தேசிய இளைஞர் திருவிழாவில் வீரசாகசங்களை கண்டு களித்த பிரதமர் மோடி; மாணவிகளின் உற்சாக பேட்டி


தேசிய இளைஞர் திருவிழாவில் வீரசாகசங்களை கண்டு களித்த பிரதமர் மோடி; மாணவிகளின் உற்சாக பேட்டி
x
தினத்தந்தி 12 Jan 2023 1:35 PM GMT (Updated: 12 Jan 2023 1:39 PM GMT)

கர்நாடகாவில் தேசிய இளைஞர் திருவிழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டது பற்றி மாணவிகள் உற்சாக பேட்டி அளித்து உள்ளனர்.



ஹப்பள்ளி,


கர்நாடகாவில் ஹப்பள்ளி நகரில் 2023-ம் ஆண்டுக்கான 26-வது தேசிய இளைஞர் திருவிழா இன்று நடைபெறுகிறது. சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெறும் இந்த விழாவை தொடங்கி வைத்து, நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பிரதமர் மோடி திறந்த காரில் சாலை வழியே பேரணியாக சென்றார்.

அவர் சென்ற வழிநெடுகிலும் மக்கள் திரண்டு வந்து அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். தேசிய இளைஞர் திருவிழாவில் மல்லகம்பம் என்ற இளைஞர்கள் மற்றும் சிறுமிகள் பங்கேற்ற வீரசாகச நிகழ்ச்சியும் நடந்தது.

பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்வை காண மாணவிகளும் பெருமளவில் வந்துள்ளனர். அவர்கள் உற்சாக பேட்டியளித்து உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவிகளில் பிரேர்ணா என்பவர் கூறும்போது, ஒவ்வொரு சிறுமியும் நிதி சார்ந்து சுதந்திரமுடன் செயல்பட்டு, தனது குடும்ப பொறுப்புகளை கையிலெடுக்க வேண்டும் என்ற செய்தியை பிரதமர் மோடி பகிர வேண்டும் என நான் விரும்புகிறேன் என்று தெரிவித்து உள்ளார்.

இதில், ஸ்ரீதேவி என்ற மாணவி அளித்த பேட்டியின்போது, நாட்டுக்கு நல்ல பல பணிகளை பிரதமர் மோடி செய்துள்ளார். முதன்முறையாக அவரை பார்ப்பதில் நான் அதிகம் மகிழ்ச்சி அடைகிறேன்.

பெற்றோர் தங்களது பய உணர்வை களைந்து, பிற நகரங்களுக்கு தங்களது குழந்தைகளை படிக்க அனுப்ப வேண்டும் என்ற செய்தியை பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் பகிர வேண்டும் என நான் விரும்புகிறேன் என்று தெரிவித்து உள்ளார்.

இதேபோன்று ஸ்ரவானி என்ற மாணவி கூறும்போது, பிரதமர் மோடி எங்களது பூமிக்கு வருகை தந்துள்ளார். நான் அதிக மகிழ்ச்சியாய் இருக்கிறேன். அவர் ஒரு தேசிய சின்னம்.

சுவாமி விவேகானந்தரின் ஒழுக்கநெறி மற்றும் யோகா, நேர மேலாண்மையில் திறமை படைத்த பிரதமர் மோடி ஆகியோரை எடுத்துக்காட்டாக எடுத்து கொள்ள நான் விரும்புகிறேன் என அவர் கூறியுள்ளார்.




Next Story