தங்கும் விடுதியில் விபசாரம்; 2 பேர் கைது
உப்பள்ளியில் தங்கும் விடுதியில் விபசாரம் நடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
உப்பள்ளி:
தார்வார் மாவட்டம் உப்பள்ளி உபநகர் போலீஸ் எல்லைக்குட்பட்ட கித்தூர் ராணி சன்னம்மா சர்க்கிள் பகுதியில் தனியார் தங்கும் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த தங்கும் விடுதியில் பெண்களை வைத்து விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் போில் உப்பள்ளி உபநகர் போலீசார் அந்த தங்கும் விடுதிக்கு விரைந்து சென்று அங்குள்ள அறைகளில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு விபசாரம் நடப்பது தெரியவந்தது.
இதையடுத்து அங்கிருந்த அறை ஒன்றில் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 2 பெண்களை மீட்டனர். மேலும் விடுதியில் விபசாரம் நடத்தி வந்த விடுதியின் உரிமையாளர் சுபாஷ் மற்றும் மேலாளர் அரவிந்த் ஆகியோரை கைது செய்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையே போலீஸ் நிலையத்தில் வைத்து கழிவறைக்கு சென்றுவிட்டு வருவதாக கூறி 2 பெண்களும் தப்பியோடிவிட்டனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.