அடிகுழாயில் தண்ணீருக்கு பதில் சாராயம் வந்த ஆச்சரியம்... விசாரணையில் திடுக் தகவல்


அடிகுழாயில் தண்ணீருக்கு பதில் சாராயம் வந்த ஆச்சரியம்... விசாரணையில் திடுக் தகவல்
x

மத்திய பிரதேசத்தில் அடிகுழாய் ஒன்றில் தண்ணீருக்கு பதில் சாராயம் வந்த நிலையில் போலீசார் விசாரணையில் திடுக் தகவல்கள் வெளிவந்துள்ளன.



குணா,


மத்திய பிரதேசத்தின் குணா மாவட்டத்தில் பான்புரா கிராமத்தில் விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டு இருந்த அடிகுழாய் ஒன்றில் இருந்து, தண்ணீருக்கு பதில் நாட்டு சாராயம் வருகிறது என்ற தகவல் பரவியது.

இதனை தொடர்ந்து, விவரம் அறிந்து சென்ற போலீசார் அதுபற்றி விசாரணை நடத்தினர். இதில், கால்நடை தீவனத்தின் கீழே மண்ணுக்குள் சில டிரம்கள் புதைத்து வைக்கப்பட்டு இருந்துள்ளன. அதில், சாராயம் நிரம்பி இருந்துள்ளது.

அந்த பதுக்கி வைக்கப்பட்டு இருந்த சாராயத்துடன், அடிகுழாய் ஒன்று இணைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து, போலீசார் சந்தேகத்தின் பேரில் அந்த அடிகுழாயை அடித்துள்ளனர். அதில், அடிகுழாயில் தண்ணீருக்கு பதில் மதுபானம் வந்து உள்ளது.

இதனை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவற்றை பறிமுதல் செய்தனர். பண்ணை நிலங்களில் கால்நடை தீவனங்கள் பரவி கிடந்தன. அவற்றுக்கு கீழே 8 டிரம்களில், பதுக்கி இருந்த அதிக அளவிலான நாட்டு சாராயம் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.

சட்டவிரோத சாராய விற்பனையில் ஈடுபட்ட நபர்கள், நிலத்திற்கு அடியில் குழி தோண்டி அவற்றில் டிரம்களை வைத்து சாராயம் நிரப்பி வந்துள்ளனர். இந்த டிரம்களில் இருந்து, அடிகுழாய் ஒன்றின் உதவியுடன் சாராயம் அடித்து, வெளியே எடுக்கப்பட்டு உள்ளது.

அதன்பின் அவை, சிறு சிறு பாக்கெட்டுகள் மற்றும் 5 லிட்டர் கேன்களில் அடைத்து கொண்டு செல்லப்பட்டு உள்ளன. எனினும், இந்த விசாரணையில் சாராய விற்பனை கும்பல் சம்பவ பகுதியில் இருந்து தப்பி சென்று விட்டது.

இதனுடன் தொடர்புடைய 8 பேர் அடையாளம் காணப்பட்டு உள்ளனர். அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது என குணா மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு பங்கஜ் கூறியுள்ளார். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.


Next Story