பாலியல் சர்ச்சை; மேற்கு வங்காள கவர்னர் பதவி விலக வேண்டும் - மம்தா பானர்ஜி


பாலியல் சர்ச்சை; மேற்கு வங்காள கவர்னர் பதவி விலக வேண்டும் - மம்தா பானர்ஜி
x

பாலியல் சர்ச்சையில் சிக்கியுள்ள கவர்னர் சி.வி.ஆனந்த போஸ் உடனடியாக பதவி விலக வேண்டும் என மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.

கொல்கத்தா,

மேற்கு வங்காள கவர்னர் சி.வி.ஆனந்த போஸ் மீது ராஜ்பவனில் பணிபுரியும் தற்காலிக பெண் ஊழியர் ஒருவர் கடந்த 2-ந்தேதி பாலியல் புகார் அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த புகார் குறித்து விசாரணை நடத்த கொல்கத்தா போலீசார் சிறப்பு படை அமைத்தனர்.

ஆனால் ராஜ்பவனுக்குள் கொல்கத்தா போலீசார் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. மேலும் ராஜ்பவனில் பணிபுரியும் பணியாளர்கள் போலீசாரின் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டாம் எனவும் கவர்னர் மாளிகை கேட்டுக்கொண்டது.

அதோடு தன் மீதான குற்றச்சாட்டை கவர்னர் சி.வி.ஆனந்தா போஸ் திட்டவட்டமாக மறுத்து வருகிறார். மேலும் ராஜ்பவனில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களில் கடந்த 2-ந்தேதி பதிவான காட்சிகளை சுமார் 100 பொதுமக்களிடம் ராஜ்பவன் வளாகத்தில் வைத்து அவர் திரையிட்டுக் காட்டினார்.

இந்த நிலையில், பாலியல் சர்ச்சையில் சிக்கியுள்ள கவர்னர் சி.வி.ஆனந்த போஸ் பதவி விலக வேண்டும் என மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "கவர்னர் உடனடியாக பதவி விலக வேண்டும். அவர் பதவியில் நீடிப்பதற்கான காரணத்தை விளக்க வேண்டும். அவர் பதவியில் இருக்கும் வரை நான் ராஜ்பவனுக்கு செல்ல மாட்டேன்" என்று தெரிவித்தார்.


Next Story