மராட்டியத்தில் நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேரை துப்பாக்கியால் சுட்டு ரூ.1¾ கோடி நகைகள் கொள்ளை


மராட்டியத்தில் நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேரை துப்பாக்கியால் சுட்டு ரூ.1¾ கோடி நகைகள் கொள்ளை
x

மராட்டியத்தில் நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேரை துப்பாக்கியால் சுட்டு ரூ.1¾ கோடி நகைகளை கொள்ளையடித்து கொண்டு தப்பி சென்றதாக தெரியவந்தது.

மராட்டிய மாநிலம் கோலாப்பூரில் இருந்து 7 கி.மீ தொலைவில் ககன்பவ்டா சாலை பாலிங்கா பகுதியில் காத்யானி ஜூவலர்ஸ் என்ற நகைக்கடை உள்ளது. இந்த நகைக்கடையில் நேற்று உரிமையாளர் ரமேஷ் மாலி மற்றும் உறவினர் ஜித்து மோரியாஜி, சிறுவன் பியூஷ் (வயது13) ஆகியோர் இருந்தனர். மதியம் 2 மணி அளவில் 2 மோட்டார் சைக்கிளில் 4 பேர் வந்து இறங்கினர். அவர்கள் அதிரடியாக நகைக்கடைக்குள் நுழைந்து தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியை காட்டி மிரட்டினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தபோது உரிமையாளர் ரமேஷ் மாலியை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதனை கண்ட உறவினர் ஜித்து மோரியாஜி தடுக்க முயன்றார். அவரையும் அக்கும்பல் துப்பாக்கியால் சுட்டது.

சம்பவத்தை நேரில் கண்டு அதிர்ச்சியில் உறைந்து போய் நின்ற சிறுவனையும் அக்கும்பல் விட்டு வைக்கவில்லை. அவனையும் துப்பாக்கியால் சுட்டு விட்டு கடையில் இருந்த நகைகளை பையில் போட்டு நிரப்பினர். பின்னர் அங்கிருந்து வெளியேறிய போது கும்பலை அக்கம் பக்கத்தினர் தடுக்க முயன்றனர். அக்கும்பலினர் துப்பாக்கியை காட்டி மிரட்டி மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர். தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று துப்பாக்கி சூட்டில் காயமடைந்த 3 பேரையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், நகைக்கடையில் இருந்து ரூ.1 கோடியே 80 லட்சம் நகைகள், ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளையடித்து கொண்டு தப்பி சென்றதாக தெரியவந்தது. இதனை தொடர்ந்து கொள்ளையர்களை பிடிக்க கண்காணிப்பு கேமரா மூலம் ஆய்வு செய்து கும்பலை பிடிக்க தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story