வழுக்கை தலை உடையவர்களுக்கு மாதம் ரூ.6 ஆயிரம் ஓய்வூதியம் வேண்டும் புதிதாக சங்கம் அமைத்து கோரிக்கை
தெலுங்கானா மாநிலத்தில் வழுக்கை தலை உடையவர்கள் சேர்ந்து சங்கம் அமைத்துள்ளனர்.
நகரி,
தெலுங்கானா மாநிலத்தில் வழுக்கை தலை உடையவர்கள் சேர்ந்து சங்கம் அமைத்துள்ளனர். இந்த சங்கத்தில் தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்தப்பட்டு, பாலையா என்பவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தலைவர் பதவியை ஏற்ற பாலையா தங்களது கோரிக்கை அடங்கிய அறிக்கை ஒன்றை மாநில முதல்-மந்திரி சந்திரசேகரராவுக்கு அனுப்பி உள்ளார்.
அதில் அவர், 'சமூகத்தில் வழுக்கை தலையுடன் இருப்பவர்கள் பல பிரச்சினைகளையும், அவமானத்தையும் எதிர்கொள்கிறார்கள். அதிலும் சிறு வயதிலேயே பலருக்கும் வழுக்கை ஏற்பட்டு விடுகிறது. இதனால் அவர்கள் படும் வேதனை சொல்லி மாளாது. இவர்கள் 4 பேருடன் சேர்ந்து வெளியே செல்ல தயங்குகிறார்கள்.
வழுக்கை தலையுடன் இருப்பவர்களுக்கு திருமணம் நடப்பதும் கஷ்டமாக இருக்கிறது. வழுக்கை தலை இருப்பவர்கள் தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு மன உளைச்சலுக்கு ஆளாகி விடுகிறார்கள்.
ஊனமுற்றவர்கள், கைவிடப்பட்டவர்கள், தீராத வியாதியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எல்லாம் ஓய்வூதியம் வழங்குகிறீர்கள். அதுபோல் வழுக்கை தலை உடையவர்களுக்கும் மாதம் ரூ.6 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். பொங்கல் பண்டிகைக்குள் ஓய்வூதியம் கொடுக்காவிட்டால் பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம். தலைமைச்செயலகத்தை முற்றுகையிடுவோம்' என்று கூறியுள்ளார்.