நபிகள் நாயகம் குறித்த சர்ச்சை: விரிவான ஆலோசனை நடத்த ஆர்.எஸ்.எஸ் முடிவு!


நபிகள் நாயகம் குறித்த சர்ச்சை: விரிவான ஆலோசனை நடத்த ஆர்.எஸ்.எஸ் முடிவு!
x

அடுத்த மாதம் ஜெய்ப்பூரில் நடைபெறும் கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் முக்கிய தலைவர்கள் பங்கேற்று ஆலோசிக்க உள்ளனர்.

ஜெய்ப்பூர்,

ஞானவாபி மசூதி விவகாரம் உள்ளிட்டவை குறித்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பு அடுத்த மாதம் விரிவான ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாஜக செய்தித்தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா, நபிகள் நாயகம் பற்றி சர்ச்சை கருத்து தெரிவித்து இருந்தார். இதற்கு சர்வதேச அளவில் கண்டனம் வலுத்த நிலையில், அவர் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.

இருப்பினும் அவரது இந்த கருத்து பாஜக அரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இதுதவிர கோயில்களை இடித்து மசூதிகள் கட்டப்பட்டுள்ளதாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் குற்றம்சாட்டி வருவதால், வடமாநிலங்களில் வன்முறை சூழல் நிலவுகிறது.

இது தொடர்பாக, ஆர்.எஸ்.எஸ் முக்கிய நிர்வாகி ஒருவர் கூறுகையில், "முஸ்லீம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரைச் சென்றடைய சங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. சமூகங்களுக்கிடையில் பகிரப்பட்ட கலாச்சார மற்றும் நாகரீக உறவுகளை வலுப்படுத்த எங்கள் அமைப்பு, ஒரு ஒருங்கிணைந்த முயற்சியை மேற்கொண்டு வருகிறது.

நம் அனைவரிடமும் பொதுவான மரபணு தான் உள்ளது என்பதை நினைவில் கொள்ளவேண்டும். இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் தங்களை வெளிநாட்டிலிருந்து வந்தவர்களாக அடையாளப்படுத்திக் கொள்ளக்கூடாது என்ற கருத்தை மோகன் பகவத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்" என்று அவர் கூறினார்.

இந்த நிலையில் இந்த பிரச்சினைகள் குறித்து விரிவாக விவாதித்து, உரிய அறிவுரை வழங்க ஆர்.எஸ்.எஸ் திட்டமிட்டுள்ளது. அதன்படி அடுத்த மாதம் ஜெய்ப்பூரில் நடைபெறும் கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் முக்கிய தலைவர்கள் பங்கேற்று ஆலோசிக்க உள்ளனர்.


Next Story