பயங்கரவாதிகளுக்கு சில நாடுகள் புகலிடம் அளிக்கின்றன; ஷெபாஸ் ஷெரீப் முன்னிலையில் பிரதமர் மோடி பரபரப்பு பேச்சு


பயங்கரவாதிகளுக்கு சில நாடுகள் புகலிடம் அளிக்கின்றன; ஷெபாஸ் ஷெரீப் முன்னிலையில் பிரதமர் மோடி பரபரப்பு பேச்சு
x

பயங்கரவாதிகளுக்கு சில நாடுகள் புகலிடம் அளிக்கின்றன என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் முன்னிலையில் பிரதமர் மோடி பரபரப்பாக பேசியுள்ளார்.

புதுடெல்லி,

டெல்லியில், ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாடு பிரதமர் மோடி தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில், பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய நாடுகளை தாக்கும் வகையில் பேசினார். அவர் பேசும்போது, மண்டல மற்றும் சர்வதேச அமைதிக்கு பயங்கரவாதம் ஓர் அச்சுறுத்தலாக உள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிராக நாம் போராட வேண்டும் என கூறியுள்ளார்.

எல்லை கடந்த பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளிக்கும் சில நாடுகளை, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகள், கண்டனம் தெரிவிக்க தயங்க கூடாது என கூறியுள்ளார். பயங்கரவாத விசயத்தில் இரட்டை நிலைப்பாடு இருக்க கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.

பயங்கரவாதத்திற்கு நிதி அளிக்கும் விசயங்களை எதிர்கொள்ள ஒத்துழைப்பை நாம் அதிகரிக்க வேண்டும். நமது நாடுகளில் இளைஞர்களை பயங்கரவாதத்தில் செயல்களுக்கு ஈர்க்க கூடிய விசயங்களை நிறுத்துவதற்கான கூடுதல் நடவடிக்கைகளை நாம் எடுக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

உஸ்பெகிஸ்தான் நாட்டின் சமர்கண்ட் பகுதியில் கடந்த ஆண்டு செப்டம்பரில் ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாடு (எஸ்.சி.ஓ.) நடந்தது. இந்த ஆண்டு ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டை மெய்நிகர் காட்சி வழியே இந்தியா நேற்று (செவ்வாய் கிழமை) தலைமை தாங்கி நடத்தியது.

இந்தியா முதன்முறையாக தலைமையேற்று நடத்தும் இந்த மாநாட்டில் சீன அதிபர் ஜீ ஜின்பிங், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆகியோருடன் மத்திய ஆசிய நாடுகளை சேர்ந்த பல தலைவர்களும் கலந்து கொண்டனர். ரஷிய அதிபர் விளாடிமிர் புதினும் மாநாட்டில் கலந்து கொண்டார்.


Next Story