சேர்ந்த மீனவர்களான ரஞ்சேஷ், லாரன்ஸ், மாதவா, தர்மராஜ் ஆகியோர் உள்பட 5 பேர் மீன்பிடிக்க அரபிக்கடலுக்கு படகில் சென்றனர். அவர்கள் காபு கலங்கரை விளக்கத்தில் இருந்து 15 நாட்டிகல் மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது, திடீரென்று என்ஜினில் பழுது ஏற்பட்டு படகு நடுக்கடலில் நின்றது. இதனால் அவர்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர்.

அந்த சமயத்தில் அரபிக்கடலில் ஏற்பட்ட ராட்சத அலையால் படகு அடித்து செல்லப்பட்டு கடலுக்குள் இருந்த பாறையில் பலமாக மோதியது. இதில் சேதமடைந்த படகு கடலில் கவிழ்ந்தது.

5 மீனவர்கள் மீட்பு

மேலும் படகில் இருந்த 5 மீனவர்களும் கடலுக்குள் தூக்கி வீசப்பட்டனர். இதனால் அவர்கள் கடலில் மூழ்கி தத்தளித்து கொண்டிருந்தனர். அந்த சமயத்தில், மற்றொரு படகில் மீனவர்கள் அந்த வழியாக வந்தனர். அப்போது 5 மீனவர்கள் கடலில் தத்தளிப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள், கடலில் தத்தளித்த 5 மீனவர்களையும் பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மற்றொரு படகில் மீனவர்கள் சரியான நேரத்துக்கு வந்ததால் 5 மீனவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.


Next Story