ராஜஸ்தானில் பள்ளி மாணவனுக்கு கத்திக்குத்து; இருதரப்பினர் மோதல் - கார்கள் தீ வைப்பு


ராஜஸ்தானில் பள்ளி மாணவனுக்கு கத்திக்குத்து; இருதரப்பினர் மோதல் - கார்கள் தீ வைப்பு
x

Image Courtesy : ANI

பள்ளி மாணவன் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தால் உதய்பூரில் இரு சமூகங்களுக்கிடையே மோதல் உருவானது.

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள அரசு பள்ளியில் படித்து வரும் 15 வயது மாணவனை சக மாணவன் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பள்ளியில் உணவு இடைவேளையின்போது இரு மாணவர்களும் சண்டையிட்டுக் கொண்டதாகவும், அப்போது ஒரு மாணவன் மற்றொரு மாணவனின் தொடையில் கத்தியால் குத்தியதாகவும் கூறப்படுகிறது.

இதில் காயமடைந்த மாணவனை பள்ளி நிர்வாகத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனிடையே பாதிக்கப்பட்ட மாணவனின் உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தின் முன்பு திரண்டனர். கத்தியால் குத்திய மாணவனையும், அவனது தந்தையையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதே சமயம், இந்த சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு மாணவர்களும் வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக, இரண்டு தரப்பினருக்கு இடையே நகரின் ஒரு சில பகுதிகளில் மோதல்கள் வெடித்தன. அவர்கள் ஒருவர் மீது ஒருவர் கல் வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். 10-க்கும் மேற்பட்ட கார்கள் தீ வைக்கப்பட்டன.

பள்ளி மாணவன் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தால் உதய்பூரில் இரு சமூகங்களுக்கிடையே மோதல் உருவானது. வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.


Next Story