மணிப்பூர்: வதந்தி, போலிச்செய்தியால் பெண்கள் நிர்வாணமாக அழைத்து செல்லப்பட்டு பாலியல் அத்துமீறல் - அதிர்ச்சி தகவல்


மணிப்பூர்: வதந்தி, போலிச்செய்தியால் பெண்கள் நிர்வாணமாக அழைத்து செல்லப்பட்டு பாலியல் அத்துமீறல் - அதிர்ச்சி தகவல்
x
தினத்தந்தி 23 July 2023 2:13 PM GMT (Updated: 23 July 2023 3:03 PM GMT)

மணிப்பூரில் 2 பெண்கள் நிர்வாணமாக அழைத்து செல்லப்பட்டு ஆண்கள் கும்பலால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டனர்.

இம்பால்,

மணிப்பூரின் மொத்த மக்கள் தொகை 34 லட்சமாகும். மலைகள், பள்ளத்தாக்குகள், காடுகள், சமவெளிகள் என பல்வேறு நிலப்பரப்பை கொண்ட மாநிலம் மணிப்பூர் ஆகும்.

மணிப்பூரில் மெய்தி இனத்தினர் பெரும்பான்மையாக 53 சதவிகிதம் உள்ளனர். இவர்கள் பெரும்பாலும் சமவெளி பகுதியில் வசிக்கின்றனர். இவர்கள் பெரும்பாலும் இந்து மதத்தை சேர்ந்தவர்களாக உள்ளனர்.

மெய்திகளுக்கு அடுத்தப்படியாக நாகா இனக்குழுவினர் 24 சதவிகிதமும், குகி பழங்குடியினர் 16 சதவிகிதமும் உள்ளனர். குகி பழங்குடியினர் பெரும்பாலும் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர்களாவர். இவர்கள் பெரும்பாலும் மலைப்பகுதியில் வசித்து வருகின்றனர்.

இதனிடையே, குகிகள் பட்டியல் பழங்குடி இனத்தினர் ஆவர். அதே அந்தஸ்த்தை பெரும்பான்மையாக உள்ள மெய்தி சமூகத்திற்கு வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டுமென மாநில அரசுக்கு மணிப்பூர் ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இந்த உத்தரவால் மெய்தி சமுதாயத்தினருக்கு பழங்குடியினருக்கான அனைத்து சலுகைகளும், அரசு வேலைவாய்ப்பு, கல்வியில் இடஒதுக்கீடு கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டது. மேலும் மலைப்பகுதிகளில் நிலம் வாங்கவும் மெய்திகளுக்கு வாய்ப்பு உருவாகியது.

இதனால், தங்கள் நிலம், கல்வி, வேலைவாய்ப்பு பறிபோகும் என பழங்குடியின சமூகமான குகி மத்தியில் பதற்றம் ஏற்பட்டது. இதன் வெளிப்பாடாக கடந்த மே 3 ம் தேதி மணிப்பூர் அனைத்து பழங்குடி மாணவர்கள் சங்கம், பழங்குடி ஆதரவு பேரணிக்கு அழைப்பு விடுத்தது. பேரணி தொடக்கத்தில் அமைதியாக நடைபெற்ற நிலையில் அது பின்னர் வன்முறையாக மாறியது.

இதனிடையே, மெய்தி மக்கள் அதிகம் வசிக்கும் சமவெளி பகுதியான இம்பால் பள்ளத்தாக்கு பகுதியில் குகி பழங்குடியினர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலையடுத்து மெய்திகளுக்கும், குகிகளுக்கும் இடையே வன்முறை வெடித்தது.

வன்முறை சம்பவங்கள் அதிகரித்த நிலையில் மணிப்பூர் ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை சுப்ரீம் கோர்ட்டு நிறுத்தி வைத்தது. ஆனாலும், இந்த வன்முறை 3 மாதங்களாக நீடித்து வரும் நிலையில் இரு தரப்பிலும் வீடுகள், கடைகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளன. இந்த வன்முறையில் இதுவரை 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வன்முறையை கட்டுப்படுத்த துணை ராணுவம் மணிப்பூர் விரைந்துள்ளது.

பாதுகாப்பு படையினர் களமிறக்கப்பட்டுள்ளபோதும் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த இனக்கலவரத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அரங்கேறி வருகிறது. மணிப்பூரில் வன்முறை சம்பவங்கள் தொடங்கியது முதல் இணையதள சேவையை மாநில அரசு துண்டித்தது. தற்போது வன்முறை சம்பவங்கள் மெல்ல கட்டுக்குள் வரத்தொடங்கியுள்ள நிலையில் பல பகுதிகளில் இணையதள சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

பெண்கள் நிர்வாணமாக அழைத்து செல்லப்பட்ட கூட்டு பாலியல் வன்கொடுமை, கொடூரம்:

இந்நிலையில், மணிப்பூர் வன்முறையின் போது 2 பெண்கள் நிர்வாணமாக அழைத்து செல்லப்பட்டு ஆண்கள் கும்பலால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வீடியோ கடந்த சில நாட்களுக்கு முன் சமூகவலைதளத்தில் பரவி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் மணிப்பூரின் கங்பொக்பி மாவட்டத்தில் கடந்த மே 4ம் தேதி நடைபெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக முதலில் மே18-ம் தேதி கங்பொக்பி மாவட்டம் சைகு போலீசார் 'ஜீரோ' எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் நிர்வாணமாக அழைத்து செய்யப்பட்ட 2 பெண்களில் ஒரு பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெண்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை, கொலை

இதனிடையே, இந்த சம்பவம் நடந்த மறுநாளான மே 5ம் தேதி 2 இளம்பெண்கள் கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கங்பொக்பி மாவட்டத்தை சேர்ந்த 2 இளம்பெண்கள் இம்பால் நகரில் உள்ள கார் சுத்தப்படுத்தும் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர். அவர்கள் வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில் கடந்த மே 5ம் தேதி இரு இளம்பெண்களையும் கடத்தி சென்ற கும்பல் அவர்கள் வேலை செய்து வரும் நிறுவனத்தில் வைத்து இருவரையும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக கொல்லப்பட்ட இளம்பெண்களில் ஒவருவரின் தாயார் சாய்கு போலீஸ் நிலையத்தில் கடந்த மே 5ம் தேதி புகார் அளித்துள்ளார். ஆனால், இந்த புகார் தொடர்பாக மே 16ம் தேதி தான் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது.

போலீசார் பதிந்துள்ள முதல் தகவல் அறிக்கையில், வாடகை வீட்டில் வசித்து வந்த 21 மற்றும் 24 வயது இளம்பெண்களை வீடு புகுந்து மெய்தி சமூக இளைஞர் அமைப்பு உள்ளிட்ட அமைப்பை சேர்ந்த இளைஞர்கள் கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

போலி செய்தி மற்றும் வதந்தி:

இந்நிலையில், மே4ம் தேதி சம்பவமான நாட்டையே உலுக்கிய பெண்கள் நிர்வாணமாக அழைத்து செல்லப்பட்டு பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் வதந்தி, போலிச்செய்தியால் அரங்கேறியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், மேலும் சில போலி, வதந்தி செய்திகளால் வன்முறை சம்பவங்களும் அரங்கேறியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக பாதுகாப்புத்துறையின் மூத்த அதிகாரிகள் கூறியதாவது, மணிப்பூரின் சர்சந்த்பூரில் பழங்குடியினத்தவர்களால் பெண் கொல்லப்பட்டுள்ளதாகவும் அந்த பெண்ணின் உடல் பாலிதீன் கவரில் சுற்றப்பட்டுள்ளதாகவும் வீடியோ சமூகவலைதளம் மூலம் இம்பால் பள்ளத்தாக்கு முழுவதும் பரப்பப்பட்டுள்ளது. இந்த வீடியோவை தொடர்ந்தே 2 பெண்கள் நிர்வாணமாக அழைத்து சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால், சர்சந்த்பூரில் பழங்குடியினரால் கொல்லப்பட்டதாக பரப்பப்பட்ட வீடியோ போலியானது என்பது தெரியவந்துள்ளது. அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ள பெண் கொலை டெல்லியில் அரங்கேறிய சம்பவமாகும்.

டெல்லியில் அரங்கேறிய சம்பவத்தை சர்சந்த்பூரில் அரங்கேறிய சம்பவமாக போலியாக சித்தரித்து சமூகவலைதளத்தில் பரப்பியுள்ளனர். இந்த போலி வீடியோவால் 2 பெண்கள் நிர்வாணப்படுத்தி பாலியல் அத்துமீறலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் நடந்த அதேநாளில் இம்பால் நகரில் உள்ள கார் சுத்தப்படுத்தும் நிறுவனத்தில் வேலை செய்து வந்த கங்பொக்பி மாவட்டத்தை சேர்ந்த 2 இளம்பெண்களை மெய்தி இனத்தை சேர்ந்தவர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளனர்.

போலி செய்திகள், வீடியோக்கள் சமூக வலைதளங்கள் மூலம் பரவுவதை தடுக்க மே3ம் தேதி மாநிலத்தின் பல பகுதிகளில் மணிப்பூர் அரசு இணையதள சேவையை துண்டித்துள்ளது. போலி மற்றும் ஒரு சார்பு செய்திகளாலேயே மணிப்பூரில் தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருவதாக பாதுகாப்புத்துறையின் மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

போலிச்செய்தி, வதந்தியால் பரவிய வன்முறை சம்பவங்கள்

மணிப்பூரின் பிரபலமான செய்தித்தாள் நிறுவனம் கூட போலி அல்லது ஒரு சார்பு செய்தி வெளியிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, சந்டெல் மாவட்டம் குவிதா கிராமத்தில் உள்ள பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்தவர்கள் மீது ஆயுதங்களுடன் பழங்குடியினத்தவர்கள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக செய்தித்தாளில் செய்தி வெளியாகியுள்ளது.

இந்த செய்தியால் விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார் செய்தித்தாளில் வெளியான செய்தி போலியானது என்பதை கண்டுபிடித்தனர். மேலும், பல கிராமங்களை தீ வைத்து எரிக்க முயற்சிகள் நடைபெறுவதாக உள்ளூர் செய்தித்தாள்கள் செய்தி வெளியிட்ட நிலையில் அவை போலியானவை என போலீசார் அறிக்கை வெளியிட்டுள்ளனர். மேலும், உண்மையான, ஆதாரப்பூர்வமான செய்திகளை மட்டுமே வெளியிடும்படி செய்தி நிறுவனங்களுக்கு போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அதேபோல், பழங்குடியின சமூக இளைஞர்கள் சர்சந்த்பூர் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் பேரணியாக சென்ற வீடியோ சமூகவலைதளத்தில் வெளியானது. அந்த வீடியோவின் மொழிப்பெயரிப்பில் பெரும்பான்மை சமூகத்தின் பெண்கள், குழந்தைகளை பழங்குடியினர் கொள்ளையடிக்க வருகின்றனர் என எழுதப்பட்டிருந்தது.

ஆனால், அந்த வீடியோவில் குகி - சின் பகுதி மக்கள் பெரும்பாலும் பேசும் மிசோ மொழி இடம்பெற்றிருந்ததால் சில சமூக விரோதிகள் வீடியோவை மெய்தி இன மக்களுக்கு எதிரான வீடியோவாக போலியாக சித்தரித்து இம்பால் பள்ளத்தாக்கு முழுவதும் பரப்பியுள்ளனர்.

வீடியோவில் உண்மையில் குகி பழங்குடியின மக்கள் தங்களுக்கு தனியே நிர்வாக அமைப்பு வேண்டும் என்ற பதாகையுடன் கோஷம் எழுப்பிய நிலையில் அதை பெரும்பான்மை சமூக பெண்களை கொள்ளையடிக்க வருவதாக எழுதப்பட்டிருப்பது போன்று போலியாக சித்தரித்து சமூகவலைதளத்தில் வீடியோ பரப்பப்பட்டுள்ளது.

அதேபோல், கொங்க்பா மரு லிம்ப்ஹல்மென் பகுதியில் உள்ள பெரும்பான்மை சமூகத்தின் மத வழிபாட்டு தலத்தை பழங்குடியின மக்கள் தீ வைத்து எரித்ததாக சமூகவலைதளம் மூலம் இம்பால் பள்ளத்தாக்கில் செய்திகள் பரப்பப்பட்டன. ஆனால், இந்த செய்தி போலியானது என்பதை உறுதி செய்த போலீசார் பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்த தலைவர்கள் சிலரை சம்பவம் நடந்ததாக கூறப்படும் இடத்திற்கு நேரில் அழைத்து சென்ற போலீசார் தாக்குதல் சம்பவம் எதுவும் நடைபெறவில்லை என்பதையும் மத வழிபாட்டு தலம் பாதுகாப்பாக உள்ளது என்பதையும் உறுதிபடுத்தினர்.

இதேபோல், மற்றொரு வீடியோவில் சில உடல்கள் தெருக்களில் கிடப்பது போன்றும் அதில் பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்த நபர்கள் பழங்குடியின சமூகத்தினரால் கொல்லப்பட்டதாவும் சித்தரித்து வீடியோ வெளியிடப்பட்டிருந்தது. கும்பலான ஆண்களால் 2 பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான சம்பவம் தொடர்பான வீடியோ வெளியான பின்னர் இந்த வீடியோ வெளியானது.

பெரும்பான்மை சமூகத்தினர் பழங்குடியின சமூகத்தினரால் கொல்லப்பட்டதாக வீடியோ வெளியாகியது. ஆனால், உண்மையில் இரு சமூகத்திற்கும் இடையே மோதல் நடைபெற்றுள்ளது. மலைப்பகுதியில் உள்ள பழங்குடியின சமூகத்தை சேர்ந்த கிராமத்தை பெரும்பான்மை சமூகத்தினர் தீ வைத்து எரிக்க முயற்சித்துள்ளனர். அப்போது இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் பெரும்பான்மை சமூகத்தினர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

வன்முறையின் தொடக்க காலத்தில் இளம்பெண் கடுமையாக தாக்குதலுக்கு உள்ளாகப்பட்டு இறுதியில் சுட்டுக்கொல்லப்படுவது போன்ற வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது. அந்த வீடியோவில் சுட்டுக்கொல்லப்பட்ட பெண் பழங்குடியின சமூகத்தை சேர்ந்தவர் என்றும் அவரை பெரும்பான்மை சமூகத்தினர் சுட்டுக்கொன்றதாகவும் சமூகவலைதளத்தில் வீடியோ பரப்பப்பட்டது.

ஆனால், உண்மையில் அந்த வீடியோ போலியானது என்பது தெரியவந்துள்ளது. அந்த சம்பவம் மியான்மர் நாட்டின் தமு நகரில் நடைபெற்றது என்பதும், மியான்மரில் நடந்த இனப்படுகொலையின் போது அந்த பெண் கொல்லப்பட்டதும் தெரியவந்துள்ளது.

முன்னதாக, இம்பால் பள்ளத்தாக்கில் இருந்து சில பழங்குடியின மக்கள் போலீஸ் பாதுகாப்புடன் வெளியேற்றப்படுவதாக பரவிய போலி வீடியோவால் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரலின் அணிவகுப்பு வாகனத்தை கும்பல் தீவைத்து எரித்தது. இந்த சம்பவம் தொடர்பான நபர்களை போலீசார் கைது செய்தனர்.

அதேபோல், தங்கள் சமூகத்தை சேர்ந்த பெண்ணை பழங்குடியின சமூகத்தினர் தாக்குவது போன்ற புகைப்படத்தை காட்டி மணிப்பூர் தலைநகர் இம்பாலில் பெரும்பான்மை சமூகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், அந்த புகைப்படம் போலியானது என்பதும் அது அருணாச்சலபிரதேசத்தில் குடும்ப வன்முறை காரணமாக பெண் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

ஒட்டுமொத்தமாக போலி மற்றும் வதந்தி செய்திகளால் மணிப்பூரில் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


Next Story