கெஸ்காம் அதிகாரி கொலை வழக்கு: போலீஸ்காரர் உள்பட 7 பேர் கைது


கெஸ்காம் அதிகாரி கொலை வழக்கு: போலீஸ்காரர் உள்பட 7 பேர் கைது
x

கெஸ்காம் அதிகாரி கொலையில் போலீஸ்காரர் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

விஜயாப்புரா:

கெஸ்காம் அதிகாரி கொலை

விஜயாப்புரா மாவட்டம் அலமேலா தாலுகா மலகானா என்ற கிராமத்தில் உள்ள கரும்பு தோட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 16-ந் தேதி ஒருவர் தலையில் பலத்த காயத்துடன் பிணமாக கிடந்தார். அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த அலமேலா போலீசார் அந்த நபர் குறித்து விசாரித்தனர். அப்போது அந்த நபர் கலபுரகி மாவட்டம் ஜேவர்கியில் உள்ள கெஸ்காம் அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றி வந்த ராஜசேகர் ரெட்டி (வயது 35) என்பதும், அவரை யாரோ கொலை செய்து உடலை கரும்பு தோட்டத்தில் வீசி சென்றதும் தெரியவந்தது.

இந்த கொலை சம்பவம் குறித்து அலமேலா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் ராஜசேகர் ரெட்டி கொலை வழக்கில் 3 மாதம் கழித்து கலபுரகியை சேர்ந்த 7 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர். அவர்களின் பெயர்கள் பீமாசங்கர், யஷ்வந்த், ஸ்ரீசைலா, சிவக்குமார், சுதாகர், பாபுராவ், சிவானந்தா ஆகும். இவர்களில் பீமாசங்கர் போலீஸ்காரர் ஆவார். இவர் கலபுரகியில் ஒரு போலீஸ் நிலையத்தில் பணியாற்றினார். யஷ்வந்த், கெஸ்காம் ஒப்பந்ததாரர் ஆவார். கைதான 7 பேரிடமும் போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகின.

கடத்தி ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டல்

அதாவது கெஸ்காம் ஒப்பந்ததாரரான யஷ்வந்துக்கும், அதிகாரியான ராஜசேகர் ரெட்டிக்கும் இடையே பழக்கம் இருந்து உள்ளது.

அப்போது ராஜசேகர் ரெட்டியிடம் அதிக பணம் இருப்பது பற்றி அறிந்த யஷ்வந்த், ராஜசேகர் ரெட்டியை கடத்தி பணம் பறிக்க திட்டமிட்டு இருந்தார். இதுகுறித்து அவர் தனது நண்பரான பீமாசங்கர், யஷ்வந்த், ஸ்ரீசைலா, சிவக்குமார், சுதாகர், பாபுராவ், சிவானந்தா ஆகியோரிடம் தெரிவித்து இருந்தார். அதன்படி கடந்த பிப்ரவரி மாதம் 14-ந் தேதி ராஜசேகர் ரெட்டியை ஜேவர்கியில் வைத்து 7 பேரும் கடத்தி உள்ளனர். பின்னர் அவரை ஒரு அறையில் அடைத்து வைத்து ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டி உள்ளனர்.

ஆனால் பணம் கொடுக்க ராஜசேகர் ரெட்டி மறுத்ததால் ஆத்திரம் அடைந்த 7 பேரும் ராஜசேகர் ரெட்டியின் முகத்தில் மிளகாய் பொடியை தூவி அவரை தாக்கி உள்ளனர். மேலும் இரும்பு கம்பியால் தலையில் பலமாக அடித்து உள்ளனர். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த ராஜசேகர் ரெட்டி இறந்து உள்ளார். பின்னர் அவரது உடலை எடுத்து சென்று மலகானா கிராமத்தில் உள்ள கரும்பு தோட்டத்தில் வீசிவிட்டு தப்பி சென்றது தெரியவந்து உள்ளது. கைதான 7 பேர் மீதும் அலமேலா போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.


Next Story