மைசூருவில் கார் மோதி பலியான வழக்கில் ஓய்வு பெற்ற உளவு பிரிவு அதிகாரி திட்டமிட்டு கொலை


மைசூருவில் கார் மோதி பலியான வழக்கில் ஓய்வு பெற்ற உளவு பிரிவு அதிகாரி திட்டமிட்டு கொலை
x

மைசூருவில், கார் மோதி பலியான ஓய்வு பெற்ற உளவு பிரிவு அதிகாரி திட்டமிட்டு கொலை செய்யப்பட்டதாக போலீஸ் கமிஷனர் சந்திரகுப்தா தெரிவித்துள்ளார்.

மைசூரு:

ஓய்வு பெற்ற உளவுப்பிரிவு அதிகாரி

மைசூருவை சேர்ந்தவர் குல்கர்னி(வயது 82). ஓய்வு பெற்ற உளவுப்பிரிவு அதிகாரியான இவர், தினமும் மாைலயில் நடைப்பயிற்சி செல்வது வழக்கம். அதன்படி கடந்த 4-ந்தேதி மாலை தனியாக நடைப்பயிற்சி சென்று கொண்டிருந்தார்.

மைசூரு பல்கலைக்கழகம் மானஷா கங்கோத்திரி வளாகம் அருகே வந்தபோது, திடீரென்று அந்த வழியாக வந்த கார் ஒன்று இவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த குல்கர்னி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து மைசூரு நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

சந்தேகம்

இதற்கிடையே விபத்து நடந்த இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அந்த காட்சிகள் அடிப்படையில் குல்கர்னி மீது மோதிய கார், கட்டுப்பாட்டை இழந்து மோதவில்லை என்றும், ஏற்கனவே திட்டமிட்டு காரை, அவர் மீது மோதவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் திட்டமிட்டு யாரோ மர்மநபர்கள், அவரை கொலை செய்திருப்பதாக சந்தேகம் எழுந்தது.

திட்டமிட்டு கொலை

இதுகுறித்து மைசூரு மாநகர போலீஸ் கமிஷனர் சந்திர குப்தா கூறியதாவது:-

'ஓய்வு பெற்ற உளவு பிரிவு அதிகாரி குல்கர்னி சாவு, ஆரம்பத்தில் ஒரு விபத்து என்று நாங்கள் கருதினோம். ஆனால் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்க்கும்போது திட்டமிட்ட கொலை என்று முடிவி செய்தோம். குறுகிய பாதையில் கார் வேகமாக சென்றுள்ளது. குறுகலான பாதையை கார் டிரைவர்கள் அரிதாகவே பயன்படுத்துகின்றனர். மேலும் காரில் வந்தவர் குல்கர்னியை பின்தொடர்ந்து வந்ததுபோல் தெரிகிறது. அந்த காரில் பதிவெண் பலகையும் இல்லை. இதனால் அவர், திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இதில் தொடர்புடையவர்களை கண்டுப்பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது' என்றார்.


Next Story