தெலுங்கானா எம்.எல்.ஏ ராஜா சிங் ஜாமீனில் வெளிவந்த நிலையில் மீண்டும் கைது
ஜாமீனில் வெளிவந்த தெலுங்கானா எம்.எல்.ஏ ராஜா சிங் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் வீடியோ வெளியிட்டுள்ளார்.
ஐதராபாத்,
தெலுங்கானா மாநிலம் கோஷ்யமஹல் தொகுதி பாஜக எம்.எல்.ஏ. டி ராஜா சிங், இஸ்லாமிய மதத்தை சேர்ந்த நகைச்சுவை கலைஞர் முனாவர் பரூக்கியை விமர்சித்தும், இஸ்லாமிய மத கடவுளின் இறை தூதர் குறித்து நுபுர் சர்மா தெரிவித்த கருத்துக்களை மேற்கொள்காட்டியும் பேசினார்.
இஸ்லாமிய மத கடவுளின் இறைதூதர் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாகவும், டி ராஜாவை கைது செய்ய வேண்டும் என்றும் இஸ்லாமிய மதத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, பாஜக எம்.எல்.ஏ. டி.ராஜாவை போலீசார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். டி.ராஜாவை கட்சியில் இருந்து பாஜக சஸ்பெண்ட் செய்தது. மேலும், இது தொடர்பாக 10 நாட்களுக்குள் விளக்கம் அளிக்கவும் டி.ராஜாவுக்கு பாஜக உத்தரவிட்டது.
கைது செய்யப்பட்ட டி.ராஜா ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த கோர்ட்டு டி.ராஜாவை ஜாமீன் வழங்கியது. இதையடுத்து, அவர் சிறையில் இருந்து வெளியே வந்தார். இந்த நிலையில் கோர்ட்டு தடையை மீறி, "வகுப்பு சூழல்" குறித்த புதிய வீடியோ ஒன்றை அவர் இன்று வெளியிட்டார். இதையடுத்து வீடியோ வெளியிட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு, டி.ராஜா இன்று மீண்டும் கைது செய்யப்பட்டார்.
அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:-
"தெலுங்கானாவில் போலீசார் அசாதுதீன் ஓவைசியின் கைப்பொம்மைகளாக உள்ளனர். ஐதராபாத் எம்.பி.யாக உள்ள ஏ.ஐ.எம்.ஐ.எம் தலைவர் ஓவைசியின் ஆதரவாளர்களுக்கு, கல் எறிய சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. எப்.ஐ.ஆர். கிடையாது. அவர்கள் கைது செய்யப்படவில்லை.
முதல் மந்திரி கே சந்திரசேகர் ராவின் மகனும் நகராட்சி மேம்பாட்டு மந்திரியுமான கே.டி.ராமாராவ் எந்த மதத்தையும் நம்பாத நாத்திகர். அவரது கட்சியான தெலுங்கானா ராஷ்டிர சமிதி, ஓவைசியுடன் இணைந்து முஸ்லீம் வாக்கு வங்கி விளையாட்டை விளையாடுகிறது. தெலுங்கானாவில் வகுப்புவாத பதட்டத்திற்கான காரணத்தை நான் உங்களுக்குச் சொல்கிறேன். மூன்று மாதங்களுக்கு முன்பு ஐதராபாத்தில் நடைபெற இருந்த முனாவர் பரூக்கி என்ற நகைச்சுவை கலைஞரின் நிகழ்ச்சியை காவல்துறையின் ஆதரவுடன் ரத்து செய்தோம்.
இதையடுத்து முனாவர் பரூக்கி கே.டி.ராமாராவை தொடர்பு கொண்டார். கேடிஆர் அவருக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுத்தார். நான் கைது செய்யப்பட்டேன். நான்கு ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட 5,000 போலீசாரை நியமித்து, அவர் நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தினார். கே.டி.ஆர். முனாவர் பரூக்கியை எங்கள் கடவுள்களைப் பற்றி கேலி செய்ய அனுமதித்தார்.
கடவுள்களை அவமதிக்கும் நிகழ்ச்சியை நடத்த அனுமதிக்கக் கூடாது என, டி.ஜி.பி., கமிஷனரிடம் கோரிக்கை விடுத்திருந்தேன். இந்த நிகழ்ச்சியை ரத்து செய்தால் பாஜகவுக்குத்தான் லாபம். ஆனால் இந்த நிகழ்ச்சி நடந்தால் டிஆர்எஸ் மற்றும் ஏஐஎம்ஐஎம் வெற்றிபெறும். இவர்கள் முஸ்லீம் வாக்கு வங்கி விளையாட்டை விளையாடுகிறார்கள்.
நான் ஒரு மதத்தை குறிவைக்கவில்லை, தனிநபர்களை குறிவைத்தேன் என்பதை எனது கட்சிக்கு விளக்குகிறேன். கோர்ட்டு என்னை ஊடகங்களில் பேச வேண்டாம் என்று கூறியுள்ளது. ஆனால் சூழ்நிலை என்னை இன்று இதைச் செய்ய நிர்ப்பந்தித்தது" என்று கூறியுள்ளார்.