அதிகார பசிக்காக நாட்டை பிளவுப்படுத்த ராகுல்காந்தி பாதயாத்திரை; மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி குற்றச்சாட்டு


அதிகார பசிக்காக நாட்டை பிளவுப்படுத்த ராகுல்காந்தி பாதயாத்திரை; மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி குற்றச்சாட்டு
x

அதிகார பசிக்காக நாட்டை பிளவுப்படுத்த ராகுல்காந்தி பாதயாத்திரை மேற்கொள்வதாக மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

பெங்களூரு:

பெங்களூரு அருகே தொட்டபள்ளாப்புராவில் நடந்த பா.ஜனதா அரசின் சாதனை விளக்க மாநாட்டில் மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி பேசியதாவது:-

ரூ.37 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

மத்தியில் பா.ஜனதா அரசு அமைந்த பின்பு எந்த மாநிலத்திற்கும் பாரபட்சம் பார்க்காமல் நிதி ஒதுக்கி வருகிறது. இதற்கு முன்பு கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சியில் இருந்த போது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ், கர்நாடகத்திற்கு வெறும் ரூ.2 ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கி இருந்தது. தற்போது மத்தியிலும், மாநிலத்திலும் பா.ஜனதா ஆட்சி நடக்கிறது. இதனை தான் பிரதமர் மோடி இரட்டை என்ஜின் அரசு என்று கூறி வருகிறார்.

தற்போது மத்திய அரசு, கர்நாடகத்திற்கு ரூ.5 ஆயிரம் கோடி ஒதுக்கி உள்ளது. கர்நாடகத்தில் சாலைகள் அமைக்கும் பணிக்காக ரூ.9,700 கோடியை ஒதுக்கி உள்ளது. பெங்களூரு புறநகர் ரெயில் திட்டத்திற்காக ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டு இருக்கிறது. ஒட்டுமொத்தமாக கர்நாடகத்திற்கு ரூ.37 ஆயிரம் கோடியை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது.

அதிகார பசிக்காக...

ராகுல்காந்தி, பாரத் ஜோடா என்ற பெயரில் இந்திய ஒற்றுமை பயணத்தை தொடங்கி இருப்பதாக தெரிவித்துள்ளார். இது எனக்கு மிகுந்த அதிர்ச்சியை கொடுத்தது. இந்தியாவை பிளவுப்படுத்தும் நோக்கத்தில் ராகுல்காந்தி பாதயாத்திரை தொடங்கி இருக்கிறார். அவரது பாதயாத்திரை இந்தியாவுக்கு எதிரானதாகும். அதிகார பசிக்காக இந்த பாதயாத்திரையை ராகுல்காந்தி நடத்துகிறார்.

இந்தியாவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியவர்களை பாதயாத்திரையில் சேர்த்துள்ளனர். இது தேசத்துரோகத்திற்கு சமமானது. மும்பையில் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதி யாகூப் சமாதி பளிங்கு கற்களால் அலங்கரிக்கப்பட்டு இருக்கிறது. கொரோனாவுக்கு எதிரான போரில் நமது நாட்டிலேயே தடுப்பூசி தயாரிக்கப்பட்டது. இதற்கு எதிராக காங்கிரசார் மக்களிடம் பிரசாரம் செய்திருந்தாா்கள்.

இவ்வாறு ஸ்மிரிதி இரானி கூறினார்.


Next Story